பழையசீவரம் ஜி காளிதாஸ்... 
கல்கி

பரம்பரை நாகஸ்வரக் கலைஞர்கள் நல்லிசை நல்கும் இளைஞர்கள் மூவரைச் சந்திப்போமா?

அனுராதா கண்ணன்

சை விழாக்களில் வாத்தியக் கச்சேரிகளுக்கு  அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா? ரசிகர்களும் எந்த அளவிற்கு வாத்தியக் கச்சேரிகளை விரும்பிக் கேட்க அரங்கில் கூடுகிறார்கள்? போன்ற கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டுதான் வருகின்றன.

வாத்திய இசையை ரசிக்க மொழி ஒரு தடையில்லை என்பதால் மொழி அறியாதவர்கள் கூட இசை என்னும் மொழியை ரசிக்கிறார்கள். இதனாலேயே மேலைநாட்டினர் வாத்திய இசையை பெரிதும் விரும்பிக் கேட்க வருகிறார்கள் என்பது வாத்தியக் கலைஞர்களின் கூற்று.

நாகஸ்வரம் என்று எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் கோயில்களில் தெய்வத்திற்கு வாசிக்கும் பெரும்பேற்றைப் பெறுகிறார்கள் இந்தக் கலைஞர்கள். எந்த ஒரு இசை, கலை விழாக்களிலும் மங்கலமாக நிகழ்ச்சியைத் தொடங்க நாகஸ்வரத்திற்கு முதலிடம் வழங்கப்படுகிறது. திருமணங்களில் வாசிக்கப் பல வாய்ப்புகள். ஆனாலும் சபா கச்சேரிகள் என்று வரும்போது வாய்ப்புகள் குறைவான அளவிலேயே உள்ளன.

அப்படியிருக்க, நாகஸ்வரத்தை முறைப்படி கற்று அதைத் தம் முழுநேரத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பொருளாதார ரீதியாக பெரிய வெற்றி என்று இல்லாவிட்டாலும் தலைமுறை தலைமுறையாக ஆசையோடு இவ்வாத்தியத்தை இசைக்கும் குடும்பங்களைச் சேர்ந்த நாகஸ்வரக் கலைஞர்கள் மூவரை இங்கு சந்திப்போம்.

 பழையசீவரம் ஜி காளிதாஸ்:

நான்கு தலைமுறைகளாக நாகஸ்வரம் இசைக்கும் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய முப்பாட்டனார் பழையசீவரம் நாராயணசாமி அவர்களைத் தங்களது ‘நாகஸ்வரக் குலதெய்வம்’ என்று குறிப்பிடும் காளிதாஸ், அவரது பாட்டனார் பழையசீவரம் பிஏ பாபு அவர்களிடம் தமது எட்டாவது வயதில் ஒரு விஜயதசமி அன்று நாகஸ்வர இசையை கற்கத் தொடங்கினார். இவருடைய தந்தை  நாகஸ்வர வித்வான் பழையசீவரம் பிபி ஞானசுந்தரம், சிறிய தகப்பனார் பழையசீவரம் பிபி ரவிச்சந்திரன் என்று குடும்பத்தில் பலரும் தலைமுறை தலைமுறையாக நாகஸ்வர, தவில் இசைக்கலையில் சேவை செய்பவர்கள். காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரம், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி தேவஸ்தானம் இவர்கள் குடும்பத்தினர் சேவை செய்து வரும் கோயில். கோயில் கல்வெட்டில் இதற்கான குறிப்பு இருப்பதாக சொல்கிறார் காளிதாஸ்.

பழையசீவரம் ஜி காளிதாஸ்

பெற்றோர்களைக் காட்டிலும் தன் பாட்டனாருடன்தான் பெரும்பாலும் தன் நேரத்தை செலவிட்டிருப்பதாகக் கூறும் காளிதாஸ், பள்ளி நேரம் போக மற்ற பொழுதுகளை தாத்தாவுடன்தான் கழித்திருக்கிறார்; நிறைய கற்றிருக்கிறார். தாத்தாவைப் பற்றிக் கூறும்போது, ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டு பத்து நிமிடம் வாசித்தால், அந்த 10 நிமிடங்களுக்குள் அந்த ராக ஸ்வரூபத்தை முழுவதுமாக நம் கண் முன் நிறுத்துவார் என்றும் அவர் மாதிரி வாசிக்க, தான் இன்று வரை முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.

தாத்தாவை முதல் குருவாகக் கொண்டு நாகஸ்வரம் பயின்றவர், காஞ்சிபுரம் அரசு இசைக்கல்லூரியில் நாகஸ்வரத்தை முக்கியப் பாடமாக எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் நாகஸ்வரத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். தேசூர் டிஎஸ்டி செல்வரத்தினம், செங்கல்பட்டு வி முத்துகிருஷ்ணன், வியாசர்பாடி ஜி கோதண்டராமன் ஆகியோர்களைக் குருமார்களாகக் கொண்டு தம் வாசிப்பை மேம்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.

வீணை, மாண்டலின், புல்லாங்குழல், வயலின் இசைத்த மகாவித்வான்களின் இசையை நிறைய கேட்பதாகவும், எம் எஸ் அம்மா, மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் சங்கீதம் தம்மை மிகவும் ஈர்ப்பதாகவும் கூறும் இவர், தன் வாசிப்பில் அவர்களுடைய சங்கீதத்திலிருந்து என்ன கொண்டு வரமுடியும் என்று தொடர்ந்து முயற்சிப்பதாக கூறுகிறார்.

ராகங்களை விறுவிறுப்பாக வாசிப்பது இவர்களுடைய பாணியின் சிறப்பு. 108 ராகங்களை அரைமணி நேரத்தில் வாசித்து ஒரு வீடியோ பதிவு செய்திருக்கிறார். ஒரு கச்சேரியில் ‘பந்துவராளி’ ராகத்தை மத்யம ஸ்ருதியில் பிரதானமாக வாசித்து அனைவரிடமும் பாராட்டு பெற்றதையும், இலங்கையில் புகழ்பெற்ற நாகஸ்வரக் கலைஞர்கள், நல்லூர் பாலமுருகன், குமரன் பஞ்சமூர்த்தி ஆகியோருடன் நாகஸ்வரம் வாசித்ததையும் மறக்க முடியாத அனுபவங்களாகப் பகிர்ந்துகொண்டார்.

 கோயில்களில் அர்த்தஜாம பூஜைகளின்போது வாசிப்பது ‘முகவீணை’ என்று அழைக்கப்படும். நவராத்திரியின் போது சர்வ வாத்தியங்களோடு சேர்ந்து கோயில்களில் மட்டுமே இசைக்கக்கூடிய வாத்தியம் இது. அவர் தாத்தா பயன்படுத்திய முகவீணையை அவர்கள் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாத்து, அவருடைய தாத்தா, அப்பாவிற்கு பிறகு அவரும் கோயிலில் நவராத்திரி விழாவில் வாசித்து வருகிறார்.

 ‘கலைவளர் மணி’ தமிழக அரசால் இவருக்கு வழங்கப்பட்ட பட்டம். காஞ்சிபுரம் காமகோடி பீட ஆஸ்தான வித்வானாகவும் இவர் இருந்து வருகிறார்.

திருக்கடையூர் உமாசங்கர்:

இவருடைய தந்தை நாகஸ்வர வித்வான் கலைமாமணி டி எஸ் முரளிதரன். தமது ஊரில் நடைபெறும் திருவிழாக்களில் நாகஸ்வர, தவில் இசை நிகழ்ச்சிகளைக் கேட்டு, அதில் ஆர்வம் அதிகரித்துத் தமது 13-ஆவது வயதில் தந்தையை முதல் குருவாகக் கொண்டு பயிற்சியைத் தொடங்கியவர் உமாசங்கர். தமது திறமையை மேம்படுத்திக்கொள்ள திருப்பாம்புரம் சகோதரர்கள் கலைமாமணி டி.கே. சுவாமிநாதன், டி கே எஸ் மீனாட்சி சுந்தரம் ஆகியோரிடம் இரண்டு வருட காலமும், கலைமாமணி கீழ்வேளூர் என் ஜி கணேசப்பிள்ளை அவர்களிடம் இரண்டு ஆண்டு காலமும் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். கலை நுணுக்கங்களை தமது தந்தையிடமிருந்தும், கல்யாணபுரம் திரு கே ஜி சீனிவாசன் மற்றும் கிளாரினெட் எவரெஸ்ட் எனப் போற்றப்படும் ஏ கே சி நடராஜன் அவர்களையும் நாடி கற்றிருக்கிறார். மூத்த தவில் வித்வான்கள் பலருடனும் தமது இசைப் பயணத்தில் இணைந்து வாசித்திருக்கிறார்.

ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், ஏ கே சி நடராஜனுடன் உமாசங்கர்

இவருடைய தாத்தா திருக்கடையூர் டி பி சுப்புடு பிள்ளை. அவருடைய மூத்த சகோதரர் திருக்கடையூர் டி பி  கோவிந்தராஜ். “நான் நாகஸ்வரம் இசைக்கத் தூண்டுதலாக இருந்தது எனது தாத்தா சுப்புடுப்பிள்ளை அவர்கள் தான். அவர் வயதானபிறகு அவர் வாசித்து நான் கேட்டிருக்கிறேன். சகோதரர்கள் இருவரும் சேர்ந்து வாசித்தால் நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் இணைந்தாற்போல இருக்குமாம். ராகம் அமைப்பு, பிருகாக்கள், விரல் அடிகள் என வாசிப்பு அனைவரையும் கட்டிப்போட்டு விடுமாம். பெரியோர்கள் பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.”

 “எனது முதல் அரங்கேற்றம் என் அண்ணன் கௌரிசங்கர் அவர்களுடன்  நான் படித்த பள்ளியில் நடந்தது. பொறையார் சர்மிளா கார்டன்ஸ் நாங்கள் படித்த பள்ளி. நாகஸ்வரம் வாசிப்பதற்கு எனது பள்ளி முதல்வர்  பாண்டியராஜன் அவர்களும் முக்கியக் காரணம். ஆண்டுதோறும் பள்ளியில் எந்த விழா நடந்தாலும் மற்ற நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நாகஸ்வர, தவில் மங்கல இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொன்றிலும் எங்களுக்கு வாய்ப்பளித்து எங்களை ஊக்கப்படுத்தினார். சிறு வயதில் என் அண்ணனும் நானும் இணைந்து பல நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளோம். திருவையாறு தியாக பிரம்ம மகோத்ஸவத்திலும்  வாசித்துள்ளோம்.”

 மறைந்த மாமேதை வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை அவர்கள் வாசித்த நாகஸ்வரத்தை சுமார் 60 ஆண்டுகளுக்குபின் இசைக்கும் மாபெரும் பாக்கியம் சுவாமி மலை சரவணன் அவர்கள் முயற்சியால் தனக்குக் கிட்டியதைப் பெருமையாகப் பகிர்ந்தார் உமாசங்கர்.

இவருக்கு, 2020 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீன ‘ஆஸ்தான நாகஸ்வர கலாநிதி’, தருமபுரம் 27-ஆவது நட்சத்திர குரு மகா சன்னிதானம் அவர்களது திருக்கரங்களால் வழங்கப்பட்டது.

 2023 ஆம் ஆண்டு அருள்மிகு சிக்கல் சிங்காரவேலவர் சன்னிதியில் ‘நாகஸ்வர இன்பகான திலகம்’ பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

 அய்யர்மலை B. செல்வம்:

ரூர் மாவட்டம் சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் பரம்பரை பரம்பரையாக நாகஸ்வரம் இசைக்கும் குடும்பத்தில் பிறந்தவர். தாத்தா வைரப் பெருமாள், தந்தை வி. பாலசுப்ரமணியம், மூத்த சகோதரர் அசோக் சுந்தரகுமார் எனத் தொடர்ந்து நாகஸ்வரம் வாசித்து வருகின்றனர். இவரும் நாகஸ்வர இசையினால் ஈர்க்கப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

சகோதரர் அசோக் சுந்தரகுமாருடன் செல்வம்...

இவருக்கு இத்திறமை இருக்கிறது என்பதைக் கண்டவர் அவருடைய சகோதரர். குருமுகமாகக் கற்க வேண்டும் என்பதால் ‘கலை ராஜ ரத்னா’, ‘கலைப் பேரொளி’ பேட்டைவாய்த்தலை எஸ். சண்முகசுந்தரம் அவர்களிடம் தன் இளைய சகோதரரைக் கொண்டு சேர்த்திருக்கிறார். அவரிடம் ஒரு வருடம் பயிற்சி எடுத்துக்கொண்ட செல்வம், சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மூன்று வருடங்கள் நாகஸ்வர இசையில் பட்டயப் படிப்பை மேற்கொண்டார். அங்கு பேட்டைவாய்த்தலை சங்கரன் அவர்கள் இவருக்குக் குருவாக அமைந்தார். (சங்கரன் அவர்கள் சண்முகசுந்தரம் அவர்களின் சீடராவார்.) முதல் வகுப்பில் தனிச் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர் படிப்பை முடித்துவிட்டு எட்டு வருடங்கள் குருநாதருடன் இணைந்து நாகஸ்வரம் இசைத்து, இப்போது தனிக்கச்சேரிகளும் செய்து வருகிறார்.

 23 வயதே நிரம்பிய செல்வம் கர்நாடக சங்கீதப் போட்டிகள் பலவற்றில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றுகொண்டிருக்கிறார். 2019 ஆம் வருடம் அகில இந்திய வானொலி திருச்சி நிலையம் நடத்திய போட்டியில் நாகஸ்வர இசையில் முதல் பரிசை வென்ற இவருக்கு ‘B’ கிரேட் வழங்கி கௌரவித்தது திருச்சி வானொலி நிலையம். அதே வருடம் சென்னை பிரும்ம கான சபை நடத்திய 20 வயதிற்குட்பட்ட கருவி இசைப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வென்றார். 2022 ஆம் வருடம் மும்பை ஷண்முகானந்தா சபையின் எம் எஸ் பெல்லோஷிப் விருதினையும் இவர் பெற்றிருக்கிறார். 2023 ஆம் வருடம் தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை மாநில அளவில் நடத்திய போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறார். 

 2019 ஆம் வருடம் கூனம்பட்டி ஆதீனம் இவருக்கு ‘ஸ்வராம்ருத ரத்னா’ என்ற விருதை வழங்கி இருக்கிறது. 2022 ஆம் வருடம் தமிழக அரசு கலைப் பண்பாட்டுத்துறையின் ‘கலைவளர் மணி’ பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கோயில் திருவிழாக்களில் கச்சேரிகள், சபா கச்சேரிகள் என்று மிகவும் பிஸியாக இருக்கும் இளம் கலைஞர், வாய்ப்பாட்டுக் கலைஞர்களுடன் இணைந்து நாகஸ்வரம் இசைத்து வருகிறார். “அக்காலத்தில் ஐந்து கட்டை ஐந்தரை கட்டை சுருதிகளில் நாகஸ்வரம் வாசிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போதைய காலத்தில் அது குறைந்துவிட்டது. நாங்கள் மீண்டும் வாய்பாட்டுடன் இணைந்து  ஐந்து கட்டை ஸ்ருதி நாகஸ்வரம் கொண்டு  கச்சேரிகள் செய்கிறோம்”, என்கிறார் இளைஞர் செல்வம்.

கும்பகோணம் வெங்கடேஸ்வரனுடன் செல்வம்...

நாகஸ்வர சக்ரவர்த்தி டிஎன் ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் 125 ஆம் பிறந்த தினத்தை சென்ற ஆண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு டாக்டர் ஷேக் சின்ன மௌலானா அவர்களின் நூற்றாண்டு. காலம் கடந்து நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் இவர்களுடைய சங்கீதம் போல இந்த இசைக் கலைஞர்களும் புகழ்பெற்றுத் திகழ நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT