Navarathiri  
கல்கி

சிறப்பு சிறுகதை: ரமணி தாத்தாவும், நவராத்திரியும்!

நவராத்திரி நவ கட்டுரைகள் - 3

J. Vinu

சூரியன் கூட சில நாட்களில் நேரம் தவறி தாமதமாக உதிக்கும்.‌ ஆனால்‌, ரமணி தாத்தா கண் விழித்தார் என்றால் அது சரியாகக் காலை  4.30தான்.‌ ஒரு நொடி கூட‌ முன்னும் பின்னும் மாறாது.‌ அதுவும் இன்று நவராத்திரி முதல் நாள்.‌ தாத்தாவுக்கு எங்கிருந்துதான் உற்சாகம் வரும்‌ என்று தெரியாது. அவ்வளவு ஆனந்தம் பொங்கும் அவருக்கு நவராத்திரி என்றால்.

முதல் நாள் ராத்திரியே பேரன், பேத்திகளை உதவிக்கு அழைத்து பொம்மைகளை இறக்கி விடுவார். தூங்கும் முன்னரே ஒவ்வொரு பொம்மையுடன் பேசியபடியே அவற்றை துணி கொண்டு சுத்தம் செய்வார். உயரமான அம்பாள் பொம்மையிடம் பாசம் அதிகம் அவருக்கு. 'என்னம்மா இத்தனை நாளா பெட்டிக்குள்ளயே இருந்தியே... போரடிக்கிலையா உனக்கு? சரி விடு, அடுத்த பத்து நாட்களுக்கு முதல் படில உக்காந்துண்டு வர்ற மனுஷாள எல்லாம் பாரு. உனக்கு அடுத்த ஒரு வருஷத்துக்கு வேணுங்கற அளவுக்கு அவங்க கதை பேசிட்டு போவாங்க' என ஏதாவது கூறிக்கொண்டு இருப்பார். தொலைவில் இருந்து பார்த்தால், அம்பாளும் இவர் பேச்சைக் கேட்பது போலவே இருக்கும்.

லக்ஷ்மி பாட்டியிடம் போய் எல்லா வாண்டுகளும் கேட்கும். “என்ன பாட்டி, தாத்தா இப்படி பொம்மையோட சுவாரஸ்யமா பேசறாரே? அவருக்கு ஒண்ணும்...” அவர்கள் இப்படி கேட்டு முடிக்கும் முன்னரே பாட்டி அவர்களைத் திட்ட ஆரம்பித்து விடுவாள். “உங்களுக்கு என்ன தெரியும், அவர பத்தியும், நவராத்திரிய பத்தியும்? பெரிசா கிண்டல் அடிக்க வந்துட்டீங்க” என்பாள்.

அந்தக் கூட்டுக் குடும்பத்தில் யார்‌ என்‌ன‌ சொன்னாலும், எப்படிப் பேசினாலும், ரமணி தாத்தா கொலு வைப்பதை நிறுத்த மாட்டார்.‌ லக்ஷ்மி பாட்டியும் அவருக்கு ஒத்தாசை செய்யாமல் இருக்க மாட்டார்.

காலை எழுந்து ஸ்நானம் முடித்த கையோடு கொலுப்படியை தயார்‌ செய்வார்.‌ நடுவில் அன்ன ஆகாரம் எதுவும் தேவைப்படாது அவருக்கு. படிக்கு எப்போதும் பட்டுப்‌புடைவையைத்தான் சாத்துவார். பார்த்துப் பார்த்து ஒவ்வொரு‌ பொம்மையாக அடுக்குவார்.‌ 'உன்ன‌ இங்க வச்சுடறேன்டா கிருஷ்ணா' என்பார். கிருஷ்ணரும்‌ சிரிப்பார். அத்தனை பொம்மைகளையும்‌ அடுக்கிவிட்டு ஐந்து நிமிடங்கள் எல்லா பொம்மைகளையும்‌ நோட்டம் விடுவார்.‌ தனக்கு திருப்தி ஏற்பட்டவுடன், “லக்ஷ்மி வந்து வெளக்கேத்திடு” என்பார். அதற்காகவே காத்திருக்கும் பாட்டியும் உடனே வந்து ஸ்லோகம் சொல்லியபடி விளக்கேற்றுவாள்.‌ உணர்வுப்பூர்வமாக யோசிப்பவர்களுக்கு அந்தத் தருணம் அனைத்து தெய்வங்களும் அவர்கள் இருவரின் முன்‌ காட்சியளிப்பது போலவே இருக்கும்.

நவராத்திரி‌ அனைத்து தினங்களிலும் லக்ஷ்மி பாட்டி விதவிதமாக பட்டுப் புடைவை கட்டிக்கொண்டு வீட்டிற்கு வருபவர்களுக்கு இனிப்பும் சுண்டலும் தாம்பூலமும்  கொடுத்து மகிழ்வாள். ரமணி தாத்தா தன்னால் ஆன‌ அனைத்து உதவிகளையும் பாட்டிக்கு செய்து கொடுப்பார்.

ஒரு‌ நாள் பேரன்‌ விக்கி, பாட்டியிடம்‌ கேட்டான், “ஏன் பாட்டி, நீங்களும் தாத்தாவும் எல்லா பண்டிகையையும் விட்டுட்டு, நவராத்திரின்னா மட்டும் இவ்ளோ ஹேப்பி ஆயிடறீங்க?” என்றான்.

அதைக் கேட்ட லக்ஷ்மி பாட்டிக்கு லேசாகக் கண் கலங்கியது.  “உங்க தாத்தாவுக்கு பத்து வயசு இருக்கும்டா அப்போ. அவருக்கு கல்யாணின்னு ஒரு தங்கை இருந்தா. கொள்ளை அழகு அவ. குட்டி அம்பாளே நேர்ல வந்தா மாதிரி இருப்பா. அவளுக்கு இந்த நவராத்திரின்னா ரொம்ப இஷ்டம். விதவிதமா பட்டுப் பாவாடை கட்டிண்டு ஊரெல்லாம் போவா. அவள பார்த்தா போதும், எல்லாரும் அவள அவ வீட்டுக்குக் கூப்பிட்டு, பாட்டுப் பாட சொல்லிக் கேட்டு, அப்பறம் அவளுக்கு ஏதாச்சம் சாப்பிடக் கொடுத்து, பத்திரமா வீட்டுக்கு அனுப்புவாங்க. ஒரு நாள் நவராத்திரி அப்போ அவ தெருவுல நடந்து போனப்போ என்னாச்சுன்னே தெரியல, அப்படியே மயக்கம் போட்டு விழுந்துட்டா. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு போனா, டாக்டர் என்னவோ சொன்னார். யாருக்கும் எதுவும் புரியல. ஆனா, அவ ரொம்ப நாள் உயிரோட இருக்க மாட்டான்னு மட்டும் புரிஞ்சுது. ஆனா‌, அவ இந்த பூமில இருக்கற‌‌ நாள் வரைக்கும் அவள‌ சந்தோஷமா பாத்துக்கணும்னு அவாத்துல எல்லாரும் முடிவு பண்ணாங்க. அவ கேட்டது ஒண்ணே ஒண்ணுதான். 'அம்மா, தெனமும் கொலு வைக்கறியா? எனக்கு என்னமோ ரொம்ப பிடிச்சிருக்கு.‌ எல்லாரையும் வீட்டுக்குக் கூப்பிடு. நானும்‌ பாட்டு  பாடறேன்.‌ புதுசு புதுசா பாவாட கட்டிக்கிறேன்'னு அவ சொன்னதை யாராலயும் மறுக்க முடியல. அவளுக்காக அவ உயிரோட இருந்த ஒரு‌ மாசம் பூரா கொலு வச்சாங்க. அவ அழக் கூடாதுன்னு எல்லாரும் சந்தோஷமா இருக்கற மாதிரி நடிச்சாங்க. ஒரு நாள் அவ போய்‌ சேந்துட்டா.

உங்க தாத்தா ரொம்பக் கவலைப்பட ஆரம்பிச்சிட்டார். தாத்தாவ பாத்து அவரோட அம்மாவுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சு. இவனுக்கும் ஏதாவது ஆயிடுமோன்னு பயந்தாங்க. அப்போ உங்க தாத்தாவ கூப்பிட்டு, 'இத பாரு ரமணி, நம்ம கல்யாணி எங்கயும் போகல. அவ பகவான்கிட்ட பத்திரமா இருக்கா. உனக்குத்தான் தெரியுமே, அவளுக்கு கொலு ரொம்பப் பிடிக்கும்ன்னு. நாம வருஷா வருஷம் கொலு வைக்கலாம்... சரியா? நான், எனக்கப்புறம்  நீ எப்பவும் விடாம நவராத்திரி கொண்டாடி நம்ம குட்டி தேவதைய வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடுவோம்னு அவரோட அம்மா சொல்ல, அந்த சின்ன‌ வயசுல உங்க தாத்தா மனசுல ஊறிப்போன அவரோட தங்கை பாசம்தான்... இதோ இப்பவும் தொடர்ந்துகிட்டே இருக்கு” எனக் கூறி முடித்தாள்.

கவனமாகக் கதையைக் கேட்ட விக்கி, “நான் கூட‌‌ தாத்தா மாதிரி இனிமே நவராத்திரிய விடாம கொண்டாடுவேன் பாட்டி” என்றான்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT