- ரெ. ஆத்மநாதன், காட்டிகன், சுவிட்சர்லாந்து
நாட்டின் முன்னேற்றம் தடைப்படக் காரணம் ஆட்சியாளர்களே! / அதிகாரிகளே!
நடுவர்: அனைவருக்கும் வணக்கம். நாட்டின் முன்னேற்றம் தடைப்படக் காரணங்கள் பலவாக இருந்தாலும் முதன்மையானவை ஆட்சியாளர்களின் செயல்பாடுகளும், அதிகாரிகளின் போக்குந்தான். சட்டங்களை இயற்றி அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவது ஆட்சியாளர்களின் பணி என்றால், அந்தச் சட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவது அதிகாரிகள்தான். அனைத்து வளங்களும் நம் நாட்டில் இருந்தாலும், மக்கள் சுபிட்சமாக வாழவில்லை.
ஜாதி, இன, மத உணர்வுகளால் ஒற்றுமையைக் குலைத்து விடுகிறோம். நம் கட்சிக்காரன், நமது ஜாதிக்காரன் என்று தவறுகளுக்குத் துணை போகிறோம். இந்த நிலையில் தான் நாட்டு முன்னேற்றம் தடைப்படக் காரணம் ஆட்சியாளர்களே என்று பேச இருவரும், அதிகாரிகளே என்று வாதிட இருவரும் வந்திருக்கிறார்கள். நாட்டு முன்னேற்றம் தடைப்படக் காரணம் ஆட்சியாளர்களே என்று கூற வருகிறார் எக்ஸ். இவர் வழக்கறிஞராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். வாங்க எக்ஸ்!
மி.எக்ஸ்: வணக்கம். ஆட்சிக் கட்டிலில் ஏறுபவர்கள் அதன் நான்கு கால்களாகவுள்ள ஐபிசி (IPC), மக்கள் நலன், சமத்துவம், நாட்டு முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.
நடுவர்: அரசுக்கட்டில்… நான்கு கால்கள்… அருமையான உவமானங்கள்…
மி.எ: தேர்தலில் நிற்போரிடம் கேட்கப்படும் கேள்விகள் என்ன தெரியுமா?
நடுவர்: எனக்கு எப்படீங்க தெரியும்? நான் எலக்ஷன்ல ஓட்டுப் போடத்தான் கால்கடுக்க நின்னிருக்கேன்… நீங்க அனுபவஸ்தர். சொல்லுங்க!
மி.எ: முதல்கேள்வி, தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்வீங்க?
நடுவர்: முதல் கேள்வியே அதுதானா?
மி.எ: அடுத்தது… கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுப்பீங்க?…
நடுவர்: எல்லாம் ‘விடமின் ப’ பற்றித்தானா?
மி.எ: அதனால்தான் உறுதியாகச் சொல்கிறேன். நாட்டு முன்னேற்றம் தடைப்படக் காரணம் ஆட்சியாளர்களே என்று. பணத்தைப் போட்டுப் பணம் எடுக்கும் வியாபாரமாக அரசியலை ஆக்கிப் பணம் உள்ளவர்களுக்கே பதவி என்ற நிலையை அரசியல்கட்சிகள் இன்று வளர்த்து விட்டன. இன்றைய ஜன நாயகம் பண நாயகத்திடம் சரண்டர் ஆகி விட்டது. நாட்டு முன்னேற்றம் தடைப்பட முழு முதற் காரணம் ஆட்சியாளர்களே!
நடுவர்: பண வியாபாரமன்றி வேறேதும் இல்லைன்னு முடிவாச் சொல்லி இருக்காரு…ம்…வாங்க ஒய். இவர் அதிகாரியா இருந்தவரு!
மி.ஒய்: நாட்டின் முன்னேற்றம் தடைப்படக் காரணம் அதிகாரிகளே என்பதை அனைவரும் அறிவார்கள்! குறிப்பிட்ட ஒரு பகுதியில் ‘T’ போன்ற சாலைப் பணி நடைபெற்றது. இரண்டு ஒப்பந்ததாரர்கள் இரண்டு பணிகளையும் எடுத்தனர். பணிகளும் நடைபெற்றன. நடுவில், கை மாற வேண்டிய அனைத்தும் மாறிக் கொண்டன. செங்குத்துச் சாலைக்காரர் படுக்கைச் சாலையுடன் இணைக்காமல் ஒரு 50 மீட்டர் இடைவெளி விட்டு பணியை முடித்துக் கொண்டார். எனது நேரடி மூத்த அதிகாரிதான் இப்பணிகளுக்குப் பொறுப்பானவர். இரு பக்கமும் கை நீட்டி விட்டதால் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. அந்த 50 மீட்டர் இடைவெளியில் பைக்கில் வந்த இளைஞன் கீழே விழுந்து, காலை முறித்துக் கொண்டான். எனது அதிகாரி தலைக்கு வந்தது ஆபத்து. அவர் என் தலையில் தள்ளி விட்டுத் தப்பித்துக் கொண்டார். ஆனாலும் நான் சஸ்பெண்ட் ஆகியிருந்த காலம் முழுவதற்கும் எனக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கிப் பார்த்துக் கொண்டார்!
நடுவர்: நீங்க சஸ்பெண்ட் ஆனது சந்தோஷந்தான்!
மி.ஒய்: பண வரவால் சந்தோஷம் என்றாலும், பதவி உயர்வு தடைப்படுமே என்ற வருத்தம். அந்த வருத்தத்திலும், உறவினர்களிடம் தலை காட்ட முடியாமலும் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களை வீட்டுக்குள் அடைபட வைப்பதும் ஒரு விதத் தண்டனைதானே!
நடுவர்: தண்டனை உங்களுக்கா… உங்கள் மனைவிக்காங்கறது அவங்களைக் கேட்டாத்தானே தெரியும்!
மி.ஒய்: என் உயரதிகாரி இரண்டு ஒப்பந்ததாரர்களிடமும் நேர்மையுடன் நடந்து கொண்டிருந்தால் அந்த இளைஞனின் கால் முறிந்திருக்காது. அவனின் எதிர்காலம் பாழ்பட்டிருக்காது. இவற்றுக்கெல்லாம் காரணம், பொறுப்பற்று, வருமானத்திற்கு அதிகமாகக் குறுக்கு வழியில் பணம் பார்க்க நினைக்கும் அதிகாரிகள்தானே! நாட்டு முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல; சமுதாயச் சீர் கேட்டிற்கும் காரணம் ஒரு சில அதிகாரிகளே என்று கூறி முடிக்கிறேன்.
நடுவர்: தவறிழைக்கும் சில அதிகாரிகளால்தான் நாடு முன்னேறாமல் சீர்கேடு அடைகிறது என்று வாதிட்டிருக்கிறார் ஒய். அடுத்து ஏ!
மி.ஏ: அனைத்துத் தவறுகளால்தான் முன்னேற்றம் தடைப்படுகிறது. ஆட்சியாளர்களில் பெரும்பாலானோர்தான் இதற்குக் காரணம். ஒய் சஸ்பெண்ட் ஆகக் காரணம் அவர் மூத்த அதிகாரி மட்டுமல்ல. அவரைத் தவறு செய்யத் தூண்டிய அரசியல்வாதியுந்தான். நேர்மையான அரசியல்வாதிகளை மனதில் வைத்தே அம்பேத்கர் சட்ட விதிகளை வகுத்தார். அதிலுள்ள ஓட்டைகளையே பயன்படுத்தி இன்று பலர் உதவாக்கரை அரசியல் செய்கிறார்கள். நாடோ, மக்களோ அவர்களுக்கு ஒரு பொறுப்பல்ல. அதனால்தான் நம் நாட்டில் சிலர் உலகப் பணக்காரர்களாகவும், பெரும்பாலானோர் ஏழைகளாகவுமே உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தைக் கவனிப்பவர் நாட்டில் முக்கியத் தேர்வான ஐ.ஏ.எஸ்.,பாஸ் செய்திருக்க வேண்டும். காவல் துறை அதிகாரி என்றால் ஐ.பி.எஸ்.,தேவை. அரசியல்வாதிகளில் சிலரோ மழைக்குக் கூடப் பள்ளியில் ஒதுங்காதவர்கள். காமராஜரைப் போல சில படிக்காத மேதைகள் மக்களின் அவலத்தைப் போக்கினார்கள். இன்றைக்கு அவ்வாறில்லை. நாட்டு முன்னேற்றம் தடைப்பட அரசியல்வாதிகளான ஆட்சியாளர்களே காரணம்.
நடுவர்: பெரும்பாலான அரசியல்வாதிகள் நாட்டு முன்னேற்றத்தைப் புறந்தள்ளி, தங்கள் முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார். பி ....வாங்க…
மி.பி: ஆம். அவர் கூறியது அனைத்தும் உண்மையே. பெரும்பாலான படிப்பறிவில்லாத அரசியல்வாதிகள் ஆட்சிக்கட்டிலில் ஏறுகையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பெரிய படிப்புப் படித்தவர்கள்தான் அவர்களுக்குத் தவறான பாதையைக்காட்டி, அவர்கள் உதவியுடன் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.
ஏனென்றால் மில்லியனுக்கு ஆறு பூஜ்யங்கள் என்பதும், பில்லியனுக்கு ஒன்பது, ட்ரிலியனுக்குப் பன்னிரெண்டு என்பதும் தெரியாத ஆட்சியாளர்கள் கூட உண்டு. எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் அதிகாரிகள்தான் தங்கள் சுய நலத்திற்காக, அதிகம் படிக்காத அப்பாவி அரசியல்வாதிகள் சிலரைத் தங்கள் கைப்பொம்மைகளாக்கித் தாங்கள் நினைப்பதைச் சாதித்துக் கொள்கிறார்கள். நாட்டு முன்னேற்றம் தடைப்படப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள் அதிகாரிகளே!
நடுவர்: 'அதிகப் படிப்பு ஆபத்து’ என்ற கூற்று உண்டு. நால்வரின் வாதங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் இருந்தன. நாட்டுப் புறத்தில் ஒரு சொற்றொடர் கூறுவார்கள். ’உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டாய்!’ என்று.
இந்த நேர்வில் அதைச் சற்றே மாற்றி ‘உன்னால நான் வாழ்கிறேன்; என்னாலே நீ வாழ்கிறாய்’ என்றால் அதுவே பொருத்தமாக இருக்கும். இங்கு ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின் அடி நாதம் சுய நலம். மக்களும், நாடும் அதன் பிறகுதான் என்று நினைக்கும் மனோபாவம். அதற்காக எல்லோருமே அப்படித்தான் என்று கூற முடியாது. இரு பிரிவிலும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன? அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதோடு, அவர்களின் கை ஓங்க முடியாத சூழலும் உள்ளது. ’ஏழை சொல் அம்பலம் ஏறாது!’ என்பதைப் போல. ஜன நாயகத்தில் மக்களின் கை ஓங்கி இருக்க வேண்டும். நமது மக்களோ, அமாவாசையன்று சுற்றித் திரியும் காக்கை போல, திதி செய்பவர்கள் இடும் பருக்கையில் நிம்மதி அடைந்து விடுகிறார்கள். நமது மக்களுக்கு நல்லவர்கள் யாரென்பதும் தெரிவதில்லை; நாட்டிலுள்ள சட்ட திட்டங்களும் புரிவதில்லை. புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணமும் இல்லாததுந்தான் எல்லா முன்னேற்றத் தடைகளுக்கும் காரணம்! நன்றி!