ஓவியர் மணியம் தனது துணைவியாரோடு மற்றும் கோயில் சிற்பத்தை கண்டு ரசிக்கும் ஓவியர் மணியம்... Maniyam 100 Maniyam Selvan
கல்கி

பொன்னியின் செல்வனுக்கும் எனக்கும் ஒரே வயது!

மணியம் 100 (1924 – 2024)

எம்.கோதண்டபாணி

“1950ம் ஆண்டுகளில் கல்கி பத்திரிகையின் வார இதழ்கள், இதழ் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வெளிவந்துகொண்டிருந்த காலகட்டம் அது. அமர காவியமான, கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் நாவலின் முதல் அத்தியாயம் 29.10.1950 தேதியிட்ட இதழில் வெளியானது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக கல்கி இதழ் வெளியாகும் என்பதால் 27ம் தேதியே அந்த வார கல்கி இதழ் வெளியானது. அன்று காலைதான் நான் பிறந்தேன். எனவே, பொன்னியின் செல்வனுக்கும் எனக்கும் ஒரே வயது! அதற்கு முதல் நாள் நிறைய வேலை என்பதால், அப்பா இரவு அலுவலகத்திலேயே தங்கி விட்டு, மறுநாள் காலை என்னைப் பார்க்க வந்தாராம். என்னைப் பார்க்க வந்த அவரது கையில் பொன்னியின் செல்வன் நாவலின் முதல் அத்தியாயம் வெளியான கல்கி இதழ். ஆக, பொன்னியின் செல்வனுக்கும் எனக்கும் ஒரே வயது என்பதில் எனக்குப் பெருமைதான்” என்று தனது தந்தையைப் பற்றிய சுவாரஸ்யமான பகிர்வுகளை மேலும் அடுக்குகிறார் மணியம் செல்வனாகிய மா.செ.

“சோழர் கால சரித்திரமான பொன்னியின் செல்வன் நாவலுக்கு அப்பா வரைந்த ஓவியங்கள் அதுவரை இல்லாத ஒரு தனி பாணியைக் கொண்டு விளங்கியது. இந்த நாவலில் வரும் ஏறக்குறைய நாற்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் வித்தியாசப்படுத்திக் காட்டி, வாசகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார். எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டு. ஒருவேளை இந்த நாவலில் அப்பா சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் மிகவும் தத்ரூபமாக உருவம் கொடுத்ததனால், போன ஜன்மத்தில் அப்பாவுக்கும் சோழ, பாண்டிய நாட்டு சிற்பியாகவோ அல்லது சிற்பிக்கு உதவியாளராகவே கூட ஏதேனும் தொடர்பு இருந்திருக்குமோ என்று கூட எனக்கு அடிக்கடி மனதில் தோன்றுவதுண்டு.

Maniyam Drawing

ஆசிரியர் கல்கி அவர்கள் ஒரு மிகச் சிறந்த படைப்பாளி என்பதால், அவரது மனவோட்டங்களை அறிந்து, அவர் கூறும் கதாபாத்திரங்களின் அடையாளங்களை வைத்து, அதன்படியேஓவியம் தீட்டுவது என்பது மிகவும் சவாலான விஷயம். அந்த சவாலை திறம்பட செய்து முடித்தார் அப்பா மணியம் என்றுதான் கூற வேண்டும். ஏன் அப்படி கூறுகிறேன் என்றால், 1950களில் முதன் முதலில் கல்கி அவர்கள் கூறிய கதாபாத்திர அடையாளங்களை வைத்து, அப்பா மணியம் வரைந்த ஓவியங்களை அடிப்படையாக வைத்துத்தான் பிற்காலத்தில் பொன்னியின் செல்வன் நாவலுக்கு பலராலும் வரையப்பட்ட ஓவியங்களும் திகழ்ந்தன.

பொன்னியின் செல்வன் நாவல் கல்கி இதழில் தொடராக வந்துகொண்டிருந்த சமயம். அப்பா மணியம் அந்த வாரத்துக்கு வேண்டிய இதழுக்கு வேண்டிய ஓவியத்தை வரைந்து எடுத்துக்கொண்டு, ஆசிரியர் கல்கி அவர்களிடம் காண்பித்து ஒப்புதல் பெற அவரது இல்லத்துக்குச் சென்று இருக்கிறார். தான் வரைந்த ஓவியங்களில் ஆசிரியர் ஏதாவது திருத்தம் சொன்னால் அதை அங்கேயே சரிசெய்து கொடுத்துவிட்டு வருவதுதான் அப்பாவின் வழக்கம். அதற்கான பொருட்கள் மற்றும் வசதிகள் அங்கேயும் அப்பாவுக்கு செய்து கொடுக்கப்பட்டிருந்தன. இப்படி, அன்று அப்பா மணியம் தந்த அந்த ஓவியத்தைப் பார்த்த ஆசிரியர் கல்கி அவர்கள், ‘அதை அப்படி வைத்துவிட்டுப் போ’ என்று கூறி இருக்கிறார். வழக்கமாக, ஓவியத்தில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டி இருந்தால், அதை அங்கே சரிசெய்து கொடுக்கச் சொல்லும் கல்கி அவர்கள், ஏதும் சொல்லாமல், ‘வைத்துவிட்டுப் போ’ என்று சொன்னது அப்பா மணியத்துக்கு ஆச்சரியமாக இருந்ததோடு, படத்தில் ஏதோ பெரிய பிழை இருக்குமோ, பெரிதாக திருத்தம் செய்ய வேண்டி இருக்குமோ என்று கவலைப்பட்டிருக்கிறார்.

Maniyam Drawing

அப்பா மணியத்தின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்த கல்கி, ‘ஓவியம் ரொம்பவே சிறப்பாக வந்திருக்கு. நான் சொன்ன சம்பவக் குறிப்புகளுக்கு மேலேயே ஓவியத்தை பிரமாதமா வரைஞ்சிருக்க. இந்த ஓவியத்துக்கு நியாயம் சேர்க்கிற மாதிரி எழுத, நான்தான் இன்னும் யோசனை பண்ணியாகணும்’ என்று கூறி இருக்கிறார். இது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம், கௌரவம் என்று அப்பாவே கூறி இருக்கிறார்.

அப்பா மணியத்தின் ஓவியத் திறமைக்கு மதிப்பளிக்கும் விதமாகத்தான், பொன்னியின் செல்வன் நாவல் நிகழ்விடங்களாகக் கூறப்படும் பழையாறை, தஞ்சாவூர், கும்பகோணம், கோடியக்கரை, ஏன் இலங்கையின் அநுராதபுரம் போன்ற இடங்களுக்குத் தாம் சென்றபோது, அவரையும் கூடவே அழைத்து சென்றார் ஆசிரியர் கல்கி! அந்தளவுக்கு கல்கி அவர்கள் மற்றும் அப்பா மணியத்தின் எண்ண அலைகள் ஒன்றாகவே இருந்தன!

வியத்துறையில் பெரிய வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்திலேயே அப்பா மணியம் விதவிதமான தனது ஓவியங்களின் மூலம் வித்தியாசத்தைக் காட்டினார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், அந்தக் காலங்களில் வண்ண ஓவியங்கள் வரைவது மிகவும் சொற்பமே. ஆனாலும், அப்பா வாட்டர் கலர்களைக் கொண்டு அந்தக் காலத்திலேயே பொன்னியின் செல்வன் நாவலுக்காக வண்ண ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

Maniyam Drawing

குரு ஸ்தானத்தில் இருந்து கல்கி அவர்கள் ஓவியர் மணியத்தை வழிநடத்தியதாலேயே காலத்தால் மறக்க முடியாத அற்புத ஓவியங்களை அவரால் வரைய முடிந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் கல்கி அவர்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். அதேபோல், அப்பா மணியத்துக்கும் வீட்டில் ஓவியம் வரைவதைத் தவிர, அலுவலகத்திலும் நிறைய ஓவியப் பணிகள் இருக்கும். அதுபோன்ற சமயங்களில் வீட்டிற்கு வரக்கூடிய முடியாத அளவுக்கு நிறைய முக்கியமான வேலைகள் இருக்கும். அதனால் அப்பா சமயங்களில் கல்கி அலுவலகத்திலேயே இரவு தங்கி வேலை பார்க்க வேண்டி இருக்கும்.

இதற்கிடையில் ஆசிரியர் கதை சொல்ல, அப்பா மணியம் ஓவியம் வரைய வேண்டும். இதற்கான நேரத்தை ஒதுக்குவது மிக மிக அவசியம் என்பதை இருவரும் ஏற்றுக்கொண்டு தங்களது இதர பணிகளுக்கு இடையே ஓவிய டிஸ்கஷனுக்கும் நேரம் ஒதுக்கினார்கள். ஒரு எழுத்தாளர் மற்றும் ஓவியரின் எண்ண அலைகள் ஒரே மாதிரி இருந்தால்தான் எழுத்தாளர் நினைத்ததை உருவகப்படுத்தி, காட்சியை தத்ரூபமாகக் காட்ட முடியும் என்பதற்கு அப்பா மணியம் வரைந்த பொன்னியின் செல்வன் ஓவியங்களே சாட்சி.

ப்பா மணியத்தின் ஓவியப் பரிணாம வளர்ச்சியை ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரால் வரையப்பட்ட ஓவியத்தின் அருகில் அவர் போட்டிருந்த கையொப்பத்தை வைத்து அடையாளப்படுத்தலாம். பொன்னியின் செல்வன் நாவலுக்கு அவர் ஓவியம் வரையும்போது அவருக்கிருந்த ஓவிய முதிர்ச்சியின் காரணமாக, தனது கையொப்பத்தை மிகவும் திருத்தமாகவும், அதே சமயத்தில் நேர்த்தியாகவும் போட்டிருப்பார். இந்தக் காலகட்ட அவரது ஓவியங்களில், ‘மணியம்’ என்ற தனது கையொப்பத்தில், ‘ணி’ மற்றும் ‘ய’ ஆகிய எழுத்துக்களை ஒன்றாக இணைத்துப் போட்டிருப்பார்.”

இப்படி, பொன்னியின் செல்வன் நாவலுக்கு சரித்திரப் புகழ்மிக்க ஓவியங்களை வரைந்த மணியம், கல்கி பத்திரிகையை விட்டு ஏன், எதற்காக வெளியே வந்தார்? அதை நாளைக்குத் தெரிந்துகொள்வோமா?

நேர்காணல்: எம்.கோதண்டபாணி

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT