கல்கி

ராகுலின் யாத்திரை : சுறு சுறு சமூக ஊடக டீம்

S CHANDRA MOULI

ன்யாகுமரியிலிருந்து ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை துவங்கியது முதலே, ஊடகங்களில் அது குறித்த செய்திகள் நிறைய வெளிவந்து கொண்டிருக்கின்றன. வழக்கத்தைவிட அதிகமாகவே ராகுலுக்கு மீடியாவின்  முக்கியத்துவம் கிடைத்துவருகிறது.

இன்னொரு பக்கம், ராகுல் குறித்தும், யாத்திரை குறித்தும் ஏராளமான செய்திகளும், படங்களும்  சமூக ஊடகங்களின் வாயிலாக  பகிரப்படுகின்றன. இதற்கு, ஒரு படையே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது  ஓர் பின்னணித் தகவல்.

காங்கிரஸ் கட்சியில் மீடியா தொடர்பு விஷயங்களுக்கு  அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், ராஜ்ய சபா எம்.பி.யுமான ஜெயராம் ரமேஷ்தான் முழுப் பொறுப்பு. அவருக்கு வயது 68. அச்சு மற்றும் எலெக்ட்ரானிக் மீடியா தொடர்பான எல்லா விஷயங்களையும்,  சமூக ஊடகங்களுக்கான விஷயங்களையும் மேற்பார்வை இடுவது இவர்தான்.

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுக்கு இவர் போட்டிருக்கும் உத்தரவு “யாத்திரை மற்றும் ராகுல் குறித்த தகவல்கள் ஆணி அடித்தாற்போலவும், ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்தும், வேகமாக, குறித்த நேரத்திலும் சமூக ஊடகங்கள் மூலமாக மக்களைச் சென்றடைய வேண்டும்” என்பதுதான். 

இவருக்குக் கீழே இருப்பவர் 45 வயது சுப்ரியா ஸ்ரீநடே.  இவர் பத்திரிகையாளராக இருந்துவிட்டு , காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர். இவருக்குக் கீழே 60 பேர்  கொண்ட ஒரு டீம் பணியாற்றுகிறது. 

இந்த டீமில் இருப்பவர்கள் எல்லோரும் தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள். இவர்களின் சராசரி வயது 27. இவர்கள் டெல்லியில் உள்ள தங்கள் அலுவலகத்தில் உட்கர்ந்துகொண்டு சமூக ஊடக விஷயங்களை கவனித்துக் கொள்கிறார்கள்.

இவர்களுக்கு இணையாக, ராகுல் காந்தியின் சமூக ஊடகக் கணக்கினை கவனித்துக்கொள்ள  தனி டீம் வேலை செய்கிறது. 10  பேர் கொண்ட அந்த அணியின் தலைவர் ஒய்.பி. ஸ்ரீவத்சா. வயது 39.

கர்நாடகா காங்கிரசில் சமூக ஊடக விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்த இவர்தான் இப்போது  ராகுலின் சமூக ஊடகப் பணிகளை கவனித்துக் கொள்கிறார்.

ஒற்றுமை யாத்திரை மூலமாக ராகுலுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடி இருக்கிறது என்றால், அதற்குப் பின்னணியில் இவர்களது உழைப்புதான் காரணம்.

இவர்கள் போதாதென்று “தீன் பந்தார்”  என்று ஒரு மும்பை கம்பெனி.  யாத்திரைக்கு திட்டமிடுவது துவங்கி, லோகோ டிசைன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்தக் கம்பெனிதான் செய்து வருகிறது. யாத்திரைக்கான ஒரு பாட்டு உருவாக்கியதும் இவர்கள்தான். பிரஷாந்த் சாரி, சவியோ ஜோசப் என்ற இருவர் நடத்தும் கம்பெனிதான் தீன் பந்தார்.

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT