-நாணு
"வசு இந்த மேட்டரைப் பாரேன். மெர்ஸி கில்லிங்குக்கு ஆதரவா நம்ம நாட்டுல ஒரு சங்கம் ஆரம்பிக்கப் போறாங்களாம்!”
மூக்கில் வழிந்த கண்ணாடியை நடுவிரலால் தூக்கி விட்டபடி சொன்னார் ரகுராம்.
"ம்..."
"என்னைக் கேட்டா. மெர்ஸி கில்லிங்கைத் தீவிரமா நடைமுறைப்படுத்தணும். வெஜிடபிளா கிடந்து அவஸ்தை படறதைவிட லேசா ஒட்டிக்கிட்டிருக்கிற உசிரை எடுத்துடறது எந்த விதத்துலயும் தப்பே இல்லைன்னுதான் சொல்வேன்!"
வசுதா அவரை தீர்க்கமாகப் பார்த்தாள்.
''வெஜிடபிள்னு நீங்க எதைச் சொல்றீங்க?"
"நினைவில்லாம, உணர்வில்லாம படுத்த படுக்கையா நாள் கணக்குல. வருஷக் கணக்குல கிடக்கறாங்களே, அவங்களைத்தான்!"
"அவங்க மட்டும்தானா? உணர்வுகளை வெளிக்காட்ட முடியாம, மனசு மரத்துப் போயி நடைபிணமா இருக்கிறவங்க?"
ரகுராம் சட்டென்று மௌனமானார். அவர் முகம் சுண்டிப்போனது. வசுதாவின் கேள்வி அவரை நிறையவே பாதித்திருக்க வேண்டும். உண்மை சுடும்!
இருபத்தைந்து வருடங்கள்...
அணுஅணுவாக சுட்டு, பொசுங்கி, கருகி, சிதைந்து...
திருமணமானவுடன் ஏதேதோ கனவுகளைச் சுமந்துகொண்டு, எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு...
"என்னங்க, கரெஸ்பாண்டன்ஸ்ல எம்.ஏ. பண்ணலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க?"
"இப்ப எதுக்கு அதெல்லாம்?"
"பி.ஏ.வுல நான் யுனிவர்சிடி ரேங்க் ஹோல்டர். மேல படிக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நம்ம கல்யாணம் நிச்சயமாயிருத்து. எம்.ஏ முடிச்சு பி.எச்.டி. பண்ணணும்னு ரொம்ப ஆசை!'
"ஓஹோ, என்னைவிட அதிகமா படிச்சு என்னை மட்டம் தட்டணும்னு நினைப்போ?"
வசுதா தவித்தாள்.
"ஐயையோ, அப்படிலாம் இல்லைங்க!"
"இதப் பாரு, இந்தப் பேச்சுக்கு இதோட முடிவு கட்டு. புரிஞ்சுதா?"
தீர்மானமாகக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார் ரகுராம்.
திருமண வாழ்வில் வசுதாவுக்கு விழுந்த முதல் அடி பலமாகத்தான் இருந்தது. மனது வலித்தது. இருந்தாலும் பொறுத்துக்கொண்டாள். போகப் போக அவள் புரிந்துகொள்ளப்படுவாள் என்ற நம்பிக்கை.
இந்த நம்பிக்கைதான் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவள் ஆசையை துளிர்விடச் செய்தது.
"என்னங்க, படிப்புதான் வேண்டாம்னு சொல்லிட்டீங்க. நாட்டியத்தையாவது தொடர்றேனே!"
"நாட்டியமா?"
ரகுராமின் புருவங்கள் உயர்ந்தன.
"ஆமாங்க. நான் ரொம்ப நல்லா பரதநாட்டியம் ஆடுவேன். கல்யாணத்துக்கு முன்னாலேயே எங்கப்பா சொன்னாரே... ஞாபகமில்லையா? நான் சொன்னா என் பழைய மாஸ்டர் வந்து கத்துக் கொடுப்பார். என்ன சொல்றீங்க?"
ரகுராமின் கண்களில் அனல் பறந்தது.
"இதென்ன கூத்தாடிக் குடும்பம்னு நினைச்சியா? இந்த நாட்டியம், அபிநயம்லாம் எனக்குக் கட்டோட பிடிக்காது. யாரந்த மாஸ்டர்? இந்தப் பக்கம் வந்தா முட்டியப் பேத்துருவேன்! இந்த விபரீத ஆசைகளையெல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு, ஒழுங்கா குடும்பம் நடத்தற வழியப் பாரு!"
பச்சை செடியில் ஆசிட் மழை. இடிந்து போனாள் வசுதா.
ஏன்? இதெல்லாம் ஏன்?
புரியவில்லை.
சிறை! மாட்டிக்கொண்டாகிவிட்டது. அக்கினியால் ஏற்பட்ட பந்தம். அக்கினியால் மட்டுமேதான் இதற்கு விடியல் கிடைக்குமோ?
யோசித்தாள். மறுபடியும் மறுபடியும் யோசித்தாள். வசுதா தன்னை மாற்றிக்கொண்டாள்.
தன் குடும்பம், தன் கணவர், தன் குழந்தைகள் என்ற உணர்வு பொங்கியது. சிறந்த மனைவியாக, சிறந்த தாயாக உருவாக வேண்டும் என்ற தாகம் பிறந்தது.
வீட்டில் சின்னச் சின்ன விஷயங்களில்கூட கவனம் செலுத்தத் தொடங்கினாள். கணவரின் தேவைகளைக் குறிப்பறிந்தே பூர்த்தி செய்தாள்.
ஆனால்... அதை உணர ஆளில்லை.
எல்லாம் அவள் கடமை, செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம்தான் ரகுராமிடமிருந்து வெளிப்பட்டது.
மகனைப் பள்ளிக்கு அனுப்பும் கட்டம் வந்தது.
"என்னங்க, நம்ம பிரதோஷை எம்.எஸ்.ஸ்கூல்ல போடலாங்க. அதுதான் இங்கே நல்ல ஸ்கூல்னு எல்லாரும் சொல்றா!''
"முடியாது! அபர்ணா மெட்ரிகுலேஷன்ல அவனைச் சேர்க்க ஏற்கெனவே ஏற்பாடு பண்ணியாச்சு!''
"ஐயையோ, அது அவ்வளவு நல்ல ஸ்கூல் இல்லைன்னு சொல்றாங்களே... பசங்க கெட்டுப் போயிடறாங்களாம்!"
"கொஞ்சம் உன் திருவாயை மூடறயா? எல்லாம் நாம வளர்க்கறதுல இருக்கு. கெட்டுப் போகணும்னா அவன் எங்கே இருந்தாலும் கெட்டுத்தான் போவான். கோபுரத்து உச்சில உசத்தி வெச்சுடறதுனாலே மட்டும் சாக்கடை மணக்காது!''
"ஆனா அதே கோபுரம் சாக்கடைல விழுந்தா நாறிப் போயிருங்க!''
"என்னை எதிர்த்தாப் பேசறே? சனியனே! என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியும். இந்த வீட்டுல இதுக்கு மேலயும் நீ ஒரு வார்த்தை பேசினா, கொலை விழும் ஜாக்கிரதை!"
வசுதா வாயடைத்துப் போனாள்!
ஈகோ!
இவள் சொல்வதை, தான் என்ன கேட்பது என்ற எண்ணம். அதன் விபரீத விளைவுகளைப் பற்றி சிந்திக்காத மூர்க்கத்தனம்.
ரகுராம் கடைசியாகச் சொன்ன வார்த்தை அவளை ரொம்பவே பாதித்தது. அன்றிலிருந்து வசுதா மெளனம் சாதிக்கத் தொடங்கினாள். கேட்டதற்கு மட்டும் பதில். மற்றபடி கணவரின் போக்குக்கே எல்லாவற்றையும் விட்டு விட்டாள். அவர் போகும் பாதை தவறென்று புரிந்தாலும் அவள் சொல்வது எதுவுமே எடுபடப் போவதில்லை!
உணர்வுகளின் சுயகட்டுப்பாட்டுக்கும் தற்கொலை என்றுதான் பெயரோ?
மகனும் மகளும் ரகுராமின் நிழலில்தான் வளர்ந்தனர். அவர்களைப் பொறுத்தவரை தாய் ஒரு இயந்திரம். அது சமைத்துப் போடும். துணிகளைத் துவைக்கும். மடித்து வைக்கும். அறையை சுத்தமாக்கி வைக்கும். தங்களின் கிண்டல்களையும், கேலிகளையும், ஏவல்களையும் மௌனமாக ஏற்றுக்கொள்ளும். ஆனால் கேள்விகள் கேட்க மட்டும் அதற்கு உரிமை கிடையாது.
இருபத்தைந்து வருடங்களாக இந்த வாழ்க்கை...
சில நேரங்களில் வசுதாவுக்குக் கோபம் வந்ததுண்டு, தனது இயலாமையின் பேரில். ஆனால் என்ன பயன்? செக்கு மாடுகளுக்கு சுதந்திரம் கிடைப்பதில்லை.
இத்தனை வருடங்களில் மெளனம் சர்ச்சைகளை தவிர்த்தது என்னவோ உண்மைதான்! அவள் மனமும் நிதானம் பெற்று பாதிப்புகள் பற்றிய கவலையைத் துறந்தது.
ஆனால் வசுதாவே எதிர்பார்க்காத விதமாக ரகுராமும் வாயடைத்துப் போகும் காலமும் வந்தது.
தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளுக்கு அவருடைய உபதேசங்களும், அதட்டல்களும் சலிப்பைத் தந்தன. அவரையும் உதாசீனப்படுத்தி ஒதுக்க ஆரம்பித்தனர். உதாசீனங்களுக்குப் பழக்கப்படாதவர். தானே சட்டம் என்று தலைநிமிர்ந்து நின்றவர். எதிர்த்து வரும் அம்புகளைச் சந்திக்க தன்னைப் பழக்கிக் கொள்ளாதவர்.
பதறினார்... உணர்ச்சிவசப்பட்டார். ஆணவம் கரைந்தது. மமதை ஆவியானது. தோல்வி புரிந்தது.
இப்போது அவருக்குத் துணை தேவைப்பட்டது. தன்னுடைய உணர்ச்சிகளைக் கொட்ட ஒரு முகம் தேவைப்பட்டது. இப்போதெல்லாம் வசுதாவுடன் அடிக்கடி பேசுகிறார். கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கிறார். அவள் அபிப்பிராயங்களைக் கேட்கிறார்.
இது என்ன திடீர் மாற்றம்? நரைமுடிதான் காரணமோ? அல்லது இயலாமையின் வெளிப்பாடா?
வசுதாவின் மனம் சிரித்தது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வார்த்தைகளினால் அவரை ரணப்படுத்தினாள்.
பழைய ரகுராமாக இருந்திருந்தால் சீறியிருப்பார். இது அடிபட்ட பாம்பு. அடைக்கலத்துக்காக அலைபாய்கிறது.
'படட்டும்! இத்தனை வருடங்களாக நான் அனுபவித்த மரண வேதனைகளை, ஆஸிட் எரிச்சல்களை இவரும் கொஞ்சம் அனுபவிக்கட்டும். என் ஆழ்மனத்தில் உருவாகியிருக்கும் காயங்களுக்கு இதுதான் மருந்து!'
ரகுராம் குனிந்த தலைநிமிராமல் உட்கார்ந்திருந்தார்.
அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள் வசுதா. கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குள் குற்ற உணர்வு பிறந்தது.
'தவறு செய்கிறோமோ?'
மனம்தான் உயிர். அதை இம்சிப்பது சரிதானா? அன்று ரகுராம் செய்த அதே உணர்வுக் கொலைகளைத்தான் இன்று வசுதாவும் செய்கிறாளோ? அவளைப் போலவே அவரும் ஒரு வெஜிடபிள் ஆகத்தான் வேண்டுமா?
சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தாள் வசுதா. மனப் போராட்டத்துக்கு விடை கிடைத்தது போலிருந்தது.
கணவரின் அருகில் சென்றாள்.
"என்னங்க... ஸாரி!"
ரகுராம் மெதுவாக அவளை நிமிர்ந்து பார்த்தார். கண்கள் பனித்திருந்தன. இதுநாள் வரை வசுதா பார்க்காத ஒன்று. சின்னத் தாக்குதலைச் சந்திக்கக் கூட திராணி இல்லாத பலஹீனமான நிலை. அவருக்குத் தேவை அன்பு, ஆறுதல்... அதை இப்போது வசுதாவால் மட்டுமே கொடுக்க முடியும்.
வசுதா முந்தானையால் அவர் கண்ணீரை ஒற்றி எடுத்தாள். அவர் முகத்தை தன்னோடு ஆதரவாக அணைத்துக் கொண்டாள்.
சிறு குழந்தைபோல் ரகுராமும் அவளுடன் ஒண்டிக்கொண்டார்.
பின்குறிப்பு:-
கல்கி 07 ஜூலை 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்