Short Story... 
கல்கி

சிறுகதை: எல்லம் நன்மைக்கே..!

நாமக்கல் எம்.வேலு

சாயங்காலம் மூன்று மணி இருக்கும். காலிங் பெல் அடித்தது. எழுந்துபோய் கதவைத் திறந்தாள் கமலம். மூன்று பேர் நின்றிருந்தனர். வயதில் மூத்த ஆண்பிள்ளை, பெண்பிள்ள, ஒரு இளைஞன்… அந்த அம்மாள், பக்கத்து வீட்டைக் காட்டி, “அந்த வீட்டுல யாரும் இல்லீங்களா… யாரையும் காணோமே… வீடு பூட்டிருக்கு… எல்லாரும் எங்கே போய்ட்டாங்க…?” என்றார்.

தலையை நீட்டி ஒருமுறை பக்கத்து வீட்டை பார்த்துவிட்டு, “ஊர்ல ஒரு பெரிய காரியம்னு சொல்லிட்டிருந்தாங்க. மதுரைன்னு நினைக்கிறேன்… அங்கேதான் கிளம்பிட்டாங்கபோல… ஒரு மணிபோல டாக்ஸி வந்து நின்னது. ரொம்ப பரபரப்பா கிளம்பினாங்க…” என்றவள், அவர்களைப் பார்த்து, “ஆமா… நீங்க யாரு… எங்க இருந்து வர்றீங்க?” என்றாள்.

பெரிய காரியம் என்றதுமே சட்டென அவர்களது முகம் கொஞ்சம் வாடியதைக் கவனித்தாள் கமலம். அவர்கள் தாங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். உடனே முகத்தை மாற்றிக்கொண்டு அந்தம்மாவே சொன்னார், “நாங்க தஞ்சாவூர்லர்ந்து வர்றோம்ங்க…” என்று சொல்லிவிட்டு, கூட இருந்த பையனைக் காட்டி, “இது எங்க பையன். அந்த வீட்டுல ஒரு பொண்ணு இருக்கு. இன்னிக்கு அந்தப் பொண்ணைப் பார்க்க வர்றதா சொல்லியிருந்தோம். அவங்களும் வரச் சொல்லியிருந்தாங்க. ஆனா… இப்போ… இப்படி…” அந்தம்மாவின் குரல் தேய்ந்துகொண்டே போனது.

கமலத்திற்கு அவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. உடனே முகத்தில் மலர்ச்சியைக் கொண்டுவந்து நிறுத்தி, “வெயில்ல நின்னு பேசிட்டிருக்கிங்களே. உள்ளே வாங்க…” என்றாள். அவர்கள் மறுபடியும் ஒருவருக்கொருவர் மவுனமாய் பார்த்துக்கொண்டனர்.

அந்த நிசப்தத்தை களைவதுபோல கமலம் தொடர்ந்தாள், “அவ்ளோ தூரத்துலேர்ந்து வந்திருக்கீங்க. இப்படியே வெளியே நின்னிட்டேவா பேசணும்… வாங்க உள்ளே…” என்றாள். அவர்கள் யோசிப்பதைப் பார்த்துவிட்டு, “சங்கோஜப்படாம வாங்க… பக்கத்து வீட்டுல பெண் எடுக்கப்போறீங்க… அப்புறம் நாம ஒன்னுக்குள்ள ஒன்னாகிறதில்லையா…” என்றுவிட்டு கதவை முழுதாக திறந்துவிட்டாள்.

தயங்கியபடி மூவரும் உள்ளே நுழைந்தார்கள். ஸோபாவைக் காட்டி உட்காரச் சொல்லிவிட்டு, மெல்ல ஓடிக்கொண்டிருந்த ஃபேனை வேகப் படுத்தினாள்.

அவர்கள் உட்கார்ந்தார்கள். “கொஞ்சம் இருங்க… டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்…” என்று நகர்ந்தாள்.

உடனே அந்தம்மாள் மறுத்தார். “பரவால்லீங்க. நாங்க வர்ற வழீல குடிச்சிட்டுடுத்தான் வந்தோம்…” உடனே மறுத்த கமலம், “ஏற்கனவே டீ போட்டுத்தாங்க இருந்தேன். நீங்க பெல் அடிக்கவும் வந்து பார்த்தேன். இன்னும் கொஞ்சம் தூள் சேர்த்தா ஆச்சு. கொஞ்சம் இருங்க… வீட்டுக்கு வந்தவங்களை வெறுமனேவா அனுப்பறது. இருங்க…” மடமடவென உள்ளே போனவள் மூன்று தம்ளர்களில் தண்ணீர் கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்து, “முதல்லே தண்ணீர் குடிங்க…” டி.வி.யையும் போட்டு, அவர்களை டி.வி. பார்த்துக்கொண்டிருக்க சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டாள்.

கொஞ்ச நேரத்தில் ஒரு டிரேயில் டீ கப்புகளுடன் திரும்பி வந்தாள். அவர்கள் டி.வி. பார்க்காமல் தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர்.

டீயை கொடுத்தபடியே, “வீட்டுல யாரும் இல்லைனு பார்க்கிறீங்களோ…” என்றவள், சற்றே புன்னகைத்து, “அவர் கடைக்குப் போயிருக்கார். பொண்ணு மாடில ஒர்க் பண்ணிட்டு இருக்கா… ஒர்க் பிரம் ஹோம்…” என்றாள்.

“ஐ.டி. கம்பெனி வேலையா?” என்றார் அந்தாம்மாவின் கணவர்.

“ஆமாங்க…” என்றாள் கமலம்.

“சொந்த வீடா…?” என்றார் அந்தம்மாள்.

“ஆமாங்க… பத்து வருஷம் ஆச்சு வீட்டைக்கட்டி… மாடிலயும் ரெண்டு ரூம் போட்டிருக்கோம்… பின்னால கல்யாணம் காட்சினு வரும்போது யூஸ் ஆகுமே… இப்போ பொண்ணு யூஸ் பண்ணிட்டிருக்கா…” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வெளியே போயிருந்த அவளது கணவன் கந்தசாமி உள்ளே நுழைந்தார். ஒன்றும் புரியாமல் அவர் பார்ப்பதைக் கவனித்துவிட்டு விவரத்தைச் சொன்னாள் கமலம். உடனே சம்பிரதாயத்துக்கு அவர்களை கும்பிட்டுவிட்டு, தான் கொண்டு வந்திருந்த பையை அவளிடம் கொடுத்துவிட்டு, அடுத்த ஸோபாவில் உட்கார்ந்தார் அவர்.

“பாருங்க… எங்களை வரச் சொல்லிட்டு, திடீர்னு கிளம்பிப் போய்ட்டாங்க…” என்றார் பையனின் அப்பா.

சமாளிக்கும்பொருட்டு, “மறந்துட்டாங்களோ, என்னவோ… இல்லை வேறு ஏதும் காரணமோ என்னவோ…” என்று இழுத்தார் கந்தசாமி.

கந்தசாமிக்கும் ஒரு டீ கப்பை கொண்டுவந்து கொடுத்தாள் கமலம்.

மாடியைச் சுட்டிக்காட்டி, “பாப்பாக்கு கொடுத்தியா?” என்றார் அவர்.

“இன்னும் இல்லைங்க… இதோ கொண்டு போறேன்க…”

“நீயேன் சிரமப்படறே. பெல் அடியேன். ஒரு நிமிஷம் கீழே வந்து குடிச்சிட்டுப் போகட்டும்…” என்றார் கந்தசாமி. உடனே காலிங்பெல்லை அடித்தாள் கமலம்.

கதவைத் திறந்து எட்டிப்பார்த்த கவிதா. “கூப்பிட்டீங்களாமா?” என்றாள்.

“டீ வச்சிருக்கேன்மா… கீழே வா. கெஸ்ட் வந்திருக்காங்க. ஜஸ்ட் வந்துட்டுப் போயேன்…” என்றாள் கமலம் இங்கிருந்தபடியே.

வந்திருந்த மூவரும் மேலே நின்றிருந்த கவிதாவைப் பார்த்தார்கள். பிறகு தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டார்கள்.

பிறகு நிமிர்ந்து உட்கார்ந்த பெரியவர், தாங்கள் தஞ்சாவூரில் டாக்சி கம்பெனி வைத்திருப்பதாகவும் பதினைந்து டாக்சிகள் ஒடுவதாகவும் சொன்னார். பையன் எம்.பி.ஏ. முடித்துவிட்டு கம்பெனியை நிர்வகித்துகொள்வதாகவும், தன் மனைவி ஒரு ஹைஸ்கூல் டீச்சர் என்றும் சொன்னார். ஒரே பையன்தான் என்றும் அந்தம்மாள் சொன்னார்.

தொடர்ந்து, பக்கத்து வீட்டுப் பெண்ணின் ஜாதகம் கிடைத்து அவர்களிடம் பேசிவிட்டுத்தான் பெண் பார்க்க வரும்நாள் குறித்ததாகவும், இதுதான் அவர்கள் பார்க்கும் முதல் பெண்… இதுவே இப்படி ஆகிவிட்டது என்றும், நாங்கள்தான் சகுனம் எதுவும் பார்க்கத் தவறிவிட்டோமோ… என்றும் வருத்தத்துடன் சொன்னார்கள்.

“பரவாயில்லை விடுங்க… எல்லாம் நன்மைக்கேன்னு பாஸிடிவா எடுத்துக்கங்க…” என்ற கந்தசாமி, உடனே, நானும் எங்களைப் பத்தி சொல்லிடறேன்… தான் எல்.ஐ.சி.யில் ஆஃபீசராக இருப்பதாகவும், மனைவி வீட்டைப் பார்த்துக்கொள்வதாகவும், மகள் பி.இ. முடித்துவிட்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்வதாகவும் சொல்லி முடித்தார். கொசுறாக, தங்களது சொந்த ஊர் முசிறி பக்கம் என்றும் வேலை நிமித்தமாக சொந்த வீடு கட்டிக்கொண்டு கோவையிலேயே செட்டில் ஆகிவிட்டதாகவும்… தங்களுக்கு ஒரே பெண் என்றும் சொல்லி நிறுத்தினார்.

கவிதா கீழே வந்து ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள். கவிதாவிடம் பேசினார்கள். காலேஜ் பற்றியும், வேலை பற்றியும் அவர்கள் கேட்க, அவளும் சுருக்கமாய் சொல்லிமுடித்தாள்.

”வயசு இருபத்தஞ்சு ஆச்சே… எங்க வீட்டுப் பொண்ணா இருந்திருந்தா இந்நேரம் நாங்க கல்யாணம் செஞ்சு கொடுத்திருப்போம். ஏதாவது காரணம், அல்லது கமிட்மென்ட் இருக்கோ?” என்று அந்தம்மா கேட்க,

“அப்படி ஒண்ணுமில்லை… இன்னும் அதைப்பத்தி யோசிக்கலை. இனிமே யோசிக்கவேண்டியதுதான்… “ என்றாள் கமலம்.

“என்ன நட்சத்திரம்?”

‘மிருக சீரிடம், ரிஷப ராசி…” என்றாள் கமலம். கவிதாவும் அதைக் கேட்டு புன்னகைத்தாள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டபடி எழுந்து நின்ற அவர்கள், “அப்போ வர்றோம்ங்க… முன்னே பின்னே தெரியாதவங்களா இருந்தாலும் நல்லா பேசினீங்க… பழகுனீங்க… நல்லா உபசரிச்சீங்க… நீங்க தஞ்சாவூர் வந்தா அவசியம் எங்க வீட்டுக்கு வரணும்…” என்றுவிட்டு மகனைப் பார்த்து, “தம்பி… உன் விசிட்டிங் கார்டு ஒன்னை அவங்ககிட்ட கொடேன்…” என்றாள் அந்தம்மாள். அவனும் ஒரு கார்டை எடுத்து கந்தசாமியின் கையில் கொடுத்தான். ’டைம்லி டாக்ஸி - சிஇஓ,‘ கலைஞானம் பீஈ எம்பிஏ’ என்று போட்டிருந்தது.

“தம்பி பேரு கலைஞானமோ…” என்று புன்னகைத்தார் கந்தசாமி.

அந்தப் பையன் கவிதாவை அடிக்கடி பார்த்து புன்னகைத்ததையும் அவர் பார்த்தார். அவனும் தனது அம்மாவின் காதில் ஏதோ சொன்னான். அதை கமலமும் கவனித்தாள்.

அந்த அம்மாள் கமலத்தைப் பார்த்து, “தப்பா எடுத்தக்காதீங்க… நிஜமாவே நெஞ்சு நிறைவா சொல்றேன்… உங்கப் பொண்ணை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு… பையன்தான் கேட்டுப் பாருங்களேன்னான்… அவனுக்கும் OKதானாம்.”

கமலமும் கந்தசாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

எழுந்து நின்றபடி, “தப்பா எடுத்துக்காதீங்க, நாங்க பக்கத்து வீட்டுப்பொண்ணைப் பார்க்கத்தான் வந்தோம். ஆனா அது அமையலை… உங்க பொண்ணைப் பார்த்தோம். தோணினதைச் சொன்னோம்… உங்களுக்கும் ஒருவேளை அப்படி அபிப்பிராயம் இருந்தா சொல்லுங்க… எங்களைப் பத்தி விளக்கமா சொல்லி இருக்கோம். அவசரம் இல்லை. மெல்ல யோசிச்சு சொல்லுங்க. எங்க கார்டு உங்ககிட்டே இருக்கு…” என்றபடி தாம்பாளத் தட்டை நீட்டினார்கள்.

கமலம் மகளைப் பார்த்தாள். அவள் வெட்கப்பட்டாள். தன் கணவனையும் பார்த்தாள். அவர் புன்னகைத்தார். பிறகு கணவனுடன் சேர்ந்து கமலம் தாம்பாளத் தட்டை வாங்கிக்கொண்டாள். அவர்கள் வெளியே வந்து காரில் ஏறும்போது அந்தப் போன் வந்தது.

“ஸாரிங்க… நீங்க வர்ற நாள் பார்த்து, ஊர்ல எங்கம்மா இறந்து போய்ட்டாங்க… ஏதோ அபசகுனமாதிரி இருக்கேன்னுதான் உங்களுக்கு போன் பண்ணி சொல்லலை… தப்பா எடுத்துக்காதீங்க… சகுனம் சரியில்ல. நீங்க வேற இடம் பார்த்துக்கோங்க...”

நிறுத்தி நிதானமாக பதிலளித்தாள் இந்தம்மாள், “பரவால்ல விடுங்க… எல்லாம் நன்மைக்கே!”

இது தெரிஞ்சா முட்டையை தலையில் தடவ மாட்டீங்க! 

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

SCROLL FOR NEXT