ஓவியம்; அரஸ் 
கல்கி

சிறுகதை - இதுவொரு வயசு!

கல்கி டெஸ்க்

-ரிஷபன்

பற்சக்கரங்களுக்கு இடையே கரும்பு நசுக்கப்பட்டு சாறு இறங்கி பாத்திரத்தில் வழிந்துகொண்டிருந்தது.

முத்துவுக்கு கை பம்பரமாகச் சுழன்றது. குடித்து வைத்த கிளாஸ்களைக் கழுவுவதும் கேட்பவர்களுக்கு ஜக்கிலிருந்து ஊற்றுவதுமாக வேலையில் ஆழ்ந்திருந்தாள்.

மாணிக்கம் கல்லாவைவிட்டு நகருவதில்லை. பணத்தை வாங்கிக்கொண்டு கூப்பன் கிழித்துத் தருவதோடு சரி. என்ன இருந்தாலும் கடை முதலாளி.

வேலு. பனியனோடு நின்றுகொண்டு கரும்புகளைத் திணிப்பதும், ஐஸ் பார் கரைந்ததும் வேறு வைப்பதும் அவன் வேலைகள்.

- இடையே முத்துவை வம்பிழுப்பதும்.

"அதென்ன முத்துன்னு ஆம்பளை பேரு. போதாதற்கு இடதுகைப் பழக்கம்?" என்றான் வேலைக்கு வந்த முதல் நாளே.

முத்து பதில் பேசவில்லை.

முதல் மாத சம்பளத்தை அவன்தான் மாணிக்கத்திடம் வாங்கி வைத்திருந்தான். ரூபாய் நோட்டை எட்டாக, பதினாறாக மடித்து நீட்டினான்.

எதுவும் சொல்ல முடியவில்லை.

கரும்பு வைத்து எடுக்கிற சாக்கில் மேலே உரசிப் போவான். இவள் முறைப்பதை லட்சியம் செய்ய மாட்டான்.

இடையில் மாணிக்கம் சாப்பாட்டிற்கு வீட்டுக்குச் சென்றுவிடும் நேரங்களில் வேலுவின் ராஜ்ஜியம்தான்.

"போ. டீ வாங்கியா."

"எ...துக்கு?"

"நான் குடிக்கத்தான். ஸ்பெஷல் டீன்னு கேளு..."

வந்த புதிதில் முத்துவுக்கு இது வியப்பாக இருந்தது. அவனவன் வெயிலில் விறுவிறுத்து உள்ளே வந்து 'ஜில்லுன்னு ரெண்டு ஜூஸ் குடுப்பா' என்று ஆர்டர் செய்ய, மாணிக்கமோ, வேலுவோ ஜூஸை ஒரு சொட்டுக் கூட சீந்துவதில்லை.

'போ... டீ வாங்கியா!'தான்.

"என்ன முழிக்கிறே. கரும்புச்சாறு குடிக்காம டீக்கு அலையறோம்னா? இந்த ஜூஸை மனுஷன் குடிப்பானா? ஹெஹ்ஹே!'' என்று வேலு ஒரு தடவை பெரிதாகச் சிரித்தான்.

மாதம் நூற்றைம்பது ரூபாய் என்பது முத்துவைப் பொறுத்தவரை மிகப் பெரிய தொகை. என்னென்னவோ செய்யலாம். இழக்க விரும்பவில்லை.

இதைப் புரிந்து வைத்திருப்பதாலோ என்னவோ சமீபமாய் வேலுவின் எல்லைகள் விஸ்தீரணம் அடைந்தன. குறிப்பாய் மாணிக்கம் இல்லாத நேரங்கள்.

"ஐஸ் கட்டியை எடுத்திட்டு... ஃபுல் ஜூஸா குடிக்கிறியா?''

"வேணாம்."

"அட... சும்மா குடிப்பியா..."

"வேணாம்."

"சரி. ஜூஸ் வேணாம். என்னோட சினிமாவுக்கு வரியா... ரஜினி படம்..."

"வரலே."

"அட. என்ன புள்ளே. எதுலயும் ஆசை இல்லாம..."

முத்து மௌனமாய்க் கண்ணாடித் தம்ளர்களைக் கழுவி கவிழ்த்து வைத்தாள்.

"உனக்கு என்ன வயசு இருக்கும்?"

இந்தக் கேள்வி இவனுக்கு அனாவசியம் என்பதுபோல வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருந்தாள் .

பக்கத்தில் வெப்ப மூச்சு பட்டது. திடுக்கிட்டுத் திரும்பினால் மிக அருகே நின்றிருந்தான்.

"உனக்கு எதுவுமே புரியாதா... இல்லே நடிக்கிறியா?"

முத்து சட்டென்று பலகையை உயர்த்தி வெளியே வந்து நின்றாள். அதே நேரம் யாரோ சாறு அருந்த வரவும் வேலு அவனிடத்திற்கு நகர்ந்து போய்விட்டான்.

முத்துவிற்கு கண் ஓரத்தில் நீர் கட்டிக்கொண்டது. கண்ணாடிபோல மின்னியது.

வேலு இனி சும்மா இருக்கமாட்டான். அடுத்த சந்தர்ப்பத்திற்குக் காத்திருப்பான். ஒவ்வொரு முறையும் பயந்து செத்து... ச்சே... இது என்ன பிழைப்பு என்று தோன்றியது.

மாணிக்கத்திடம் புகார் சொல்ல தைரியம் வரவில்லை. மாணிக்கம் வேலுவிற்கு வேறு அந்தரங்க வேலைகள் கொடுப்பதைக் கவனித்திருந்தாள். எந்த இரு ஆடவரும் ஒத்துப் போய் விடுவார்கள். அதுவும் இந்த விஷயம் அவர்கள் பார்வையில் மதிப்பு இல்லாதது. 'அப்படி என்ன இழக்கப் போகிறாய்?' என்று கேட்பார்கள்.

கடை மூடும்போது மணி எட்டரை. மாணிக்கம் கடை வாசலில் நின்றான். வேலு கொடுத்த சாவிக்கொத்தை வாங்கிக்கொண்டு தன் பங்கிற்கு பூட்டை இழுத்துப் பார்த்துத் திருப்தியானான்.

மொபெட் கிளம்பிப் போனது.

வேலு அவளைப் பார்ப்பது புரிந்தது.

நீண்ட நடை இருக்கிறது. கடை வீதி மிக நெரிசல். கூட வரப் போவதாக நிச்சயம் திட்டம் வைத்திருக்கிறான். கடை வீதியில் வம்பு செய்ய மாட்டான்.

பிறகு அவள் குடிசைக்குத் திரும்பும் வழி அத்தனை பாதுகாப்பு இல்லாதது. அதுவரை வந்து விட்டால்...

முத்து நடக்க ஆரம்பித்தாள். வேலு பின் தொடர்வது புரிந்தது. இன்று தீர்மானித்து விட்டான். படபடப்பு அதிகரிக்க கடை வீதியைக் கடந்து திரும்பினாள்.

வேலு அவளைப் பெயர் சொல்லி அழைப்பது கேட்டது.

"முத்து!"

"முத்து...!"

இன்னொரு குரலும். அவள் அப்பா, எதிரே நின்றார். வயசாளி. அழுதாள். "என்னம்மா?"

''நான் சொன்னேன்ல. அவன்தான்..."

வேலு இந்த எதிர்பாராத நிகழ்ச்சிக்குத் தயாரில்லை. திகைத்து நின்றான்.

''தம்பி... நீதான் வேலுவா?"

"ஆமா.''

"எம்பொண்ணுதான். தாயில்லாதவ. இவ ஒருத்திக்காவத்தான் உசுரைக் கையில புடிச்சுக்கிட்டுக் காத்திருக்கேன். உன்னைப் பார்த்தா... நல்ல மாதிரி.... இவ மேல பிரியம் உள்ளவன் மாதிரி தெரியுது. நீயே இவளைக் கட்டிக்க. உங்க வீட்டுக்கு நானே வரேன். சம்பந்தம் பேசறேன். என் பொறுப்பும் தீர்ந்துரும். என்ன சொல்றே?''

எளிமையாய் நிதானமாய்ப் பேசினார். வேலுவிற்கு வியர்த்தது. இரைச்சல் இல்லை. மிரட்டல் இல்லை. நேரடியாய் ஒரு வேண்டுகோள்.

"நான்... யோசிச்சு... சொல்றேன்..."

"சரிப்பா... நல்ல பதிலாச் சொல்லு. போயிட்டு வரியா? நீ வாம்மா."

அதே நிதானத்துடன் முத்துவை அழைத்துக்கொண்டு நடந்தார்.

தன் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்துவிட்ட மாதிரி தோன்றியது முத்துவுக்கு.

பின்குறிப்பு:-

கல்கி 02 ஏப்ரல் 1995இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

SCROLL FOR NEXT