Short Story 
கல்கி

சிறுகதை: கடிதம்!

கல்கி டெஸ்க்

-ரிஷபன்

ணியார்டர் தாளில் கையெழுத்திட முடியாமல் விரல்கள் நடுங்கின. 'பார்வதி அம்மாள்' என்று பெரிது பெரிதாய் எழுத்துக்கள்.

"என்னம்மா... ஃபாரம் முழுக்கவே உங்க கையெழுத்துப் போடறீங்க" என்று கிண்டலடித்தார் தபால்காரர்.

நோட்டுகளை எண்ணிக் கொடுத்தார்.

"வேற கடுதாசி எதுவும் இல்லியா?"

"நாளைக்கு வருதா பார்க்கலாம்..." என்றார் 'இன்றைக்கு இல்லை' என்ற குறிப்புடன்.

பக்கத்து வீட்டு பொன்னி எட்டிப் பார்த்தாள்.

"என்ன பாட்டி... பேரன் அனுப்பிட்டானா..."

பார்வதியின் அருகில் வந்தாள்.

"எப்ப வரானாம்..."

"வருவான். அவனுக்கு எப்ப வசதியோ..."

கிழவி உள்ளே போய்விட பொன்னி நொடித்துக்கொண்டாள்.

'பாரேன். கிழத்துக்கு எவ்வளவு திமிரு. பேரன் மாசா மாசம் சுளையா பணம் அனுப்பி வச்சிடறான். கிழவிக்கு அப்புறமும் பேராசை. இந்த மாதிரி மனுசங்களுக்குத்தான் பணம் தேடி வருது..

பின்னாலேயே உள்ளே போனாள்.

"ஆத்தா... பாலு வேணும். அதுக்காவத்தான் வந்தேன்."

."எவ்வளவு?"

பால் செம்புடன் கிழவி வந்தாள்.

"இருநூறு. புள்ளைக்குக் காய்ச்சல். சோறு வேணாம்னு..."

கிழவி பாலை அளந்து ஊற்றினாள். பொன்னி கொடுத்த காசை வாங்கி புடைவைத் தலைப்பில் முடிந்துகொண்டாள்.

'பாரேன். புள்ளைக்குக் காய்ச்சல்னு சொல்றேன். அப்ப கூட காசுலயே கண்ணு. ஒரு பசு மாட்டைக் கட்டி வச்சுக்கிட்டு.. வரட்டியைக் கூட காசு பண்ணிருது கிழவி...'

பொன்னி முனகிக்கொண்டே வெளியே போனாள்.

ண்மையிலே கிழவி மீது பக்கத்து எதிர் வீட்டுக்காரர்களுக்கு எரிச்சல்தான். கிழவி ஒரு பைசாக்கூட விடுவதில்லை.

'பேரன் அனுப்புற காசை என்னதான் செய்யிறாளோ...'

கிழவிக்கு வயசு எழுபதைத் தாண்டிவிட்டது. சுகுமார், கிழவியின் மகள் வயிற்றுப் பேரன். கிழவிக்கு ஒரே மகள். அவள் துரதிர்ஷ்டம் மகள் போன வருடமே தவறிப் போனாள்.

சுகுமார் இந்தப் பக்கம் வருவதேயில்லை கிழவியும் கிராமத்தை விட்டு நகருவதாயில்லை.

திடீரென கிழவி உடம்பு சரியில்லை என்று படுத்துவிட்டாள். தபால்காரரை விட்டு சுகுமார் விலாசத்திற்குத் தந்தி அடிக்கச் சொன்னாள்.

‘ஒரு வாரத்தில் கிளம்பி வருவதாக'க் கடிதம் மட்டும் வந்தது அவனிடமிருந்து.

வந்த கார்டை அத்தனை உடம்பு நோவிலும் தூக்கிப் பிடித்து உற்றுப் பார்த்தாள்.

தபால்காரர்கூடக் கிண்டலடித்து விட்டுத்தான் போனார். 'பேரன் கடுதாசியைப் பார்த்துட்டீல்ல. இனி பொழைச்சுக்குவே.'

ஆனால் கிழவிக்குப் போறாத காலந்தான்.

திடீரென மிகவும் முடியாமல் போய் தூக்கத்திலேயே மூச்சு பிரிந்துவிட்டது.

பேரன் வந்து சேர்ந்தான்.

காரியங்கள் முடிந்த பின் தபால்காரர் அவன் எதிரில் வந்தார்.

"இதைக் கிழவி உன் கையில கொடுக்கச் சொல்லிச்சு" என்றார்.

தபால் அலுவலக சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

'நீ அனுப்பின பணம் எல்லாம் இதுலதான் போட்டு வச்சுது."

சுகுமார் திகைப்புடன் பார்த்தான்.

"மணியார்டர் ஃபாரத்துல ஒத்தை வரி இல்லியேன்னு ரொம்பவும் ஏங்கிப் போச்சு. அப்புறம் உன் கார்டைப் பார்த்த பிறகுதான் அதுக்கு மனசு சமாதானமாச்சு. அந்தக் கார்டையே வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கும்.''

சுகுமார் தலைகுனிந்தான்.

"கடைசிவரை தன் உழைப்பிலே வாழ்ந்துட்டுப் போயிட்டா. அதுக்கு தேவைப்பட்டதெல்லாம். பாசம்தான் பாவம்... கடைசி வரை கொடுப்பினை இல்லே."

தபால்காரர் நகர்ந்து போனார்.

சுகுமார், மாடத்தில் மடித்து பத்திரமாய் வைக்கப்பட்டிருந்த கார்டையே வெறித்தான் கண்ணீருடன்.

பின்குறிப்பு:-

கல்கி 21  ஜனவடி 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT