Short Story 
கல்கி

சிறுகதை - பிழைத்துப் போகட்டும்!

லக்ஷ்மண் சங்கர்

“நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க” ஏ.எஸ்.பி. கணேஷ், பின் சீட்டில் உட்காரந்திருந்த அந்த இருவரையும் தைரியப்படுத்தினான். அவர்கள் இவனுக்கு அடுத்த வீட்டில் இருப்பவர்கள் – அப்பா ரிடயர் ஆனவர், பெண் பி. இ. ஸ்டூடண்ட். 

அவன் போன மாசம்தான் வேலைக்கு சேர்ந்திருந்தான் - ஐ. பி. எஸ். ஆபிசருக்கான மிடுக்கு, ஸ்டைல், இதனுடன். 

“எங்களுக்கு பயமாத்தான் இருக்கு” பெரியவர் சொன்னார். “பையன் பெரிய இடம். ஈவ் டீஸிங் கம்ப்ளைண்ட் குடுத்தா ஆக்க்ஷன் எடுப்பீங்களா?”

“டோன்ட் வொர்ரி சார். நான் நேரடியா எஸ்.பி. கிட்டயே பேசிடறேன். கண்டிப்பா அவர் அந்த அராத்து பையனை ரெண்டு தட்டு தட்டுவார். அப்பறம் அவன் ஒங்க பொண்ணு கிட்ட வாலாட்ட மாட்டான்.”

சடாரென்று ப்ரேக் பிடித்தான். வண்டிக்குமுன் விழுந்தவனுக்கு 10-12 வயசிருக்கும். அவன் பின்னால் துரத்தி வந்த ஏழெட்டு பேர்.  

கணேஷ் அந்தப்  பையனைத் தூக்கினான். பையன் கையில் பர்ஸ். “யாரோட பர்ஸ் இது?” கும்பலைக் கேட்டான்.

“என்னோடது சார்” ஒரு நடுத்தர வயது பெண் சொன்னாள். ”ஆனா பையனை  விட்டுடுங்க சார். என்ன கஷ்டமோ அவனுக்கு.”

“மேடம், அத போலீஸ் டிசைட் பண்ணுவாங்க – உங்க ஃபோன் நம்பரை குடுங்க. தேவைப்பட்டால் காண்டாக்ட் பண்றோம்.” அவளிடம் பர்ஸ்ஸைக் கொடுத்தான். “டேய் தம்பி வண்டீல ஏறு.” பையனை முன் சீட்டில் அமர வைத்தான். 

“என்ன விட்டுடுங்க சார். நானும் தங்கையும் சாப்ட்டு ரெண்டு நாள் ஆவுது சார்”   

“ஷூ, சும்மா வா. உனக்கு ஸ்டேஷன்ல இருக்கு. இந்த வயசுலயே திருடறியா?” அவன் தலையில் ஒன்று வைத்தான்.     

அடுத்த பத்து நிமிடத்தில் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தார்கள். 

“கோபால் சார்.. “ கணேஷ் சப்-இன்ஸ்பெக்டரை அழைத்தான். 

“சொல்லுங்க கணேஷ் சார்.“

“இந்தப் பையன் பிக்பாக்கெட் கேஸ். டீடெயில்சை வாங்கிக்கங்க. நா கொஞ்ச நேரத்துல வரேன்.” பையனை ஒப்படைத்தார். “நீங்க வாங்க.”

பெரியவரையும் பெண்ணையும் அழைத்துக்கொண்டு எஸ்.பி. அறைக்குள் சென்றான். 

“குட் மார்னிங் சார்” கம்பீரத் தோற்றமுள்ள எஸ்.பி.யை அதே கம்பீரத்துடன் சல்யூட் செய்தான். 

“சொல்லுங்க கணேஷ்.”

“சார், இந்தப் பொண்ண ஒருத்தன் ஈவ் டீஸிங் பண்ணறானாம். இவங்க என் நெய்பர்ஸ்.”  

“யாரும்மா அது?” எஸ்.பி. கேட்டார் “ரௌடியா இல்ல நல்ல பேக்ரவுண்ட் உள்ளவனா?”

“என் கிளாஸ் மேட் சார். எம்.எல்.ஏ பையன். தெனம் என்ன ஃபாலோ பண்ணி தொந்தரவு குடுக்கரான்.” 

“கணேஷ், அந்தப் பையனோட பேர், அட்ரஸ் எல்லாம் வங்கிக்கங்க” எஸ். பி. சொன்னார். “நீங்க போயிட்டு வாங்க. வீ வில் டேக் கேர்.”

“சார் எஃப். ஐ.ஆர் போடலாமா?”அவர்கள் சென்ற பின் கணேஷ் எஸ். பி. யிடம் கேட்டார். “ஸ்டேஷன்ல கூப்ட்டு ரெண்டு தட்டு தட்டினா பயந்துடுவான்.”

“ஈவ் டீஸிங் பெரிய விஷயமில்ல. லெட்ஸ் திங்க் ” 

கணேஷ் அதிர்ந்தான் “சார், அவனை சும்மா விட்டா இன்னும் பெரிய தப்பு ஏதாவது செய்வான்.”

“வெயிட் கணேஷ், நா இன்னும் முடிக்கல. அடுத்த வாரம் நா எம்.எல்.ஏவ வேற விஷயமா பார்க்கப் போவேன். அப்போ இந்த விஷயத்தயும் அவர் காதுல போட்டு பையன கண்டிக்க சொல்றேன். ஆஃப்டர் ஆல் பெரிய இடத்து விவகாரம்.”

“சார், அவனை பனிஷ் பண்ண வேண்டாமா?”

“வேண்டாம். நிதனமாத்தான் செயல் படணும்.” அவர் புன்சிரித்தார். “போகப் போக இந்த மாதிரி கேஸ்களை எப்படி ஹாண்டில் பண்ணனும்னு நீங்களே புரிஞ்சுப்பீங்க.”

“ஓகே சார்.” கணேஷ் வெளியே வந்தான்.

“கணேஷ் சார்..” எஸ்.ஐ. கோபால் அவன் அறையில் நுழைந்தார். “இந்த பிக்பாக்கெட் டீடெயில்ஸ் எல்லாம் வங்கிட்டேன். எஃப்.ஐ.ஆர்  போடலாமா?”

“பையன் எங்க?”

“டேய் வாடா.” பையன் வந்தான். 

கணேஷ் அவன் காதைத் திருகினான். “என்ன வயசுடா ஒனக்கு?”

“பதிமூணு சார்.”

“வீட்டுல எவ்ளோ பேர்?”

“நா, தங்கச்சி, அப்பா சார். அப்பா குடிகாரர் சார். நா தெனமும் ஏதாவது சின்னச் சின்ன வேலை செஞ்சு சாப்பாட்டுக்கு வழி பண்ணுவேன். ரெண்டு நாளா பேஞ்ச மழைல வேலை ஒண்ணும் செய்ய முடியல. வீட்டுல எல்லாருக்கும் ஒரே பசி சார். அதுனாலதான் பிக்பாக்கெட் ...”

“இப்படித்தான் ஆரம்பிப்பீங்கடா..” கோபால் சொன்னார். “கொஞ்ச நாள்ல பெரிய கிரிமினல் ஆயிடுவீங்க.” கணேஷைப் பார்த்தார். "சார் முளைலேயே கிள்ளி எறிஞ்சுடணும்.” 

“என்னடா ஜெயிலுக்குப் போறியா?” கணேஷ் கேட்டான். 

“சார் வேணாம் சார்.“ பையன் கண்களில் கண்ணீர். “இனிமே சத்தியமா இந்த மாதிரி காரியம் செய்ய மாட்டேன்.”

கணேஷ் கோபாலைப் பார்த்தார். “சின்னப் பையன் சார். விட்டுடுவோம். பிழைச்சுப் போகட்டும்.” பையனைப் பார்த்தான். “டேய், அடுத்த தடவை மாட்டினே நேர ஜெயில்தான். போ வீட்டுக்கு. ஒன்ன நாங்க கண் காணிச்சுகிட்டே இருப்போம். ஜாக்கிரதை.”

அவன் இருவரையும் கைகூப்பி வணங்கிவிட்டு சென்றான். 

“கணேஷ் சார், இவ்ளோ கருணை காட்டக்கூடாது. நம்ம தொழிலுக்கு ஆகாது.” கோபால் சொன்னார். 

கணேஷ் லேசாக சிரித்தான் “தொழில்ல கருணை காட்டலாம்னு இப்போதான் சார் கத்துக்கிட்டேன் - எஸ். பி. கிட்டேர்ந்து...” மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

இலங்கையின் 16வது புதிய பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமனம்!

கற்றாழை ஜெல் முகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

கிரிக்கெட்டில் கோலி, ரோஹித்தின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது?

கொய்யா சாகுபடியில் அமோக விளைச்சலைப் பெற என்ன செய்ய வேண்டும்?

மொறு மொறு வெண்டைக்காய் சிப்ஸ்… சூப்பர் டேஸ்ட்! 

SCROLL FOR NEXT