Story Image 
கல்கி

சிறுகதை; தண்டனை!

கல்கி டெஸ்க்

-ரிஷபன்

சாமிநாத வாத்தியாரைப் பார்த்ததுமே என் உடம்புக்குள் 'பகீரும்' அடித் தொடையில் சிலிர்ப்பும் வந்துவிட்டது. ஒன்றா இரண்டா எத்தனை 'கிள்ளல்'கள்!

தளர்ந்திருந்தார். குரல் மட்டும் பழைய கணீர். தலை ஏதோ புது வகை வெள்ளைத் தாவரம்போல் அடர்ந்திருந்தது.

எழுந்து நின்றேன்.

''சொல்லுங்க ஸார்."

"என்கிட்ட படிச்சீல்ல?" என்றார்.

அக்பர், ஹர்ஷர் என்று அவர் சொல்லிக் கொடுத்த தகவல்கள் சுத்தமாய் மறதி.

"என்கிட்ட படிச்ச பையன் நல்ல போஸ்ட்ல இருக்கறதைப் பார்த்து ரொம்ப சந்தோஷம்பா.''

'ஆமாம்' என்பது போல தலையசைத்தேன்.

சங்கடமான அமைதி. அப்போதே வகுப்பில் அவர் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டும். குறுக்கே பேசினால், ஒன்று பிரம்படி - அல்லது அருகே அழைத்து, டிராயரை விலக்கி, உள்ளே விரல்களால் ஊடுருவி அழுத்தமாய், கண்ணில் நீர் வர, ரத்தம் சுண்டிய கிள்ளல்!

படிக்காமல், எழுதாமல், கேள்விக்குப் பதில் சொல்லாமல் விட்டதற்கே இந்தத் தண்டனை என்றால் 'கோமளா' விஷயம் அவர் காதுக்கு எட்டியபோது எப்படி இருந்திருக்கும்!

ப்போதுகூட வியர்த்தது. இன்றைய தினம் காலை போலத் துல்லியமாய்க் காட்சிகள்.

காலை வகுப்பிற்கு அத்தனை சீக்கிரமாய் வந்திருக்க வேண்டியதில்லை. அதுவும் அமாவாசை தர்ப்பித்து விட்டுத்தான் (முதல் வகுப்பு விடுமுறை) ஸ்கூல் ஆரம்பிக்கும் என்றபோது....

நான், குமார், கோமளா மட்டும் வகுப்பில் ஆஜராகி விட்டோம். குமார், படிப்பு தவிர, மற்ற 'எல்லாம்' வந்து விட்ட வயதுக்கு மீறிய தடியன்.

கோமளாவிடம் என்ன சொல்லி பயமுறுத்தினானோ, சொன்ன நேரத்துக்கு புது பட்டுப் பாவாடை சரசரக்க வந்து விட்டாள். கண்ணாடி வளையல்களின் ஜலீர்.

எனக்குக் குளிர் ஜூரம் போல உள்ளுக்குள் உதற குமார் விரைப்பாய் அவளைப் பார்த்தான்.

"நீ தப்பு விட்டீல்ல. அந்தக் கேள்விக்குப் பதிலை பிஃப்டி டைம்ஸ் எழுதணுமாம். சொல்லச் சொன்னார்."

"நான் நேத்து கிளாஸ்லதானே இருந்தேன்..." என்றாள் சந்தேகமாய்.

"ஈவ்னிங் பெல் அடிச்சதும் என்னைக் கூப்பிட்டு... உன்கிட்டே சொல்லச் சொன்னார். உனக்கு நம்பிக்கை இல்லேன்னா நீயே போய் அவரைக் கேளு."

குமாரின் அலட்சியம் கோமளாவை யோசிக்க விடவில்லை. சாமிநாத வாத்தியாரிடம் யார் போய்க் கேட்பது!

''வேணும்னா ஒரு ஹெல்ப் பண்றோம். உன்னால் முடிஞ்ச அளவு நீ எழுது. மீதியை இவன் உன் கையெழுத்து மாதிரியே எழுதித் தருவான்" என்றான் என் பக்கம் கையைக் காட்டி.

எனக்கு இன்னும் வேகமாக உதறியது.

"நான்... நான்..."

"பார்த்தியா! அவனுக்கும் இஷ்டம் இல்லே. நான் சொன்னாக் கேட்பான்."

'"ப்ளீஸ்... சொல்லுடா!"

"சொல்லு - டாவா?"

"இல்லே... சொல்லு...."

"எனக்கு என்ன லாபம்?"

"ஈவ்னிங் போகறச்சே பாய் கடைல ஏதாச்சும் வாங்கித் தரேன்."

குமார் பெரிதாய்ச் சிரித்ததற்கு எனக்கு வியாக்கியானம் புரிந்ததும் இன்னும் உதறியது.

''சரி. நீயே சொல்லு. என்ன வேணும்?" என்றாள் லேசாய் முகம் சிணுங்கி.

"அப்புறம் எங்களை மாட்டி விட்டுரக் கூடாது.''

"சரி."

"பிராமிஸ்?"

"பிராமிஸ்!"

குமார் சொன்னது எனக்குக் கேட்டது போலவும் கேட்காத மாதிரியும் பிரமை தட்டியதற்குக் காரணம் அவன் கேட்ட விஷயம்தான். தலா ஒரு முத்தம்!

இன்று வரை அதன் தாத்பர்யம் எனக்குப் புலப்படவில்லை. அற்பத்தனமா அல்லது வயசுக்கு மீறிய நடத்தையா.. எது அவனைத் துண்டியதோ.

கோமளா திடுக்கிட்டு விழித்தாள்.

"ஏய், பிராமிஸ் பண்ணியிருக்கே. மாட்டி விட்டுரக் கூடாது!"

குமார் வார்த்தை வெளிப்பட்ட மறுவினாடி துல்லியமாய் மிரண்டு போயிருந்தாள் .

"நான் போறேன்" என்றாள்.

''இம்போசிஷன்?"

பதில் இல்லை. கோமளாவை வெளியில் அனுப்புவதா, கூடாதா என்று சாலமன் பாப்பையா இல்லாத பட்டிமன்றம் குமார் மனசுக்குள் நடப்பது தொண்டைக் குழிக்குள் புரிய நான் வெளிநடப்பு செய்ய வாகாகக் காலைத் திருப்பியிருந்தேன்.

"நில்லுடி!"

குமாரின் தப்பான பிரயோகம், கோமளாவிற்குப் பலத்தைக் கொடுத்துவிட்டது.

ம்பவம் நிகழ்ந்ததா என்று சந்தேகப்படும் அளவு 'எதுவுமே நிகழாத' மாதிரி ஒரு அமைதி.

'உன்னாலதான். உன்னாலதான்" என்று லோகல் ஆர்க்கெஸ்ட்ராவுடன் நான் பயத்தில் பாடினேன். வகுப்பு ஆரம்பிக்கும் வரை.

ஆனால் கோமளா எனக்குச் சாதகமாய்ப் பேசிவிட்டாள். குமாரின் தகாத வார்த்தையும் 'சாட்சி'யாக நானும் என்று கேஸ் உருவெடுத்தது. சாமிநாத வாத்தியாரின் பிரம்படி குமாருக்கும், 'நீ ஏன்டா பேசாம இருந்தே!' என்று தொடையில் கிள்ளோடு தப்பித்துக் கொண்டேன். ஒழுக்கமும் நேர்மையும் அவர் கண்கள்.

"உங்க ஸன் என்ன பண்றார். ஸார்?" என்றேன் என் மனத்தைப் படித்து விடப் போகிறார் என்ற நடுக்கத்துடன்.

''இருக்கான்.''

குரலில் தொய்வு.

"என்ன படிச்சிருக்கார்?"

"ப்ச... ஏறலே!"

சரி. இந்த விஷயம் வேண்டாம் என்று விடப் போனேன். குரலை செருமிக்கொண்டார்.

"அவனாலதாம்பா... இப்ப என் நிம்மதியே போச்சு.''

"எ... என்ன ஸார்?"

"படிப்பு வரலே. போக்கிரி சகவாசம். ரொம்ப ஆட்டம் போட்டுட்டு இப்ப மனசு மாறி அழறான். வேலை கிடைக்கலே!''

பார்த்துக் கொண்டிருந்தேன்.

நேர்மையற்ற செயல்கள் எதுவுமே சுத்தமாய்ப் பிடிக்காத - சிபாரிசு என்ற வார்த்தையை விஷமாய் வெறுக்கிற நெருப்பாய்ச் சீறி, தொடையை நிமிண்டுகிற சாமிநாத வாத்தியார் இரு கைகளையும் அந்த வினாடி கூப்பினார்.

''அவனுக்கு ஏதாச்சும் ஒரு வேலை பார்த்து வையேன்... கெஞ்சிக் கேட்கறேன்."

என் இதயம் நிமிண்டப்பட்டது.

பின்குறிப்பு:-

கல்கி 23  ஏப்ரல் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT