ஓவியம் - தமிழ் 
கல்கி

சிறுகதை - வற்றா நதி!

கல்கி டெஸ்க்

-சன்மது

டீக்கடை வாசலின் வடக்குப்பார்த்திருந்த சுவர் ஓரமாக சிறு மலையென குவிந்திருந்த  ஜல்லிக்கற்களில் குத்துக்காலிட்டு நுரைத்ததும்ப இருந்த தேநீர் கோப்பையை தன் இருக்கைகளுக்குள் முந்தானையின் துணைகொண்டு மெதுவாக ஊதி ஊதி குடித்துக்கொண்டிருந்தாள் தனலட்சுமி. காலை வெயிலின் மூர்க்கம் சற்று குறைந்திருந்தது.

பழைய கிளிப்பச்சை நிறத்தில்  பழுப்பு ஓரம்  கொண்ட பழைய காட்டன் சேலையில் கையில் பல நிறங்கள் கொண்ட ஒயர் கூடையில் மதிய வேலைக்கான உணவுடன் கட்டட வேலைக்கு தன் சும்மாடை சரிசெய்துகொண்டு நடக்க ஆரம்பித்தாள்.  வார சம்பளம் காலை வெறும் தேநீரில் வயிறு நிறைந்துகொள்கிறது. அகவை அறுபதை தொடுவதில் வெகுகாலம் இல்லாமல் இருந்தது. கடந்த மாதம் முதல் தினமும் வீட்டில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் கட்டிடத்திற்கு நடக்கவேண்டியதாய் இருந்தது. பழங்கால  ஊட்டம் இருந்ததால் உடல் கல்லென சுமைதாங்கியது .

நடந்து கொள்ளும்போது கன்னத்தில் தொங்கிக்கொண்டு தசை ஒவ்வொரு நடைக்குள் அதிர்ந்துகொண்டபோது சிறிய நீர்குமிழாய் வேர்வை முளைத்துக்கொண்ட இடைவெளியில் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன.

'இப்படி ஒவ்வொரு தடவ சம்பளம் கம்மியா கொடுத்தா எப்படிடா ....வாங்கிற காசுலே பாதி  சாராயம்  குடுச்சா உடம்பு என்னத்துக்கு ஆகறது. 'பொருமிக்கொண்ட  தனலக்ஷ்மியிடம் 'சாராயம்னு சொல்லாத பீருன்னு சொல்லு. வாரம்பூரா  கஷ்டப்படறவனுக்கு இந்த சுதந்திரம் கூட இல்லைனா எப்படி ...' ரமேஷ் சற்றும் தாமதிக்காமல் பதில் அளித்தான்.

'உங்கப்பா உன் சின்ன வயசுலேயே உன்கிட்ட என்ன அம்போனு விட்டுட்டு போயுட்டாரு. நீ இப்பிடி அடங்காம திரியுற... இப்பிடி இருந்தா உனக்கு யாரு பொண்ணு தருவா...'

'அட போம்மா. வீதிக்கு ஒரு பொண்ணு  இருக்கு அதுல ஒண்ணு கூடவா எனக்கு கிடைக்காது.'

கட்டிடம் வந்து விட்டது. தனலட்சுமி சும்மாடை தலையில் வைத்து செங்கற்களை ஏற்றிக்கொண்டு பணியை துவங்கினாள். நினைவலைகள் தொடர்ந்தன.

 'என்னமா  குழம்பு வச்சுருக்க மனுஷன் வாயுள வைப்பானா....'என்று சட்டியை காலால் தள்ளிவிட்டான் .

அன்று அப்போதை விடவும் போதை அதிகமாகி இருந்ததால் தனலட்சுமி நீர்வழிந்த கண்ணோடு சுவற்றில் மாட்டி இருந்த அத்துணை தெய்வங்களுடன் மன்றாடி கொண்டிருந்தாள்.

‘தனலட்சுமி மா, என்ன கண்ணுக்குள்ளெல்லாம் வேர்க்குது’   என்றான் மேஸ்திரி

கண்களை துடைத்துவிட்டு வேலையில் விறுவிறுப்பானாள்.

மதிய வேலை எல்லோரும் பொட்டண சாப்பாடுக்கு வரிசை கொண்டார்கள்.    தனலட்சுமி தனியாக  வெயில் தணிந்த இடத்தில் அமர்ந்து கொண்டு  மோர் சாதம் உண்ண திறந்தபோது வெப்பத்தால் ஆகும் புளிச்சி மூச்சை முட்டியது.

இங்க பாரு மா,இப்படி புளிச்சுப்போன சாப்பாடு ,நேத்து ஆக்குன இட்லி இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தே அப்பறம் வேற எவளையாவது கூட்டிட்டு வந்து உன்ன கொண்டுபோய்  விடுதியில விட்டு வந்துருவேன்.

வயிற்றுக்கும் வாய்க்கும் சோற்றை அள்ளி போட்டுக்கொண்டு பணிக்கு திரும்பினாள் .  சில  வேளைகளில் கூடைகளில் பழங்கைளை சுமந்து பெரிய பெரிய வீடுகளில் போய் விற்பது. தள்ளுவண்டியில் காய்கறி விற்பது. சில வீடுகளில் கூட்டிப்பெருக்கி பாத்திரம் துலக்குவது என்று கிடைக்கும் வேலையை ஓய்வில்லாமல் செய்வாள்.

வெற்றிலை கூட போடுவது கிடையாது அவ்வப்போது ரத்தஅழுத்தம் கூடும்  போது பொது சுகாதார மையத்தில் மாத்திரைகளை வாங்கி போட்டுக்கொண்டு அடுத்த வேலையை பார்ப்பாள்.

மேகம் சற்று கறுத்து இருந்ததால் அனைவரும் பணியை நிறுத்திவிட்டு கிளம்ப ஆரம்பித்தனர்.  அதே கூடையுடன் நடக்க ஆரம்பித்தாள் தனலட்சுமி.

'லட்சுமி ...என்ன இப்படி எளச்சுட்ட. மவன் எப்படி அப்படியேதான் இருக்கானா, என்ன பண்ண நம்ம விதி.' என்று பேசிய கண்ணாத்தாளிடம் தரையை பார்த்தபடியே இறுகிப்போன மனதில் இருந்து கொப்பளித்துக் கொண்ட ரணத்தை பெரும் மௌனமாக்கிக் கடந்தாள்.

இருட்டிக்கொண்டே வந்தது தனலக்ஷ்மியின் நடையும் வேகமானது. காலம் நகர்வதற்கு  எல்லோர் முன்னும் தினம் தினம் ஒரு சவாலை முன்னிறுத்துகிறது. அதில் நம்மை நிறுத்தி வெற்றிகொள்வதில் நீடிக்கிறது பயணம்.

ஒரு முறை சில நண்பர்களை கூட்டிக்கொண்டு வீட்டில் வைத்து குடித்தான்.

தட்டி கேட்டதும் அடிக்கவும் கை ஓங்கினான்.

மூப்பின் போது பெரிய பாறையை உடன் சுமப்பதா......கலங்கியே போன தனலட்சுமியின் கண்களுக்கு மழையாய் தெரிந்தது  உலகம்.   வீடு வந்தது.

தம்பி, அம்மா வந்துட்டேன்.

இரும்புக் கட்டிலில் போர்த்தப்பட்ட பழைய சீலையில்  உடலை குறுக்கி... பாதிமலம் கழித்தவாறு வாயில் எச்சில் ஒழுக அரைத்தூக்கத்தில்  பக்கத்திலிருக்கும்  தண்ணீர் குவளையை  தேடிக்கொண்டிருந்தான்    ரமேஷ். ஏ எல் எஸ் என்ற நரம்பணு சிதைவு நோயால் கடந்த ஐந்தாண்டு படுத்த படுக்கை ….

தனலட்சுமி ரமேஷின் தலையை தூக்கி தண்ணீர் கொடுத்தாள்.

வெளியில் மேகம் தயாராக இருந்தது.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT