Kindergarten 
கல்கி

கிண்டர்கார்டன் பள்ளிக்கூடங்கள் பிறந்த கதை! இந்தப் படிப்பில் அப்படி என்னதான் இருக்கிறது?

தேனி மு.சுப்பிரமணி

தமிழ்நாட்டில் தமிழ் மொழி வழியிலான கல்வித் திட்டம் மட்டும் நடைமுறையில் இருந்த போது, ஐந்து வயது நிறைவடைந்த குழந்தைகளே முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதனால், குழந்தைகள் ஆறு வயதில் தங்களது கல்வியைத் தொடங்கும் நிலை இருந்தது. ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகளின் தோற்றமும், அதன் வளர்ச்சியும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், மூன்று வயது நிறைவடைந்த குழந்தைகளெல்லாம் எல்கேஜி, யுகேஜி என்று சொல்லப்படும் வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். தற்போது மூன்று வயதும், அதற்குக் குறைவான வயதுக் குழந்தைகளும் கூட பிரி.கேஜி எனும் வகுப்பில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி எனும் படிப்புகள் குழந்தைகளுக்குத் தேவைதானா? ஐந்து வயது நிறைவடையாத குழந்தைப் பருவத்தினரிடம் படிப்பு எனும் பெயரில் கல்வித் திணிப்பு செய்வது சரிதானா? என்பது போன்ற இப்படிப்புகள் தொடர்பான எதிர்க்கருத்துகள் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும், மிகக் குறைவான வருவாய் கொண்ட கூலித் தொழிலாளர்கள் கூட, தங்களது குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் தொடர்ந்து படிக்க வைக்க முடியாவிட்டாலும், பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி எனும் படிப்புகளில் மட்டுமாவது சேர்க்க வேண்டுமென்று விரும்புகின்றனர். இதற்காகவே, ஆங்கிலப் பள்ளிகள் தவிர்த்து, குறைவான கட்டணத்தில் ஆங்காங்கே சில மழலையர் பள்ளிகளும் கூடத் தொடங்கப் பெற்றிருக்கின்றன.

பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி எனும் மழலையர்களுக்கான படிப்புகள் எப்படித் தோற்றம் பெற்றன? இந்தப் படிப்பில் அப்படி என்னதான் இருக்கிறது? என்பது குறித்து அறிந்து கொள்வோம்… வாருங்கள்…

கிண்டர்கார்டன் (Kindergarten) படிப்புகள் என்று அழைக்கப்படும் இப்படிப்பு முதன் முதலில் ஜெர்மனியில்தான் தொடங்கப் பெற்றது. ஜெர்மானியக் கல்வியாளரான பிரெட்ரிக் புரோபல் (Friedrich Fröbel) என்பவர், தனது குழந்தைப் பருவ அனுபவங்கள் மகிழ்ச்சியானதாக அமையாததை எண்ணி வருத்தமடைந்தார். இனி வரும் காலங்களில் குழந்தைப் பருவக் காலத்தைச் சிறப்புடையதாகவும், அதனைக் கல்வியுடன் தொடர்புடையதாகவும் மாற்றியமைக்கவும் விரும்பினார். அதன் தொடர்ச்சியாக, அவர் உருவாக்கிய குழந்தைகளுக்கான கல்வி முறையே ‘கிண்டர்கார்டன்’ என்று அழைக்கப்படுகிறது. கிண்டர்கார்டன் என்பது ஜெர்மனியின் இடாய்ச்சு மொழிச் சொல். இச்சொல்லுக்குத் தமிழில் ‘மழலைத் தோட்டம்’ அல்லது ‘குழந்தைத் தோட்டம்’ என்று பொருள்.

தான் உருவாக்கிய குழந்தைகளுக்கான கல்வித்திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்தில், 1837ம் ஆண்டில், பிரெட்ரிக் புரோபல் ஜெர்மனியிலுள்ள 'ப்ளாக்கென்பர்க்' எனும் நகரில் கிண்டர்கார்டன் எனும் பெயரில் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இந்த கிண்டர்கார்டன் பள்ளிக்கான பாடத்திட்டத்தில், குழந்தைகளை மகிழ்விக்கும் பாடல்கள், கதைகள், விளையாட்டுகள், பரிசுகள், செயல்பாடுகள் போன்றவைகளே அதிக அளவில் இடம் பெற்றிருந்தன.

பாடத் திட்டத்திலிருந்த பாடல்களும், கதைகளும் குழந்தைகளின் கற்பனை ஆற்றலைப் பெரிதும் வளர்ப்பதாக அமைந்திருந்தன. அந்தப் பாடல்கள் மற்றும் கதைகளிலிருந்த கதாப்பாத்திரங்களின் வழியாக, அவர்களுக்குப் பழங்கால வீரர்களைப் பற்றியும், அவர்களது பண்பாடுகளைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் அதிகரிப்பதாக இருந்தன. விளையாட்டுகள், குழந்தைகளின் உடல்நலத்திற்கு உதவும் வகையில் அமைந்தது மட்டுமின்றி, சமூகத்தில் மற்றவர்களோடு இணைந்து செயல்படும் திறனை வளர்ப்பதாகவும் இருந்தன. 

ப்ரோபெல் தனது கிண்டர்கார்டன் பள்ளியில் வழங்கிய பரிசுகள் அனைத்தும் உருண்டை, கனசதுரம், உருளை போன்ற பல்வேறு வடிவங்களில் அமைந்திருந்தன. அதன் வழியாக, குழந்தைகளுக்குப் பல்வேறு வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதே போன்று, களிமண், மணல், அட்டை, குச்சிகள் போன்றவற்றைக் கொண்டு வீடுகள், கோட்டைகள், நகரங்கள், மலைகள் போன்றவை உருவாக்க எளிமையான பயிற்சியளிக்கப்பட்டன. இதன் வழியாக, குழந்தைப் பருவத்திலேயே எளிமையான செயல்முறைப் பயிற்சிகளை அவர்கள் கற்றுக் கொண்டனர்.

இப்பாடத்திட்டம் முழுவதும், குழந்தைகளைக் கவரும் வகையிலும், குழந்தைகளால் செய்யக்கூடியதாகவும், அதே வேளையில் எளிமையான முறைகளில் சிறந்த கல்வியைப் பெறுவதாகவும் அமைந்திருந்தன. அதனால் கிண்டர்கார்டன் கல்வி முறை, அங்கிருந்தவர்களிடையேப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, கிண்டர்கார்டன் கல்வி முறை ஜெர்மனி முழுவதும் பரவலாக்கப்பட்டது. 

ஜெர்மனியிலிருந்து இடம் பெயர்ந்து அமெரிக்காவில் சென்று குடியேறியவர்கள், தங்கள் நாட்டில் பின்பற்றி வந்த கிண்டர்கார்டன் கல்வி முறையினை அமெரிக்காவிலும் செயல்படுத்தத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவிலும் கிண்டர்கார்டன் கல்வி முறை பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர், அமெரிக்கக் கல்வி முறையில் கிண்டர்கார்டன் கல்வி முறையும் ஒன்றாக இணைந்தது. அதனைத் தொடர்ந்து, இந்தக் கல்விமுறை ஜெர்மனி, அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளிலும் பரவி, ஆங்கில வழிக் கல்வியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் ஆங்கில வழிக் கல்வி முறை பின்பற்றப்பட்ட போது, அதன் ஒரு பகுதியாக, கிண்டர்கார்டன் கல்வி முறையும் சேர்ந்து கொண்டது. குறிப்பாக, ஆங்கில வழிக் கல்வி முறையில், மழலையர்களுக்கு மட்டுமான கல்வியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. மூன்று வயது மற்றும் அதற்குக் குறைவான வயது குழந்தைகளுக்கு முன்னேற்பாடு மழலைத்தோட்டம் (Preparatory Kinder Garten – Pre.K.G) வகுப்பும், அதனைத் தொடர்ந்து, கீழ் மழலைத்தோட்டம் (Lower Kinder Garten – L.K.G) மற்றும் மேல் மழலைத்தோட்டம் (Upper Kinder Garten - U.K.G.) என்கிற இரு வகுப்புகளும் நடத்தப்பெற்று வருகின்றன. 

இப்படிப்புகள் மழலைக் குழந்தைகளுக்கு எளிமையான வழிமுறைகளுடன் அடிப்படைக் கல்வியைப் போதிப்பதாகவும் அவர்களுக்கு, கல்வி கடினமானதல்ல, எளிமையாகக் கற்றுக் கொள்ளக்கூடியதுதான் என்று வழிகாட்டும் வகையிலும்  அமைந்திருக்கின்றன என்று ஆங்கில வழிக் கல்வியைப் பின்பற்றும் பள்ளிகள் கருத்து தெரிவிக்கின்றன.

தமிழ் வழிக் கல்வியில் இல்லாத இப்படிப்புகளே, ஆங்கில வழிக் கல்வி மேலான ஆர்வத்தை அதிகரிப்பதுடன், ஆங்கில வழிக் கல்வியேச் சிறந்த கல்வி எனும் தோற்றத்தையும் சாதாரணமானவர்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றன என்று மாற்றுக் கருத்து கொண்டவர்களும் இருக்கின்றனர். இவர்கள், தமிழ் வழிக் கல்வியிலும், கிண்டர்கார்டன் முறையினைப் பின்பற்றித் தமிழ் வழியிலான மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

தக்காளி பாத் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! 

கிஞ்சுகி (Kintsugi) எனக்கு உணர்த்திய 4 வாழ்க்கைப் பாடங்கள்! 

குழந்தைகள் சிறந்த மனிதர் என்று பெயரெடுக்க 10 வாழ்க்கைப் பாடங்கள்!

மரத்தை பாமாவுக்கும் மலரை ருக்மிணிக்கும் அருளிய பரந்தாமன்!

சிறுகதை – மரியாதை!

SCROLL FOR NEXT