Son and mother in the hospital 
கல்கி

சிறுகதை: அம்மாவும் தம்பியும்!

கல்கி டெஸ்க்

- மகாலிங்கம் இரெத்தினவேலு

அம்மாவிற்கு மூச்சிரைப்பு அதிகமாக இருந்தது. சல்பியூட்டமால்கள், டெரிபிலின்கள், எதுவும் கை கொடுக்கவில்லை. ஆவி பிடித்துப் பார்த்தாலும் அடங்குவதாய் இல்லை. அப்பா இறந்த பிறகு அம்மா ரொம்பவும் இளைத்து விட்டார். மார்கழி மாதங்களில் மூச்சிரைப்பு ரொம்ப அதிகமாகி விட்டது. எது செய்தும் தீர்வதாகவோ குறைவதாகவோ தெரியவில்லை. 

நானும், தேவியும் வேலைக்குப் போய்விட்டு வீடு வந்து சேரவே இரவு 8.00 மணியாகி விடுகிறது. காலையில் எழுந்து பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயார் செய்து வேனிற்கு அனுப்புவதும் சாப்பாட்டுப் பைகளைத் தயாரித்து வைப்பதிலும் மின்சாரத் தொடருந்தை நோக்கி ஓடுவதற்கும் வேலை முடிந்து திரும்புவதற்கும் நேரம் சரியாக இருக்கிறது. இருக்கிற விடுமுறை நாள்களை கல்யாணங்களும், இன்ன பிற விசேட நிகழ்வுகளும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அலுவலக வேலைகளை எடுத்துக் கொண்டு வந்து கணினியில் செய்தால் தான் தொய்வில்லாமல் வேலை நடக்கிறது. இந்த ஞாயிறாவது அம்மாவை ஒரு நல்ல டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

தேவிக்கு ஒரே ஒரு குறை தான். 'நாம் எவ்வளவு பார்த்தாலும் உங்கள் தம்பி மட்டும் எதிலும் பங்கெடுத்துக் கொள்வதில்லை தானே. தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார். போதாக்குறைக்கு என்னையும் உங்களையும் குறை சொல்வது வேறு' என்று ஒரே அங்கலாய்ப்பாக இருப்பாள். 'பரவாயில்லை விடு. அவன் தனியார் வேலையில் இருக்கிறான். ஒரு சம்பளம் தான்.  நாம் இருவரும் அரசுப் பணியில் இருக்கிறோம். நல்லது கெட்டதை நாம் தான் கணக்குப் பார்க்காமல் செய்ய வேண்டும்' என்று ஆற்றுப்படுத்துவேன்.

ஆயிற்று. சனிக்கிழமை மாலை. ஞாயிறின் பகல் பொழுதை விட இந்த சனிக்கிழமை மாலை சற்று வசதியாய் இருக்கிறதே என்று அருகில் இருக்கும் ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவாயிற்று. கார் வரச்சொல்லி அம்மாவுடன் நானும் எனது மகளும் சேர்ந்து கொண்டோம். டாக்டர் ஸ்டெத்தால் சோதித்துப் பார்த்து விட்டு நீண்ட நேரம் மௌளமாய் இருந்தார். 'நாளை ஒரு ஸ்கேன் செய்து பார்த்து விடலாம்' என்றார். 'இல்லை டாக்டர் இப்போதைக்கு ஏதாவது மாத்திரை, மருந்துன்னு கொடுக்கலாமே' என்றேன் நான்.  

'இல்லை. அந்த ஸ்டேஜ் தாண்டிட்ட மாதிரித் தான் இருக்கு. நாளை ஒரு ஸ்கேன் எடுத்து வாருங்கள். பிறகு தான் சிகிச்சை பற்றி முடிவு செய்ய முடியும்' என்று கறாராகச் சொல்லி விட்டார். இருப்பினும் எங்கள் திருப்திக்காக ஒரு டெரிஃப்லின் இன்ஜக்சன் செய்து விட்டார். கன்சல்டிங் ஃபீஸ் முன்னூறு மற்றும் டாக்சி வாடகை ஐநூறு. இன்று இரவு அம்மா சற்று எளிதாக மூச்சு விட முடியும். ஊசி வேலை செய்யும். பார்க்கலாம். ஞாயிறு பகலுக்கான திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. 

தம்பியைப் பற்றிய பேச்சினை மீண்டும் தொடங்கினாள் தேவி. எவ்வளவு சொன்னாலும் தேவியும் இதை விடுவதில்லை. தம்பியின் கண்டுகொள்ளாத் தன்மை குறித்து அம்மாவிற்கும் பெரிதாய் வருத்தமில்லை. அரசாங்க சம்பளம் வாங்கும் பிள்ளை தானே கவனித்துக் கொள்ளட்டும் என்பது அம்மாவின் எண்ணமாக இருக்கலாம். அதைப்பற்றி நானும் கவலை கொள்வதில்லை.  ஆனால், மனைவியின் கேள்விகளைத் தவிர்ப்பதோ பதிலளித்து திருப்தி அடையச் செய்வதோ சவாலானதாகவே இருந்தது.

ஸ்கேன் சென்டருக்குப் போய் அரை நாளை செலவழித்த பின்னர் ரிப்போர்ட்டுடன் திரும்பிய போது ஒரு நிசப்தம். அம்மாவிற்கு நிமோனியாவிற்கான சோதனையில் நெகட்டிவ் வந்திருந்தது. மருத்துவர் ரிப்போர்ட்டை வாங்கி மேலும் கீழும் பார்த்து விட்டு இலேசாகத் தொண்டையைச் செருமிக் கொண்டு பதிலளித்தார். ஒன்றும் பயமில்லை. சற்று பவர்ஃபுல்லான ஆண்டிபயாடிக் மருந்துகளை எழுதியுள்ளேன். ஒரு ஐந்து நாள்களுக்குக் கொடுத்து விடுங்கள். அப்புறம் வந்து என்னைப் பாருங்கள் என்றார். வெளியில் மருத்துவரைச் சந்திக்க நிறைய ரெப்ரசன்டேடிவ்ஸ் காத்துக்கிடந்தார்கள். பெரிய பை. யூனிஃபார்ம். பசி நேரத்தைத் தாண்டிய காத்திருப்பு.  மருத்துவர் நோயாளிகளைப் பார்த்து முடித்த பின்னர் தான் இவர்களைச் சந்திப்பாராம்.  அம்மாவிற்கும் எனக்கும் ஒரு சேர தம்பியின் நினைவு வந்திருந்தது. தம்பி இப்படித்தானே ஒவ்வொரு மருத்துவராய் சந்தித்து அலைகிறான்?!

50 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும் சர்கோபீனியா பிரச்னையை சமாளிப்பது எப்படி?

அது என்னது One Pot ரசம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Sanitary Pad Vs Tampon: எதைப் பயன்படுத்துவது ஆரோக்கியம் தெரியுமா?

உள்ளத்து உணர்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் உதடு மொழி பற்றி தெரியுமா?

பண்டிகை நாட்களில் முகம் ஜொலிக்க சில டிப்ஸ்!

SCROLL FOR NEXT