Women Sleeping 
கல்கி

சிறுகதை: முகம்!

கல்கி டெஸ்க்

- ஜெ.ஜெயகுமார் 

1960களில் ஒரு நாள். அன்றைய தினம் நல்லசேலம் கிராமத்து வீட்டில் பரபரப்பு. தோழியருடன் திருவிழாவிற்கு செல்ல லதாவிற்கு அவர் அப்பா அனுமதி கொடுத்து விட்டார். 

ஐ. நா. சபை தலைவர் போன்ற ஆளுமை மிக்க அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி கடும் போராட்டத்திற்கு பிறகே “ஓகே” வாங்கிக்கொண்டு அருகில் உள்ள செட்டிக்குளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் திருவிழாவிற்கு கிளம்பி கொண்டிருந்தாள் பத்தாம் வகுப்பு சிறுமி லதா... அந்த பஸ் பயணம் இன்னும் எட்டு வருடங்கள் கழித்து அவளுடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் என்பதை அப்போது அவள் அறியவில்லை. 

அந்த காலத்தில், கிராமங்களில் ஏழை வீடுகளில் கோடை விடுமுறையின்போது கிடைக்கப்பெறும் ஒரே ஒரு பயணம் அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோவில் திருவிழாதான். 

லதாவின் ஊரிலிருந்து மங்கூன் வழியாக செட்டிக்குளம் நோக்கி பஸ் விரைந்தது. திருவிழாக்காலம் என்பதால் அந்த 'ரோஸ் டிரான்ஸ்போர்ட்' பஸ் மக்களை நெல்லிக்காய் மூட்டையாக பாவித்து திணித்து வசூலை வாரி குவித்துக்கொண்டிருந்தது. பேராசையால் பஸ் குண்டும் குழியும் நிறைந்த தாரில்லா குறுகிய சாலையில் எக்ஸ்பிரஸ்சாக பறந்து கொண்டிருந்தது. 

முன்சீட்டில் அமர்ந்து லதா இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே வந்தாள். முன்னால் ஒரு சைக்கிள்காரர் சென்று கொண்டிருக்க, பஸ்ஸின் காதை பிளக்கும் ஏர் ஹாரன் முழக்கத்தால் அவசரம் அவசரமாக சாலையில் ஒதுங்க முயன்று பள்ளத்தில் சைக்கிள்காரர் பேலன்ஸ் தவறி விழ, அவரை கண நேரத்தில் நெருங்கிய பஸ், அவர் மீது மோத, அவர் பஸ் பக்கமாக சாய, பஸ் சக்கரம் அவர் மீது ஏறி இறங்க, பயணிகள் கூச்சலிட, பஸ் சடன் பிரேக் போட்டு நின்றது. 

அனைவரும் பதைபதைப்புடன்  கீழே இறங்கி பஸ்ஸின் அடியில் பார்த்த  போது நசுங்கிய சைக்கிள் அருகே பலத்த காயமும் ரத்தமுமாக சைக்கிள்காரர் உடல். 

முகம் மட்டும் தப்பியது என்பதால் அந்த களையான தேஜஸ் நிறைந்த முகம் நீண்ட நாட்கள் லதாவின் இரவுக்கனவுகளில் திரும்பத்திரும்ப ஒளிர்ந்து மறைந்தது. 

ஆக்சிடென்ட் கோர்ட் கேஸ் ஆகிவிட்டதால் சில நாட்கள் கழித்து அந்த பஸ் டிரைவர் காஜா, லதாவின் அப்பா கிராம கர்ணம் என்பதால் அவர் வீட்டிற்கு வந்து “தன் மீது தவறு எதுவும் இல்லையென்றும் சைக்கிள் காரரின் அஜாக்கிரதை” என்றும் கர்ணத்திடம் குமுறினார். 

காஜாவுக்கு மூன்று குழந்தைகள். ஏழ்மை வாழ்க்கை. முடமான அப்பா. கண் தெரியாத அம்மா. துறையூரில் ஒரு கூரை வீட்டில் வாசம். டிரைவர் உத்யோகம் போச்சு என்றால் எந்த பஸ் கம்பெனியிலும் காஜாவை மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

காஜா ஐயரிடம் இரைஞ்சும் குரலில் “சாமி! நீங்கதான் பெரிய மனசு பண்ணி உங்க வீட்டு பாப்பாவை அரியலூர் கோர்ட்டில் சைக்கிள்காரர் மீதுதான் தவறுன்னு சாட்சி சொல்ல வைக்கணும்.”

“நான் உங்களையும் பாப்பாவையும் காரில் கூட்டிக்கிட்டு போய் சாட்சியம் சொன்னவுடன் காரிலேயே உங்க ரெண்டு பேரையும் வீட்டிலேயே இறக்கிவிடறேன்! வர்ற வெள்ளிக்கிழமை விசாரணை சாமி...“ என்று கதறி முடித்தார்.

சைக்கிள்காரர் மீதுதான் தவறு என்று போலீஸ் ரிப்போர்ட்டும் சொல்லியது என்பதால் ஐயர், “நம்மால் ஒரு குடும்பம் வீணாகி போய்விடக்கூடாது” என்று கோர்ட்டுக்கு  வர ஒத்துக்கொண்டார். 

சொன்னபடியே வெள்ளிக்கிழமை கார் வந்து ஐயரையும் லதாவையும் அழைத்து சென்று கோர்ட்டில் லதா சாட்சியம் சொல்லி முடித்தவுடன் மீண்டும் நல்லசேலம் ஐயர் வீட்டில் இறக்கிவிட்டு கண்ணீருடன் காஜா நன்றி தெரிவித்துவிட்டு  விடை பெற்றுக்கொண்டார். 

வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் காஜா பஸ் ஓட்ட ஆரம்பித்து விட்டார். 

வாழ்க்கை பஸ் சக்கரமாக பல வருடங்கள் சுழன்றன.

நன்றாக படித்து பட்டம் பெற்றிருந்தாலும் லதாவுக்கு கல்யாணத்திற்கு பிறகு வேலைக்கு போக விருப்பம் இல்லாததால் அந்த ஒரு கண்டிஷனுக்காக பல நல்ல வரன்கள் தட்டிப்போய் ஒருவழியாக அவள் விருப்பபடியே ஒரு மாப்பிள்ளை கிடைத்து துறையூரில் ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

மணமகள் லதா தோழியர் உறவினர் புடை சூழ மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள். சபைக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, மேடையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி படங்களுக்கு அருகிலிருந்த மாப்பிள்ளையின் மாலையிடப்பட்ட தகப்பனார் போட்டோவை பார்த்து நமஸ்கரிக்க முயன்றவள் அதிர்ச்சியால் திடுக்கிட்டு நின்றாள். 

பல வருடங்கட்கு முன்பு செட்டிக்குளம் பஸ்சில் கூழான உடலில் மிஞ்சிய அதே ஜொலிக்கும் முகம். பல இரவுகளில் கனவில் அவளை விடாது துரத்திய களையான விவேகானந்த முகம்.

அன்றைய இரவு சாந்தி முகூர்த்தத்தில் மாப்பிள்ளை அவர் அப்பா ஆக்ஸிடென்டில் அகால மரணம் அடைந்ததை நினைவு கூர்ந்தார். 

இழப்பீடு ஏதும் கிடைத்ததா என்று பரிவுடன் லதா விசாரிக்க 'யாரோ ஒரு ஸ்கூல் பெண் கோர்ட்டில் சொன்ன சாட்சியால் ஒன்றும் கிடைக்கவில்லையென்றும் ஸ்கூல் டீச்சர் அம்மாதான் தட்டுத்தடுமாறி தன்னை வளர்த்து ஆளாக்கினார்' என்றும்  சொல்லி முடித்தார். 

லதாவின் இதய வீணையின் நரம்புகள் அதிர்ச்சியால் அதிர்ந்தன. ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு “நான்  ஹனிமூன் முடிந்து வேலைக்கு போக விரும்புகிறேன்” என்று சொல்ல, எதிர்பாராத  இன்ப அதிர்ச்சியால் அவளை இறுக அணைத்துக்கொண்டு லைட்டை அணைத்தார் மாப்பிள்ளை.

ஏனோ தெரியவில்லை, இப்போதெல்லாம் லதாவின் கனவில் அந்த முகம் வருவதில்லை.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT