Wishing birthday 
கல்கி

சிறுகதை: உறவுகளின் மதிப்பு!

லக்ஷ்மண் சங்கர்

சென்னை ஆள்வார்ப்பேட்டையின் மேல் தளப் பகுதியில் அமைந்திருந்த அந்த அழகான அலுவலகக் கட்டிடத்துக்குள் 'டக் டக்' என்ற ஷூ சத்ததுடன் நுழைந்தேன். 

மூன்று மாடிக் கட்டிடம். கண்ணாடி, கான்க்ரீட், செங்கல், டைல்ஸ் எல்லாவற்றையும் மிகுந்த அக்கறையுடன் கலந்து கட்டியிருந்த கட்டிடம். பிரமாதமான உள் வடிவமைப்பு. 

'பரசுராம் ஃபார்மா – கார்ப்பரேட் ஆஃபீஸ்' பெயர் பலகை கம்பீரமான கருப்பு நிறத்தில் கதவையொட்டிய சுவரில் செத்துக்கப்பட்டிருந்தது.

40 வருடங்களுக்கு முன் பரசுராம் என்ற முதல் தலைமுறைத் தொழிலதிபரால் தொடங்கப்பட்ட 'பரசுராம் ஃபார்மா' இப்போது இந்தியாவின் மிக மதிக்கப்படும் பட்டியலிடப்படாத (அன்லிஸ்டட்) கம்பெனிகளுள் ஒன்று. வருட விற்பனை ரூ 1,200 கோடி. லாபம் 96 கோடி. கடன் பூஜ்யம். பல பன்னாட்டு ராட்சஸ கம்பெனிகளின் கண்களை ஈர்த்துக் கொண்டிருக்கும் கம்பெனி. கம்பெனியின் பாதி விற்பனை அயல் நாட்டில்.

பரசுராம் ஃபார்மா உரிமையாளர்கள் ரொம்ப சிறிய வட்டத்துக்குள் இருப்பவர்கள். பரசுராம், அவருடைய மனைவி நிர்மலா இரண்டு மகன்கள் (ப்ரவீண், ப்ரகாஷ்) 100% பங்குகளை வைத்திருப்பவர்கள். 

சரி, இப்போது நான் யாரென்று பார்ப்போம். சொந்தத் தம்பட்டம் அடித்துக் கொள்ளாதவன் இந்த ராகவ். படிப்பில் புலி, சிங்கம், கரடி, யானை.. (ஒரு வேளை எல்லாம் சேர்ந்தவனோ?). ஸி. எஃப். ஏ. கூடவே , ஸ்டான் ஃபோர்ட் எம்.பி.ஏ. இணைத்தல் & கையகப்படுத்துதல் (மெர்ஜர் & அக்விஸிஷன்) மற்றும் மதிப்பீட்டுத் துறைகளில் நிபுணன். முப்பது வயதுக்குள் பல மில்லியன் டாலர் ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்திருப்பவன். கோல்ட்மேன் ஸாக்ஸ், மார்கன் ஸ்டான்லீ போன்ற பல நிறுவனங்கள் தீவிரமாக வலை போட்டும் சிக்காமல் சொந்தமாக கன்ஸல்டிங் செய்து கொண்டிருப்பவன். (கொஞ்சம் அதிகமா பேசிட்டேனோ? என்ன பண்றது, அவ்ளோ விஷயங்கள் இருக்கே).

ப்ரவீண் எனக்குப் பரிச்சயமானது கொல்கத்தாவில் ஒரு வியாபாரக் கருத்தரங்கில். என்னை விட 20 வயது மூத்தவராக இருந்தாலும் சகஜமாகப் பழகுபவர். 

சென்ற மாதம் ஒரு நாள் அவர் என்னைக் கூப்பிட்டு “ராகவ், நாங்க கம்பெனியை ஐ.பி.ஓ பண்ணலாமான்னு யோசிக்கறோம். கேன் யூ ஹெல்ப் ஔட் வித் வால்யுயேஷன்? கம்பெனியோட சந்தை மதிப்பு எவ்ளோன்னு கணிக்கணும்.” என்றதும் இருவரும் ஒரு 10 நாள் பணி ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதற்காகத்தான் நான் இப்போது அங்கு வந்திருக்கிறேன். 

“குட் மார்னிங், கேன் ஐ மீட் மிஸ்டர் பரசுராம்?” என் பிஸ்னஸ் கார்டை செக்ரெடரியிடம் காண்பித்தேன். 

“வாங்க மிஸ்டர் ராகவ். மிஸ்டெர் பரசுராம் இஸ் எக்ஸ்பெக்ட்டிங் யூ”

என்னை ஒரு மகா குளுகுளு அறைக்குள் விட்டுவிட்டுச் சென்றார். 

இரண்டு நிமிடங்களில் பரசுராம் நுழைந்தார். வெற்றியைத் தவிர வேறு எதையும் கண்டிராத தோற்றம். அதே சமயத்தில் முகத்தில் ஒரு லேசான மென்மை.  

“வெல்கம் ராகவ். கம்பெனி மேனேஜ்மென்ட் கிட்ட ஒன் வேலயப் பத்தி சொல்லிட்டேன். யூ ஹாவ் ஃப்ரீ ஆக்செஸ் டு ஆல் இன்ஃபோ.”

“தாங்க்ஸ் சார்”

“எப்போ ஆரம்பிக்கப் போற?”

“இப்பவே”

அவர் செக்ரெடரியை அழைத்தார் “குஹன், ராகவ் கேக்கற விஷயங்கள அரேன்ஜ் பண்ணிக் குடுங்க”

நான் அவரிடமிருந்து விடை பெற்றேன். 

அடுத்த 10 நாட்கள் ராகவ்வின் உத்வேகத்தையும் மூளைத்திறனையும் பரசுராம் ஃபார்மாவின் அத்தனை பெரிய தலைகளும் கண்கூடாகப் பார்த்தார்கள். எனக்குப் புதிதல்ல இது. 

“ராகவ், யூ ஆர் ப்ரில்லியன்ட்” என்று மாய்ந்து போனார் ஸி.ஃப்.ஓ. 

“ஒங்க கண்ணோட்டம் ரொம்ப வித்தியாசமா இருக்கு” இது சேல்ஸ் டைரக்டர். 

“நீங்க இப்புடி, நீங்க அப்புடி” ன்னு பல போற்றுதல்கள். 

(நான் சொந்தத் தம்பட்டம் அடிப்பவன் அல்ல. அதனால் தொடருவோம்.) 

பத்தாவது நாள் ப்ரவீண், ப்ரகாஷ், மற்ற மூத்த நிவாகிகள் முன் என் அறிக்கையை சமர்ப்பித்தேன். பரசுராம் ஊரில் இல்லை. 

“சொல்லு ராகவ், வேர் டு வீ ஸ்டான்ட்” ப்ரவீண் கேட்டார்.

கம்பெனியோட பலங்கள், பலவீனங்களை விவரித்தேன். அடுத்தது மதிப்பீட்டுக்கு வந்தேன்

“ஸேல்ஸ் வெச்சு பாத்தா பரசுராம் ஃபார்மாவோட மதிப்பு 4,800 கோடி – அதாவது 4 டைம்ஸ் ஸேல்ஸ். ஆனா வருட லாபம் 96 கோடிதான். அதாவது கம்பெனியோட மதிப்பான 4,800 கோடிக்கு 2% தான். மார்க்கெட்ல கொறஞ்சது 4% எதிர்பார்ப்பாங்க. அதுனால, நீங்க வருஷத்துக்கு 192 கோடி லாபம் பண்ணனும்.”

“எப்படி? அதுக்கு என்ன வழி?”

“இங்கதான் ஒங்க பலவீனம் வெளிப்படுது. மத்த ஃபார்மா கம்பெனிங்களவிட ஒங்க லேபர் காஸ்ட் 10% ஜாஸ்தி. அதைக் கொறைக்கணும். ஆட்களோட எண்ணிக்கை சரியானதுதான்; ஆனா ஒவ்வொருத்தருக்கும் நீங்க குடுக்கற சம்பளம் ரொம்ப அதிகம். எனக்கே பரசுராம் ஃபார்மாவில் வேலைக்கு அப்ளை பண்ணலாம்னு நப்பாசை வந்தது” லேசாக சிரித்துவிட்டுத் தொடர்ந்தேன், “என்னோட ஒரே பரிந்துரை - அட் லீஸ்ட் அடுத்த 2-3 வருஷத்துக்கு சம்பள உயர்வு செய்யக் கூடாது.”

ப்ரவீண் என்னைக் கூர்ந்து பார்த்தபடி “இத எங்க அப்பா கிட்டயே சொல்லு. லெட்ஸ் ஸீ ஹிஸ் ரெஸ்பான்ஸ். அவருக்கு நாளைக்கு 75த் பர்த்டே. 7 மணிக்கு தாஜ் கோராமண்டலுக்கு வா.”

மறு நாள் மாலை 7 மணி. தாஜ் கோராமண்டல் பரபரப்பாக இருந்தது. எங்கெங்கும் ப்ரகாசம். அந்தப்  ப்ரகாசத்தை அதிகரிக்கும் (அல்லது அதற்குக் காரணமே அவர்கள்தானா) மிக அழகான பெண்கள். 

மேரேஜ் ஹால் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது – முக்கால்வாசி பேர் பரசுராம் ஃபார்மாவின் பணியாளர்கள். மீதி பரசுராமுடைய உறவினர்கள், நண்பர்கள். 

“மெனி ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே சார்.” நான் பரசுராமுக்கு வாழ்த்து சொன்னேன். 

“தாங்க்ஸ் ராகவ். ரிப்போர்ட் இஸ் வெல் மேட்.  எக்ஸெல்லென்ட் வொர்க்”

“தாங்க்ஸ் சார். என்னோட முக்கியமான ரெக்கமன்டேஷன நீங்க பாத்துருப்பீங்க. அதுக்கு நீங்கதான் ரெஸ்பாண்ட் பண்ணணும்னு மிஸ்டர் ப்ரவீண் சொன்னார்.”

“நாளைக்கு மார்னிங் நான் முடிவ சொல்றேன்.”

நான் கூட்டத்தில் இருந்த ப்ரவீணை  நோக்கிச் சென்றேன். 

“ஹாய் ராகவ், அப்பா கிட்ட பேசினியா?”

“நாளைக்கு பதில் சொல்றேன்னு சொன்னார்”

“ப்ரவீண், எப்புடி இருக்க?” ஒரு 60 வயதுக்காரர் வந்தார். 

“ஹாய் வெங்கட் மாமா, ஆல் குட்.” 

வெங்கட்டுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார் ப்ரவீண். “ராகவ், மாமா எங்க அப்பாவுக்கு ரொம்பக் க்ளோஸ்”. ப்ரவீண் அவரிடம் நான் செய்து கொண்டிருந்த பணியையும் கம்பெனி குறித்து நான் செய்த  பரிந்துரையையும் விளக்கினார். “அப்பாகிட்ட பதிலுக்காக வெய்ட் பண்ணிட்டுருக்கோம். மாமா, அப்பவோட பதில் என்னவா இருக்கும்னு நெனைக்கரீங்க?” 

“நோ வே” வெங்கட்  என்னைப் பார்த்து சொன்னார். ”மிஸ்டர் பரசுராம் சம்பள உயர்வை நிறுத்த ஒத்துக்க மாட்டார். “

நான் கேட்டேன் “ எப்படி இவ்ளோ ஷூவரா சொல்றீங்க?”

வெங்கட் தன் பர்ஸை எடுத்து அதற்குள்ளிருந்து ஒரு பிளாஸ்டிக் கார்டை எடுத்தார். ”மிஸ்டர் பரசுராம் என்னோட மென்டர். 20 வருஷத்துக்கு முன்னால் இந்தக் கார்டை பிரிண்ட் பண்ணி என்ன மாதிரி அவரை ஃபாலோ பண்ற எல்லாருக்கும் குடுத்தார். ரீட் திஸ்”

நான் வாங்கிப் படித்தேன். “உறவுகளை மதி – குடும்பம், நண்பர்கள், கூட வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் இவர்களுடன் இருக்கும் உறவுதான் உண்மையான செல்வம்.”   

நான் அவரிடம் கார்டைத் திரும்பித் தந்தேன். திடீரென்று ஒரு சலசலப்பு. பார்வையைத் திருப்பினேன். 

சக்கர நாற்காலியில் சுமார் ஒரு 50 வயதான மனிதர். பரசுராம் அவரிடம் விரைந்து சென்றார். 

“ஹாப்பி பர்த்டே பரசுராம் சார்” நடுக்கமான குரலில் வாழ்த்தினார். நான் அவர் கைகளும் நடுங்குவதைப் பார்த்தேன். பார்க்கின்ஸன்ஸா இருக்குமோ?

பரசுராம் அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு “தாங்க்ஸ் சூரி” என்றார். அவர் கண்களில் கண்ணீர். நான் சுற்றிலும் பார்ததேன். நிறைய முகங்களில் கண்ணீர். எனக்குப் புரியவில்லை. 

“ராகவ்..” ப்ரவீண் என்னிடம் பேசினார். அவர் கண்களிலும் கண்ணீர் “சூரி கம்பெனியோட ரிசர்ச் டைரெக்ட்டரா இருந்தார். நாலு வருஷம் முன்னாடிதான் ரிட்டயர் ஆனார் – அப்போ அவருக்கு 45 வயசுதான்.” 

நான் நினைத்தது சரிதான் “பார்க்கின்ஸன்ஸா?”

ப்ரவீண் நெகிழ்ந்த குரலில் சொன்னார் “அதை விட மோசம் – பார்க்கின்ஸன்ஸ் கூடவே அல்ஸைமர்ஸ். கொஞ்சம் கொஞ்சமா எல்லா விஷயத்தையும் மறக்க ஆரம்பிச்சுட்டார். சில சமயம் ரொம்ப நெருக்கமான சொந்தக்காரங்களையும் மறந்துடுவார். ஆனா, அப்பாவை மட்டும் நினைவில வெச்சிருக்கார். கரெக்ட்டா பர்த்டே விஷ் பண்ண வந்துடுவார்.”

நான் சிலிர்த்துப் போனேன். 

“அப்பா  நடத்தரது ஒரு குடும்பம்; வெறும் கம்பெனி இல்ல. இதை நீ நேர்ல பாக்கணும்ங்கறதுக்காகத்தான் ஒன்ன இந்த பார்ட்டிக்கு இன்வைட் பண்ணினேன். வா, லெட்ஸ் ஹாவ் டின்னர்.” 

தன் கம்பெனியின் மதிப்பை அவர் உறவுகளால் எடை போடுபவர் என்பதையும், அதனால் நான் செய்த பரிந்துரையை அவர் நிராகரித்து விடுவார் என்பதையும்  உணர்ந்தேன்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT