Tamilaga Vettri Kazhagam 
கல்கி

அரசியல் அலசல் - உதய் நவமி! விஜய் தசமி!

காலச்சக்கரம் நரசிம்மன்

வழக்கமாக, புரட்டாசியில் வரும் நவராத்திரி கலாட்டா, இப்போது ஆவணி மாதத்தில் தொடங்கி விட்டது. ஒன்றிய அரசு என்று, மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமலாக்க நடவடிக்கை என்று மத்திய அரசும் மோதி கொண்டிருக்க, திடீரென்று தாமரை சூரியனை கண்டு மலர்ந்திருக்கிறது. இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேற்றைய அறிக்கை ஒன்றில் திடீர் என்று, மத்திய அரசு என்று அழைத்து, ஒன்றியத்தை கைவிட்டார் ஸ்டாலின். 

மோதியபோது ஒன்றியம்; ஒன்றியபோது மத்தியம்!

முதல்வரின் அறிக்கையே அவர்களிடையே சமாதான கொடி பறந்து கொண்டிருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது.  

சனாதனத்தை வேரறுக்க போகும் திராவிட மாடல் என்று திமுக சொல்ல, ஊழல் அமைச்சர்களை சிறையில் தள்ளுவோம், என்று பாஜகா சொல்ல, அவர்களிடையே ஆன போர் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருந்த போது...

திடீரென்று,  

தாமரை கன்னங்கள்! 

தேன்மலர் கிண்ணங்கள்  

எத்தனை வண்ணங்கள், ... என்று திமுகவும்  

மாலையில் சந்தித்தேன், 

மையலில் சிந்தித்தேன் ,

 மங்கை நான் கன்னித்தேன்,

 காதலன் தீண்டும்போது,

 கைகளை மன்னித்தேன் என்று பாஜகவும் திடீர் என்று டூயட் பாடும் காரணம் என்ன?

தமிழ்நாட்டின் தளபதி, டெல்லி பாதுஷாவிடம் சரணடைந்தாரா? அல்லது டெல்லி சுல்தான் தான் தளபதியிடம் சமாதானம் பேசினாரா?

பெருத்த ஆச்சரியங்கள் என்னவென்றால், தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்ப ஆட்சியை, ஊழல் வாதிகளை வீழ்த்துவேன் என்று சூளுரைத்த பிரதமரை,  கருணாநிதியை பெரும் தலைவர் என்றும், வருங்காலத்திற்கு வழிகாட்டி என்றும் பேச வைத்திருக்கிறது திமுக. திமுக ஆட்சிக்கு எதிராக நடை பயணம் மேற்கொண்ட அண்ணாமலையை, கலைஞர் கருணாநிதியின் சமாதியில் வந்து அஞ்சலி செய்ய வைத்துள்ளது. இந்த மாற்றங்களுக்கு என்ன காரணம்?

எல்லா மாற்றங்களுக்கும் காரணம், மூன்றெழுத்து! நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக).

விஜய்யை முதலில் விளையாட்டாக எடுத்து கொண்டிருந்த திமுக, அவர் கட்சி பெயர் அறிவித்ததும், விழித்து கொண்டது. விரைவில் கட்சிக் கொடியை  வெளியிடுவேன் என்று விஜய் அறிவித்ததும்தான், ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை அவசரமாக துணை முதல்வர் பதவியில் அமர்த்தி, பட்டாபிஷேகம் செய்ய திட்டமிட்டார். உதயநிதியை பற்றி மக்கள் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக, ஒரு பத்திரிகையாளரை விட்டு, அவரே அந்த கேள்வியை கேட்க செய்து, பதில் அளிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ஸ்டாலின் அப்போது  நகைச்சுவையாக கூறியது, மக்களுக்கு தெளிவாக புரியவில்லை.

Kalaignar coin

அதனால், 'உதயநிதி விரைவில் துணை முதலமைச்சர் ஆக போகிறார்' என்று அமைச்சர்கள் பேசத் தொடங்க, சுதந்திர தின விழாவுக்கு பிறகு கவர்னர் தேனீர் விருந்தில், கவர்னர் ரவியுடன் மிகவும் சகஜமாகவும், சுமூகமாவும் பழகினார் ஸ்டாலின். எனவே, உதயநிதி பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்தாகிவிட்டது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து கூறி வந்தனர். அதன் பிறகே மத்திய அரசுடன், நட்புக் கரம் நீட்டத்தொடங்கி விட்டார், ஸ்டாலின். 

கலைஞர் நாணய விழாவில், ராஜ் நாத், அண்ணாமலை கலந்து கொண்டது பெரிய திருப்பமாக மாற, திடீரென்று, இரு கட்சிகளும் தோழமை பாராட்டுவதற்கான காரணம் மட்டும் புரியாமல் இருந்தது.

Udhayanidhi and Jay Shah

உதயநிதி, அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் நெருங்கிய நண்பர். அவர் மூலமாக  இரு கட்சிகளிடையே சுமூகமான உறவை ஏற்படுத்தி, கூட்டணிக்கு கடைக்கால் போட்டிருந்தார் உதயநிதி.  

அமித் ஷா மகன், ஜெய் ஷா வுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் ஆவதற்கு உதயநிதி எல்லா வித உதவியும் செய்ய, அதற்கு பிரதிபலனாக, அமித்ஷா கலைஞர் நாணய விழாவுக்கு அமைச்சர் ராஜ்நாத்தை அனுப்பி, திமுகவை கவுரவித்தார் .  

குரு வாரம் (வியாழக்கிழமை) அன்று கட்சி கொடியை வெளியிட்டார் விஜய். சிவப்பு கொடி நடுவில் மஞ்சள் என்று இரு வர்ண கொடி! நடுவே ஒரு வட்டம். வட்டத்தின் இரு புறங்களிலும், இரு கூர்மையான தந்தங்கள் கொண்ட யானைகள், முன்னங்கால்களை உயர்த்தி நிற்கின்றன. வட்டத்தின் நடுவே, வாகை பூ.  

அந்த கால மன்னர்கள், போரில் வெற்றி பெற்றால் அணியும் வாகை மாலையில் காணப்படும் பூ.  

ஆக, விஜய் மிக தீவிரமாக அரசியலில் இறங்கியுள்ளார், என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. 

இளைய தளபதியின் திடீர் வருகையால்தான், தாமரை பூ கதிரவனை பார்த்து மலர்ந்திருக்கிறது. அதே போல், சூரியனும், ஒன்றியத்தை மத்திய அரசு என்று மாற்றி கொண்டது.  

விஜய் அவ்வளவு பெரிய சக்தியா என்று பலரும் கேட்கலாம்!  

எப்போதுமே, சரித்திர சம்பவங்களும், அரசியல் நிகழ்வுகளும், மீண்டும் மீண்டும் திரும்பும். அதைத்தான் ஆங்கிலத்தில் History Repeats என்று சொல்வார்கள்.

Jayalalitha-MGR-Karunanidhi

தமிழக அரசியலில் புதிய தலைமுறை உருவாகி கொண்டிருக்கிறது. ஜெயலலிதா,  கருணாநிதி ஆகியோர் மரணங்களை தொடர்ந்து, உதயநிதி, அண்ணாமலை, எடப்பாடி என்று புதிய தலைவர்கள் தோன்றினார்கள்.   

1972 ல் கலைஞர் கருணாநிதி, தனது மகன் மு.க. முத்துவை 'பிள்ளையோ பிள்ளை' போன்ற படங்களில் நடிக்க வைத்து தனக்கு வாரிசாக உருவாக்க முயன்றார். எம்ஜிஆரை காப்பி அடித்து, மு.க.முத்து நடித்தாலும், அதனால் அவர் புகழ் பெறவில்லை. ஆனால் எம்ஜிஆர் சட்டென்று விழித்துக்கொண்டு, கணக்கு கேட்க, திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு, தனிக்கட்சியை தொடங்கினார் .  

கருணாநிதி தனது மகனை முன்னிறுத்தியதால்தான் எம்ஜிஆர் வெளியேறினார். அதே நிலையில் தான் இன்று ஸ்டாலின் இருக்கிறார். தனது மகன் உதயநிதியை துணை முதல்வராக உட்கார வைத்து, பிற்காலத்தில் அவர் முதல்வர் ஆவதற்கு எவ்வித சிரமும் இருக்கக்கூடாது என்று எண்ணுகிறார். கலைஞர் கருணாநிதி கடைசி வரையில், ஸ்டாலினை முதல்வராக அறிவிக்காததால், நொந்து போயிருந்த, ஸ்டாலின் தனது மகனுக்கு அப்படி ஒரு நிலை உருவாகக்கூடாது என்றுதான், தன்னுடனே, தன் மகனை இட்டு செல்கிறார்.  ஸ்டாலின், உதயநிதியை முதல்வர் நிலைக்கு மெதுவாக எடுத்துச் செல்லும் வேளையில், (எம்ஜிஆர் திடீர் என்று உருவானது போல) இன்று விஜய் உருவாகி இருக்கிறார்.

MGR - Vijay

எம் ஜிஆர் என்பதும் மூன்றெழுத்து! விஜய்யும் மூன்றெழுத்து.

எம்ஜிஆரையும், விஜயையும் ஒப்பிடலாமா?

அந்த காலத்தில், பெண்களும், மூதாட்டிகளும், மாணவரக்ளும், எம்ஜிஆர் மீது கொண்டிருந்த அதே வெறித்தனமான பாசத்தை, இன்று விஜய் மீது, பெண்கள்,  மூதாட்டிகள், இளவட்டங்கள், மாணவர்கள் ஆகியோர் செலுத்தி வருகின்றனர். இளம் பெண்கள், விஜய் வீட்டின் வாயியில் அவரை காண தவமாய் தவம் இருந்து வருகிறார்கள்.  

எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் புகழ் பெற்று வந்து கொண்டிருந்தவர், அண்ணாமலை. ஆனால் அப்படிப்பட்டவர், கலைஞர் கருணாநிதி சமாதியில் திமுகவினருடன் தோள் உரசி நின்றது, அவரை ஆதரித்த பலருக்கு அதிர்ச்சியை  தந்திருக்கிறது. 

காங்கிரஸ், வழியில் பாஜகவும் இனி மாறி மாறி இரு கழகங்களை நம்பிதான் செயலாற்ற போகிறது என்பது தெரிந்து விட்டது.  

பாஜகவை மலை போல் நம்பி இருந்த தேசிய உணர்வாளர்கள், காங்கிரஸ் இனி போணி ஆகாது என்று அந்த கட்சியில் உள்ள காமராஜ் பக்தர்கள் மற்றும்,  இளவட்டங்கள், திமுகவின் குடும்ப நண்டுபிடியில் இனி தங்களுக்கு வளர வாய்ப்பில்லை என்று நினைக்கும் திமுகவின் இளைஞர்கள், பிரேமலதாவை பிடிக்காத விஜயகாந்த் ஆதரவாளர்கள், சீமான் கட்சியின் தம்பிகள் ஆகியோர் இனி தங்களுக்கு புகலிடம் விஜய் கட்சியான தமிழக வெற்றி கழகம் ஒன்றுதான் என்று நினைக்க தொடங்கவும் வாய்ப்பு உண்டு.  

ஜெயலலிதா ஆட்சியில், 'டைம் டு லீட்' என்று விஜய் ஒரு படத்தில் வசனம் ஒன்றை பேச, அதனால் அப்செட் ஆன ஜெயலலிதா அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்த,  ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்று அவரை சமாதானப்படுத்த காத்திருந்தார் விஜய். அப்போதே அவருக்கு அரசியல் எண்ணம் தோன்றி விட்டது.  

ஒரு கட்டத்தில், விஜய் தந்தை சந்திரசேகர், கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்தார். ஆனால் தந்தையிடம் பிரச்சனை ஏற்பட்டு, விஜய் தனது தந்தையை அடியோடு கத்தரித்து விட்டார்.  

தந்தையை வெளியே அனுப்பிய காரணம், தன்னிச்சையாக செயல்படுவதற்கு என்று  கூறினாலும், உள்ளே விஜய் - சந்திரசேகர் உறவு முறிய, விஜயுடன் நெருக்கமாக இருக்கும் ஒருவர் தான் காரணம் என்று சொல்லப்பட்டது .  

இப்போது கட்சியையும், கொடியையும் அறிவித்துவிட்ட விஜய்யின் எதிர்கால திட்டம் என்ன?

பாஜகவும், திமுகவும் உறுதியாக கூட்டணி அமைத்து கொள்ளும் நிலையில் உள்ளன. நிதிஷ் குமார் எந்த சமயத்திலும் (கம்பி) நீட்டிஷ் குமார் ஆக மாறலாம். சந்திரபாபு நாய்டுவும் நிறைய கோரிக்கைகளை வைப்பதால், பாஜகவுக்கு முள்ளங்கி பத்தையாக திமுகவின் 22 எம்பிக்கள் உதவக்கூடும். இனியும் காங்கிரஸ் என்னும் மூழ்கும் டைட்டானிக் கப்பலை நம்பி பிரயோஜனம் இல்லை என்று திமுக உணர்ந்து விட்டது.  

பாஜக திமுக பக்கம் போய்விட்டதால் இனி அதிமுக புதிய கூட்டணிகளை உருவாக்கலாம். அதிமுகவுடன் கூட்டு வைக்க, விஜய்க்கு எந்த தயக்கமும் இருக்காது. 2026 ல் யார் முதல்வர் என்கிற பிரச்னையை எடப்பாடி எழுப்பினாலும், விஜய் முதல்வர் பதவியை எடப்பாடிக்கு விட்டு கொடுத்துவிட்டு, கூட்டணி ஆட்சியில் தனது ஆதரவாளர்களை அமைச்சராக நியமிக்கலாம். விஜய்க்கு காலமும் நேரமும் சாதகமாக இருக்கிறது. நிதானமாக முதல்வர் பதவிக்கு வரலாம்.

Annamalai - Udhayanidhi Stalin - Edappadi Palanisamy - Vijay

உதயநிதி, அண்ணாமலை கூட்டணி அமைத்தாலும், அவர்களுக்கு விஜய் - எடப்பாடி கூட்டணி வலுவான போட்டியை தரும். ஒரு வேளை, சீமானும் விஜய் கூட்டணியில் சேர்ந்தால், ஜெயலலிதா, கலைஞர் மரணங்களுக்கு பிறகு டல்லடிக்கும் தமிழக அரசியல் விறுவிறுப்பாக மாறும்.  

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்! விஜய் வீராணம் ஏறி போல திகழ்வார். வெள்ளாறு பாய்ந்து வந்து வீராணத்தில் விழுவது போல அவருக்கு ஆதரவு பெறுக வாய்ப்பு உண்டு. 74 மதகுகள் வழியாக தனது கட்சியின் வேர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி, அரசியலில் வலுவாக திகழ்வார்.  

முதலமைச்சர் பதவியில் இருந்த கலைஞர் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் இடையே நடந்த யுத்தத்தில், திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம் ஜிஆர் ரின் சக்தி நிரூபணமானது. 

ஆனால் உதயநிதி பதவிக்கு வருவதற்கு முன்னதாகவே நவமி பிறந்து விட்டது. விஜய்யின் உருவில் அவருக்கு வலுவான போட்டி உருவாகி உள்ளது.  

இன்று உதய்கு நவமி! எனவே அவர் ஒரு நல்ல நாளுக்காக காத்திருக்கிறார். ஆனால் அவருக்கு நல்ல நாள் அமைவதற்குள்ளாக, விஜய்க்கு தசமி தொடங்கி விட்டது.  

'ஜெய விஜய் பவ!' என்று அவரது ஆதரவாளர்கள் இப்போதே பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.  

ஆவணி, புதிய அணிகளின் தொடக்கம் என்றுதானே சொல்ல வேண்டும்?!!

மன அமைதியைத் தரும் அதிகாலை தியானம்!

ஆந்தைகள் இரவில் பார்ப்பது எப்படித் தெரியுமா?

வளர்சிறார்கள் வளர்சிதை மாற்றம் சிறப்புடன் நடைபெற உட்கொள்ள வேண்டிய உணவுகள்!

ஐந்தாம் நாள் - மகோன்னத வாழ்வருள்வாள் மஹாலக்ஷ்மி!

Scientists Best Quotes: அறிவியலாளர்களின் தலைசிறந்த15 மேற்கோள்கள்! 

SCROLL FOR NEXT