அறிமுகம்:
தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள்தான் உள்ளன. சில மாநிலங்களில் நேரடி வாக்களிப்பும் தொடங்கிவிட்டது. வராதோர் வாக்குகளும் அனுப்பபட்டு, பூர்த்தி செய்யப்பட்டுத் தேர்தல் ஆணையங்களுக்குச் சென்றவண்ணம் உள்ளன. ஆயினும் இந்த மதில்மேல் பூனை மாநிலங்களில் முடிவு தெரிய எத்தனை நாட்கள் ஆகுமோ தெரியாது.
எந்த நாட்டிலும் தேர்தலின்போது ஒருவரை ஒருவர் குறைகூறுவது வழக்கம்தான். ஒவ்வொருவரின் கொள்கைகளைப் பற்றியும், அவர்களது தேர்தல் வாக்குறுதிகளைப்பற்றிக் காரசாரமான விவாதமாக இருந்தால் அது வரவேற்கப்படவேண்டியதே. ஆனால் அது ஒருவர் மற்றவர் மேல் சேற்றை வாரியடிக்கும் தனிமனிதத் தாக்குதலாக இருப்பின், அது நடுநிலை வகிக்கும் வாக்காளர்களை வெறுப்படையச் செய்கிறது. அன்னார் வாக்களிக்காமல் இருந்துவிட வாய்ப்பும் ஏற்படுகிறது. அதனால் ஒரு சில ஆயிரம் ஓட்டுகளில் நாட்டின் தலைவிதி மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
சேற்றை அள்ளி வீசும் ட்ரம்ப்பும், அவர் ஆதரவாளர்களும்:
ட்ரம்ப் திரும்பத் திரும்ப கமலா ஹாரிஸ் மனநலம் குன்றியவர், அறிவு குறைந்தவர் என்றும், பொதுவுடமைக் கட்சி (கம்யூனிஸ்ட்) ஆதரவாளர் என்றும் பேசிவருகிறார். இது போதாதென்று, கமலாவை சொல்லத்தகாத கெட்ட வார்த்தைகளால் தனிப்பட்ட நிதி திரட்டும் கூட்டத்தில் திட்டியுள்ளதாகச் செய்தி வந்துள்ளது.
சி.பி.எஸ். ஊடகத்தின் நிகழ்ச்சியிலும், கமலா ஹாரிஸுடன் இரண்டாம் நேர்முக விவாதத்திலும் கலந்துகொள்ள மறுத்துவிட்டார்.
கெட்ட மரபணு உள்ள சட்ட விரோதக் குடியேறிகள் அமெரிக்காவுக்குள் படையெடுத்து வந்துவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
தான் ஆட்சிக்கு வந்தால், தனக்கு ஆதரவளிக்காது எதிர்த்துச் செயல்பட்டவரை நாட்டுக் காப்புப் படை (National Guard), ராணுவம் (Army) மூலம் அடக்கி ஒடுக்கப் போவதாகவும் கூறினார். இதில் பிரதிநிதி சபையின் தலைவராகப் பணியாற்றிய நான்சி பலோசியும் அடக்கம்.
மேலும், கலிஃபோர்னியா மாநிலத்துக்கு நடுவண் அரசு ஆபத்துதவியை நிறுத்திவைப்பதாகவும், சி.பி.எஸ் ஊடகத்தின் லைசென்சை ரத்து செய்வதாகவும் கூறினார். ட்ரம்ப்பின் இந்த மிரட்டலை வெற்றுவேட்டு என்று எடுத்துக்கொள்ள மக்களாட்சியில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவரால் இயலவில்லை.
சென்ற தேர்தல் முடிவில் அவர் தோற்றதை, அவரும், அவருடைய தற்பொழுதைய துணை அதிபர் வேட்பாளரும் ஒப்புக்கொள்ளாது மறுத்துவருகிறார்கள்.
2020 ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்கச் சட்ட மன்றத்தில் அத்துமீறி நுழைந்து, மக்கள் பிரதிநிதிகளை உயிருக்குப் பயந்து சுரங்கப்பாதை வாயிலாக ஓடவைத்த நிகழ்ச்சியை, அன்பு நாள் (day of love) என்று வர்ணித்தார். தொலைக்காட்சியில் அந்நிகழ்ச்சியைக் கண்ட எவரும் வன்முறை தாண்டவமாடிய அந்த நாளை அன்பு நாள் என ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.
இதில் வியப்பு என்னவென்றால், எந்த டெட்ராய்ட் நகரை ட்ரம்ப் இழித்துப் பேசினாரோ, அந்த நகரின் டெமாக்ரடிக் கட்சிச் சேர்ந்த மேயர் (அரபு இனத்தவர்), ட்ரம்ப்புடன் சேர்ந்து, ஒரே மேடையில் அவருக்கு ஆதரவாகப் பேசினார். இது பலரையும் வியப்படைய வைத்தது.
விஸ்கான்சின் மாநிலத்தில் வாக்காளர் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ட்ரம்ப், திடுமென்று பதில் அளிப்பதை நிறுத்திவிட்டு, பிண்ணனி இசைக்கு ஆடத் தொடங்கினார். இது கிட்டத்தட்ட அரைமணி நேரம் நடந்தது.
ட்ரம்ப்புக்கு ஆதரவாக இலான் மஸ்க், அடெல்சன் (இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் பெண்மணி), ரிச்சர்ட் உய்ஹ்லெய்ன் ஆகியோர் கிட்டத்தட்ட $220 மில்லியன் வழங்கியுள்ளனர்.
கமலாவின் எதிர்த் தாக்குதல்:
ட்ரம்ப்புக்கு ஆதரவான ஃபாக்ஸ் ஊடகத்தில் கமலா ஹாரிஸ் நேர்முகப் பேட்டியில் கலந்துகொண்டார். அவரைப் பேட்டிகண்ட ப்ரெட் என்பவர், கேள்வி கேட்டுவிட்டு, பதிலளிக்க விடாது குறுக்கிட்டார். தவறான செய்திகளையும் கூறினார். கமலா அதை உடனுக்குடன் மறுத்து, தன் தரப்பை நிலை நாட்டினார்.
கமலாவும் ட்ரம்ப்பை ‘மறை கழண்டவர் (unhinged), நிலையான புத்தி இல்லாதவர் (unstable)‘ என்று வசைபாடி வருகிறார். இதுவரை ட்ரம்ப்பின் கொள்கைகளைப் பற்றி மட்டுமே குறைசொல்லி வந்தவர், திடுமெனத் தனிமனிதத் தாக்குதலில் இறங்கியது நடுநிலைமையாளருக்கு வருத்தமளிக்கிறது.
அவருக்கு ஆதரவாக முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் க்லின்ட்டன், ஆகியோர் பரப்புரை செய்து வாக்குச் சேகரிக்க முயன்று வருகின்றனர். இருவருக்கும் இருக்கும் நல்ல மதிப்பு, கருப்பு இனத்தோரை வாக்களிக்க வரச்செய்யும் என நம்பப்படுகிறது.
கடந்த மூன்று மாதத்தில் கமலாவுக்கு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் நிதியுதவி அதிகப் பணம் அளிக்காத நடுத்தர மக்கள் மூலம் கிட்டியுள்ளது.
வாக்குப் பதிவும், ரிபப்லிகன் கட்சியின் சில்விஷமங்களும்:
மதில்மேல் பூனை மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை வாக்குப் பதிவு முடிவுகளை மறுக்கவோ, சந்தேகப்பட்டுத் தள்ளுபடி செய்யும் பொருட்டு, குடியுரிமை இல்லாதவர்கள் ஓட்டளிகிறார்கள் என்ற சான்றற்ற குற்றச்சாட்டுடன் முன்பதிவு செய்துள்ளனர்.
அனைத்து ஓட்டுகளையும் கையால் எண்ணவேண்டும் என்று ரிபப்லிகன் சார்பான ஜார்ஜியா மாநில தேர்தல் ஆணையம் கொண்டுவந்த முடிவை எதிர்த்துப் பதிந்த வழக்கை ஏற்று அந்த மாநில நீதிபதி அந்த முடிவை சட்ட அமைப்புக்குப் புறம்பானது எனத் தள்ளுபடி செய்துவிட்டார். தேர்தல் ஆணையம் அப்பீல் செய்திருக்கிறது.
இதற்கிடையில் இலான் மஸ்க் கணினியால் இயக்கப்படும் வாக்களிப்பு எந்திரங்களை நம்பக்கூடாது என்று பொய்ப்பரப்புரை செய்கிறார். இவரால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து டெஸ்லா கார்களும் கணினிகளால், வாக்களிப்பு எந்திரங்களைவிடச் சிக்கலான செயலிகளால் இயக்கப்படுபவை என்பதை ஏன் மறந்தார் என்பது வியப்பாகவே உள்ளது.
வாக்குப் பதிவு நிலவரம்:
பணவீக்கத்தைக் கட்டுப்படுவதற்கும், சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்கும் ட்ரம்ப்தான் சிறந்தவர் என்று இன்னும் பலர் நம்புவதாக வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன. அது கமலாவுக்கு நடுநிலையாளர் வாக்கைக் குறைக்கக்கூடும்.
நேரடி வாக்களிப்புக்கு முன்னதாக அனுமதியுள்ள மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு தொடங்கிவிட்டது. வராதோர் வாக்குச் சீட்டுகளும் வந்து குவிகின்றன என்று தேர்தல் ஆணையங்கள் கூறுகின்றன.
அரிசோனாவாசியான நான் ‘வராதோர் வாக்குச்சீட்டை’ப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டேன். யாருக்கு வாக்களித்தேன் என்பது தேர்தல் ஆணையத்துக்கே வெளிச்சம்!
அடுத்த வாரம் தொடர்வோம்…