US Election 2024 
கல்கி

US Election 2024: Part 14 - மதில்மேல் பூனை மாநிலங்களில் மறு எண்ணிக்கை நடத்தப்படுமா? என்னென்ன விபரீதங்கள் நடக்குமோ?

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம் – 10

ஒரு அரிசோனன்

இன்னும் ஒருவாரம் பத்து நாள்களுக்குள் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துவிடும். ஆனால் எவர் அதிபர் ஆவார் என்பது தெரிய எத்தனை நாள்கள் ஆகுமோ, என்னென்ன விபரீதங்கள் நடக்குமோ... அனைவருக்கும் திகிலாகத்தான் உள்ளது. 

2020 ஜனவரி 6ல் நடந்தமாதிரி ஒழுங்கின்மை நடக்குமா, வன்முறை தலைதூக்குமா, அல்லது வென்றவர் அமைதியான சூழ்நிலையில் அதிபர் பதவி ஏற்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கருத்துக் கணிப்புக்கு உண்மையாக எவரும் பதில் சொல்கிறார்களா அல்லது குழப்பம் விளைவிப்பதற்காக பதிலை மாற்றிச் சொல்கிறார்களா என்றும் தெரியவில்லை. 

தொலைக்காட்சியில் இடைவெளியின்றிக் காட்டப்படும் தேர்தல் விளம்பரங்களும், ஒருவரையொருவர் குறைசொல்வதையும் பார்த்தால் டிவியை உடைத்தெறிந்து விடலாமா என்று பலருக்கும் எரிச்சல் வருகிறது. ஏழு மதில்மேல் பூனை மாநிலங்களில் மட்டுமே இத்தொல்லை! மற்ற 43 மாநிலங்கள் இத்தொல்லையிலிருந்து தப்பிவிட்டன. ஊடகக்காரர்களுக்கு செம வருமானம். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

சர்வாதிகாரி ஆவாரா, ட்ரம்ப்!?

ட்ரம்ப் அதிபராக இருந்தபோது முன்னாள் இராணுவத் தலைவராக இருந்த ஜான் கெல்லி, “ட்ரம்ப் ஒரு ஃபாசிஸ்ட்; அவர் பதவிக்கு வந்தால் சர்வாதியாக நடந்துகொள்ள வாய்ப்புள்ளது. சர்வாதிகாரிகளான ஹிட்லர், ப்யூட்டின், வட கொரியா அதிபர் கிம் ஆகியோரை மிகவும் புகழ்வார்,” எனப் பதிந்திருக்கிறார்.  உடனே, ட்ரம்ப் அவரைக் கன்னாபின்னாவென்று திட்டித் தள்ளிவிட்டார்.

இளைஞர்களின் ஓட்டுகளைச் சேகரிக்கப் பாட்காஸ்ட் (pod-cast) மன்னர் ஜோ ரோகன் என்பவருடன் ட்ரம்ப் மூன்று மணி நேரம் பேட்டியளித்தார். எத்தனை பேர் பொறுமையாகப் அந்தப் பேட்டியைக் கேட்டார்களோ? அப்பேட்டியில் கமலாவை அறிவு மிகக் குறைந்தவர் என்று குறைகூறினார்.

மேலும், “அமெரிக்கா உலகநாடுகளின் குப்பைத்தொட்டியாக மாறிவருகிறது. அந்த அளவுக்கு உலகநாடுகளுக்கு வேண்டாத மக்கள் அமெரிக்காவுக்கு கள்ளத்தனமாக வந்துகொண்டிருக்கிறார்கள்,” என்று பேசி மக்களிடையே மறைமுகமாக இனவெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார்.

பென்சில்வேனியா மாநிலத்தில் முக்கியமான போட்டியிடமான பக்ஸ் கவுன்ட்டியில் (ஜில்லா) அஞ்சலில் அனுப்பிய வாக்குகள் அழிக்கப்பட்டன என்று வலைத்தளத்தில் காட்டுத் தீயாகப் பரவிய காணொளி அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் ரஷ்யாவால் பகிரப்பட்டது என்று அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது. அத்துடன், ஈரானிய மென்பொருள் கள்வர்கள் தேர்தல் வலையங்களைத் தாக்க முயல்வதாகவும் தெரிகிறது.

தற்பொழுது பிரிட்டனில் ஆட்சிசெய்யும் கட்சி, தேர்தலில் குழப்பம் விளைவிக்கிறது என ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ட்ரம்ப்பின் பொய்ப் பரப்பல்தான் 2021 ஜனவரி 6ல் வன்முறையை ஏற்படுத்தியது என்று அவரது மாஜி தேர்தல் பிரச்சார நிர்வாகி கூறியுள்ளார்.

மேரிலாந்து மாநில முன்னாள் முதல்வரும், செனட்டுக்குப் போட்டியிடும் ரிபப்லிகன் கட்சியைச் சேர்ந்த லாரி ஹோகன், ட்ரம்ப்பின் ஆதரவு தனக்குத் தேவையில்லை என மறுத்துள்ளார்.

கமலாவின் எதிர்த் தாக்குதல்: 

ட்ரம்ப் பதவிக்கு வந்தால், மக்களாட்சி செத்துவிடும், சர்வாதிகாரம் தலைதூக்கும், மக்களின் உரிமை பறிக்கப்படும் என்று கமலா ஹாரிஸ் எதிர்த் தாக்குதல் நடத்திவருகிறார்.  

அவர் சி.என்.என். ஊடகத்தில் மதில்மேல் பூனை வாக்காளர்களின் கேள்விக்கு கிட்டத்தட்ட ஒருமணி நேரம் பதிலளித்தார். அவர் பதிலளித்த விதத்தைக் கலந்துகொண்டோர் பாராட்டினர். சிலர் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகவும் கூறினர்.

முன்னாள் அதிபர் ஒபாவின் மனைவி மிஷெல் ஒபாமா ஒரே மேடையில் கமலாவுடன் கலந்துகொண்டு ஆதரவாக ஃபிலடெல்ஃபியாவில் உரையாற்றினார். மிகவும் செல்வாக்குள்ள அவர் பேச்சு, ஆதரவாளரை வாக்குச் சாவடிக்குக் கொணரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிஷிகன் மாநில கார் உற்பத்தித் தொழிலாளர்களிடம் கமலாவுக்கு ஆதரவு அதிகரித்தாலும், அத்துடன் பாலியல் வெறுப்பும், இனவெறியும்கூட அதிகரித்துள்ளன என்று தெரிகிறது. 

2022ல் தலைவிரித்தாடிய 40 வருட அதிகமான பணவீக்கம் 9.1%லிருந்து இப்பொழுது 2.4%க்குக் குறைந்தாலும் 2021ல் இருந்ததைவிட விலைவாசிகள் 20% அதிகமாகவே இருக்கின்றன. ஆகவே, ஜோ பைடனின் துணை அதிபரான கமலாவும் அதில் பொறுப்பேற்கவேண்டும் என்ற நினைப்பும் வாக்காளர்களை ட்ரம்ப் பக்கம் இழுக்கிறது.

வாக்குப் பதிவும், ரிபப்லிகன் கட்சியின் சில்விஷமங்களும்:

மதில்மேல் பூனை மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை வாக்குப் பதிவு முடிவுகளை மறுக்கவோ, சந்தேகப்பட்டுத் தள்ளுபடி செய்யும் பொருட்டு, குடியுரிமை இல்லாதவர்கள் ஓட்டளிகிறார்கள் என்ற சான்றற்ற குற்றச்சாட்டுடன் முன்பதிவு செய்துள்ளனர். 

வாக்குப் பதிவு நிலவரம்:

இதுவரை நேரிலும், ‘வராதோர் வாக்குச்சீட்டு’ மூலமாகவும் 4 கோடிப்போர் வாக்களித்திருக்கின்றனர்.  இனி வாக்களிக்கச் செல்பவரிகளில் 12% பேர், தாங்கள் வாக்களிக்கும் போதுகூடத் தங்கள் மனதை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மிகவும் போட்டியுள்ள மதில்மேல் பூனை மாநிலங்களில் குறிப்பிட்ட அளவுக்குள் ஓட்டு வித்தியாசம் இருந்தால் மறு எண்ணிக்கை நடத்தப்படும். அரிசோனாவும், பென்சில்வேனியாவும் 0.5% வித்தியாசம் இருந்தால்; ஜார்ஜியா 0.5%க்கும் குறைவாக இருந்து தோற்றவர் மனுச்செய்தால்; மிஷிகனில் 2000 வாக்குக்கும் குறைவாக இருப்பின்; நிவாடாவில் எத்தனை வாக்கு வித்தியாசம் இருந்தாலும் 10 நாள்களுக்குள் மனுச்செய்தால்; வட கரோலினாவில் 1%, 10,000  இதில் எது குறைவாக இருந்தாலும்; விஸ்கான்சினில் 4000 அல்லது 1%க்குள் இருந்து மனுச்செய்தால் மறு எண்ணிக்கை செய்யப்படும்.

நான் அனுப்பிய ‘வராதோர் வாக்குச்சீட்டு’ வந்து சேர்ந்துவிட்டதாகவும், அதைக் கணக்குக்கு எடுத்துக்கொள்ளப்போவதாகவும் தேர்தல் ஆணையம் எனக்குத் தெரிவித்துவிட்டது.  இன்னும் பத்துநாளில் அரிசோனாவில் எவர் அதிக வாக்குப் பெறுவார் எனத் தெரிந்துவிடும்! 

அடுத்த வாரம் தேர்தல் எப்படி நடந்திருக்கிறது என்று விவரமாகப் பார்ப்போம்.

(தொடரும்)

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT