Elon Musk  
கல்கி

US Election 2024: Part 15 - ஓட்டளிப்பவருக்கு தினமும் பத்து லட்சம் டாலர் அளிப்பதாக கூறும் இலான் மஸ்க்!

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம் - 11

ஒரு அரிசோனன்

அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் வந்துவிட்டது. பிரச்சாரம் சூடுபிடிப்பதில் வியப்பில்லை. ஆனால், தனக்கு மாறாகக் கருத்துச் சொல்பவரைத் துப்பாக்கி முனையில் நிறுத்திச் சுடவேண்டும் என்று அதிபர் வேட்பாளர் ஒருவர் சொல்லும் அளவுக்கு நிலமை போகிறது, அப்படிச் சொல்வதும் பேச்சுரிமை என்றால்…?

அரிசோனாவில் கிலன்டேல் புறநகரில், டக்கர் கார்ல்சனுக்குக் கொடுத்த நேர்முகப் பேட்டியில், முன்னாள் ரிபப்லிகன் கட்சிப் பிரதிநிதி லிசா சேனியைப் பற்றிக் குறிப்பிட்ட ட்ரம்ப், "அவள் தீவிரப் போர்விரும்பி (war hawk). அவளை நோக்கி சுடும் ஒன்பது துப்பாக்கிக் குழல்கள் முன் நிறுத்துவோம்!  முகத்தைத் துப்பாக்கிகள் குறிபார்க்கும்போது அவள் எப்படி உணருகிறாள் என்று பார்ப்போம்!" என்று கூறினார். கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து லிசா சேனி மேடைகளில் பேசிவருவது ட்ரம்ப்பின் கோபத்தைக் கிளறிவிட்டிருக்கிறது!

“தன்னைப் பற்றி மாற்றிக் கருத்து தெரிவித்த ஒரு அமெரிக்கப் பிரஜையைத் துப்பாக்கி முனையில் நிறுத்திச் சுடவேண்டும் என்பவர் அமெரிக்க அதிபராக வரத் தகுதியற்றவர்,” என்று ரிபப்லிகன் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி உள்பட பலரும் ட்ரம்ப்பின் பேச்சை வன்மையாகக் கண்டனம் செய்தனர்.  

இது கமலாவுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், ட்ரம்ப் ஆதரவாளர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது, பேச்சுரிமை எனச் சப்பைக்கட்டு கட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின் நிலைமை மோசமானது என்று கூறும் ட்ரம்ப்:

பாஸ்டன் நகரின் புகழ்பெற்ற மாடிசன் சதுக்கத்தில் (Madison Square Garden) ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் நடக்கும்போது அங்கு உரையாற்றிய டோனி ஹின்ச்க்லிஃப், “உலகத்தில் பெரிய குப்பை கடலில் மிதந்துகொண்டிருக்கிறது; அதுதான் போர்ட்டோ ரிக்கோ. அங்கு ஹிஸ்பானிக் இனம் குழந்தைகள் பெறுவதில்தான் மகிழ்கிறது,” என்று எள்ளி நகையாடினார். அதை ட்ரம்ப் கண்டிக்காதது, அந்த இனத்து (பழுப்பு) மக்களுக்கு மிகவும் ஆத்திரத்தை விளைவித்திருக்கிறது. பென்சில்வேனியா மாநிலத்தில் அங்கு இருக்கும் பல்லாயிரக்கான போர்ட்டோ ரிக்கோ வாக்காளர்களின் ஆதரவு கிடைக்காது என்று நம்பப்படுகிறது.

பேசும் பொழுதெல்லாம், “அமெரிக்காவின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. தான் வெல்லாவிட்டால், நாடு கடைநிலைக்குப் போய்விடும்; வெளிநாட்டிலிருந்து தங்குதடையில்லாது குற்றவாளிகள் அமெரிக்காவில் அத்துமீறி நுழைந்து நாட்டைக் கெடுக்கக் கமலா அரசு ஆதரவளிக்கும்;  அமெரிக்காவே இப்பொழுது அவர்களால் படையெடுத்துக் கைப்பற்றப்பட்டுள்ளது; எனவே, ஏனக்கு வாக்களித்தால் அவர்களை வெளியேற்றுவேன்!” என்றே பேசிவருகிறார்.  

அதுமட்டுமல்லாது, குப்பை அள்ளும் லாரியில் ஏறி இந்தக் குப்பைகளை அகற்றுவதாகப் பாவனையும் செய்திருக்கிறார்.

ட்ரம்ப் பிரச்சாரம் செய்யச் செல்லும் நகர்களுக்கு ஆன லட்சக் கணக்கான டாலர் செலவை அந்த நகரங்களுக்கு அவரது தேர்தல் கமிட்டி அளிக்கவில்லை என்று புகார் வந்துள்ளது.  இதை அவர் ‘காந்திக் கணக்கில்’ எழுதிவிட்டால் அந்த நகர மக்கள் மீதுதான் அந்தச் சுமை வந்துசேரும்.

இலான் மஸ்க்கின் நூதன ஓட்டுச் சேகரிப்பு:

ஓட்டளிப்பவருக்கு லாட்டரி நடத்தி, தினமும் பத்து லட்சம் டாலர் (எட்டுக் கோடியே முப்பது லட்சம் ரூபாய்) அளிப்பதாக இலான் மஸ்க், ‘மஸ்கா’ப் போட்டு,  ரிபப்லிகன் ஆதரவாளர்களுக்குக் காசோலைகள் அளித்துவருகிறார். ரிபப்லிகன் கட்சிக்கு அதன்மூலம் அதிக ஓட்டு விழும் என்று அவர் கையாளும் தந்திரம் அது.

ஆனால், வாக்களிப்பதற்குப் பணம் கொடுப்பது அமெரிக்காவில் சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும். ‘லாட்டரி’ என்று சொல்லி மஸ்க் தப்பிக்க முயல்கிறார் என்று தோன்றுகிறது.

தான் வென்றால், பற்றாக்குறையைக் குறைக்க இலான் மஸ்க்குக்குப் பதவி அளிப்பதாக ட்ரம்ப் கூறிவருகிறார். மஸ்க்கும், தான் எடுக்கப் போகும் நடவடிக்கைகளால் தொடக்கத்தில் துன்பம் இருக்கும். பின்பு செயல் திறன் அதிகரித்து நன்மை நிலவும் என்று பேசுவதும் வேலையில்லத் திண்டாட்டத்தில் போய் முடியுமோ என்ற அச்சத்தையும் தோற்றுவிக்கிறது.

ட்ரம்ப் வந்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறும் கமலா ஹாரிஸ்:

ட்ரம்ப் பதவிக்கு வந்தால், மக்கள் உபயோகப்படுத்தும் காலணி முதல், துணி, கார், அனைத்துப் பொருள்களும் 20% விலையேறும். அதனால், ஆண்டுதோறும், நடுத்தர மக்கள் $4800 வரை அதிகப்படி செலவிடவேண்டியிருக்கும் என்று கமலா பேசிவருகிறார். ட்ரம்ப் சீனாவிலிருந்து வரும் பொருள்களுக்கு 20% தீர்வை விதிப்பேன் என்று பேசியதின் பிரதிபிலிப்பே கமலாவின் துருப்புச் சீட்டு.

ட்ரம்ப் தனக்கு எதிராகப் பேசுபவரை ராணுவம் மூலம் நடவடிக்கை எடுத்துப் பழிவாங்குவேன் என்று சொல்கிறார்.  ஆனால் எனக்கு மாறாகக் கருத்துச் சொல்வரை அழைத்து அவர்களுடன் பேசி அவர்களின் குறைகளைக் கண்டறிவேன்.  எனக்கு வாக்கு அளிக்காதவருக்கும் ஆதரவாகச் செயலாற்றுவேன்.  மக்களாட்சி வேண்டுமென்றால் எனக்கு வாக்களியுங்கள் என்று கோரிக்கை விடுக்கிறார்.

இதற்கிடையில் ட்ரம்ப்புக்கே ஆதரவாகப் போகும் என்று கருத்துக் கணிக்கப்பட்ட ஐயோவா (Iowa) மாநிலத்தில் கமலா அதிக ஆதரவுடன் இருக்கிறார் என்ற செய்தி வந்துள்ளது. அங்கு கமலா வாக்குச் சேகரிக்கச் செல்லவே இல்லை. 

வாக்குப் பதிவு நிலவரம்:

இதுவரை நேரிலும், ‘வராதோர் வாக்குச்சீட்டு’ மூலமாகவும் 7 கோடிப்பேர் வாக்களித்திருக்கின்றனர்.  

தேர்தல் முடிந்தாலும், முடிவு தெரியுமா?

தான் தோற்றால் அது வாக்கு மோசடியால்தான் நடக்கும் என்று திரும்பத் திரும்ப ட்ரம்ப் பேசிவருகிறார்.  மேலும் ரிபப்லிகன் கட்சியினர் 130க்கும் மேலான வழக்குகளைப் பதிவுசெய்துள்ளனர். அதை மறுக்கும் விதத்தில் டெமாக்ரடிக் கட்சியினரும் எதிர்வழக்குப் பதிய முனைந்துள்ளனர்.  

ஆகையால், மழை விட்டாலும், தூவானம் விடாது என்பதைப் போல, நாளை தேர்தல் நடந்து முடிந்தாலும், போட்டியில் சரிசமமாக உள்ள மதில்மேல் பூனை மாநிலங்களில் முடிவு தெரிய நாளாகும்.  

2020 தேர்தலில் பைடன் அதிக மாநிலங்களில் வென்றும், இறுதியாகத் தெரியக் கிட்டத்தட்ட ஒரு வரரம் ஆனது.  இப்பொழுது அந்த அளவு ஆகுமா, அல்லது அதிகமான காலம் தேவையா? அதுவரை சுவையான சேதிகளுடன் இந்தக் கட்டுரையும் தொடரும்.

(தொடரும்)

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT