“நோட்டீஸெல்லாம் பக்காவா ரெடி பண்ணி, போஸ்ட் பண்ணப் போற நேரத்துல வந்து வேற எதாச்சும் பண்ணமுடியுமான்னு கேக்கறீங்களே சார்”
வக்கீல் சுப்புவின் எதிரே அமைதியாக அமர்ந்திருந்தார் ஜம்புநாதன்.
“கிளியரா யோசிச்சு என்ன பண்ணலாம்னு சொன்னீங்கன்னாதான் நான் அடுத்த ஸ்டெப்புக்கு போகமுடியும் சார்.”
“அவன் பண்ணினது தப்புதான், இல்லன்னு சொல்லல. ஆனா, அதுக்கு இதுதான் தீர்வான்னு ஒரே குழப்பமா இருக்கு. நைட்டுபூரா சுத்தமா தூங்கவே இல்ல.”
“நீங்கதான் இப்புடி தூக்கம் இல்லாம அவஸ்தைபட்டுக்கிட்டு இருக்கணும். அவரு ஜாலியா பிரியாணி சாப்ட்டுக்கிட்டு கார்ல சுத்திக்கிட்டிருப்பாரு. சொல்லுங்க, என்ன செய்யறதா உத்தேசம்?”
“கேஸ் போட வேணாம்னு தோணுது சார். அவன் என்ன சூழ்நிலையில இப்புடி ஒரு முடிவெடுத்தான் என்னன்னு தெரிஞ்சுக்காம கோர்ட்டுக்கு இழுக்கறதுக்கு ஒரு மாதிரி சங்கடமா இருக்கு”
சுப்புவிற்கு லேசாக கோபம் எட்டிப் பார்த்தது. தாடையைத் தடவிக்கொண்டபடியே சேரில் சாய்ந்தமர, ஜம்புநாதன் அமைதியாய் சுப்புவை பார்த்தார்.
“இதுல உங்களுக்கொண்ணும் கோபம் இல்லியே?”
“எனக்கென்ன சார் கோபம். உங்க பையன், உங்க சொத்து. எதுவாயிருந்தாலும் நீங்கதானே முடிவு பண்ணனும்? என்ன, என்கிட்ட வர்றதுக்கு முன்னாலேயே இதையெல்லாம் யோசிச்சு முடிவு பண்ணிட்டு வந்திருந்தீங்கன்னா என்னோட டைம் மிச்சமாயிருக்கும்.”
“தப்புதான். மன்னிச்சுக்கங்க. அதுக்கு நான் என்ன கொடுக்கணுமோ அதைக் குடுத்துர்றேன். இப்புடி சொல்றதுக்காக வித்தியாசமா எதுவும் எடுத்துக்காதீங்க”
பழைய சாதத்தை தட்டில் போட்டு கொண்டு வந்து வைத்த செண்பகத்தம்மாள், மீண்டும் உள்ளே சென்று சுண்ட வைக்கப்பட்டிருந்த புளிக்குழம்பை சிறு கிண்ணத்தில் எடுத்து வந்து வைத்தாள். நாற்காலியில் அமர்ந்திருந்த ஜம்பு எழுந்து கீழே சம்மணமிட்டுக் கொண்டார்.
“வக்கீல் என்ன சொன்னாரு?”
மனைவியின் கேள்விக்கு பதிலெதுவும் சொல்லாமல் இரண்டு கவளங்களை எடுத்துப் போட்டுக் கொண்டார்.
“உங்களைத்தான் கேட்டேன்”
“அவர் என்ன சொல்றது? நாம சொல்றதைத்தான அவர் செய்யப் போறாரு”
“இப்புடியே எகனைக்கு மொகனையா எதாச்சும் பேசிகிட்டே இருங்க. கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லாதீங்க”
“கொஞ்சநாளைக்கி என்கிட்ட எதுவும் கேக்காத. பிரச்சனை முடியும்போது நானே என்ன ஏதுன்னு சொல்றேன்”
“எதுவும் கேக்காம இருந்து இருந்துதான் அவனை கைக்குள்ள போட்டுகிட்டு நெனைச்சதை சாதிச்சுகிட்டிருக்கா அவ. இன்னமும் நான் வாயை மூடிகிட்டே உக்காந்துருந்தா கொஞ்சநாள்ல இந்த சோத்தை நீங்க தெருவுல உக்காந்துதான் திங்கணும், ஞாபகம் வச்சுக்கங்க.”
கோபத்தைக் கட்டுப்படுத்தமுடியாமல், பின்வாசலை நோக்கி சென்றுவிட்டிருந்தாள் செண்பகத்தம்மாள்.
தற்போது வசித்துக்கொண்டிருக்கும் இந்த பூர்வீக வீட்டை இரண்டு மாதங்களில் காலி செய்யும்படி இவர்களது வாரிசான ரகுபதி அனுப்பியிருந்த நோட்டீஸ்தான் பிரச்சனையாக ஓடிக்கொண்டிருந்தது. இதே ஊரில் நான்கைந்து கிலோ மீட்டர்கள் தள்ளி ஒரு அடுக்குமாடி வீட்டில் தனிக்குடித்தனம் தொடங்கியிருந்தான் ரகுபதி.
தினமும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதையும், மாலையில் மீண்டும் அழைத்து வருவதையுமே தலையாய பணியாகக் கொண்டிருந்த ஜம்புவுக்கு அனைத்தும் திடீரென கனவுபோல் கலைந்துபோயிருந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்த குழந்தைகளின் ஞாபகங்கள் கண்களை ஈரமாக்கின. சலிக்காமல் பேசும் குழந்தைகளிடம் கதைகளைக் கேட்டுப் பழகியிருந்த காதுகளுக்கு, அவ்வீட்டின் அமைதியான சூழல் வெறுப்பைக் கொடுத்தது.
நோட்டீஸை கையில் வாங்கி வைத்துக்கொண்டு ஜம்புநாதன் எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் பல விஷயங்களை ஓட்டிப் பார்த்து குழப்பிக்கொண்டிருக்க, செண்பகத்தம்மாளோ தெளிவாக ஒரே முடிவாய், ‘என் கழுத்துல காதுல கெடக்கறதையெல்லாம் எடுத்துட்டுப் போங்க. அவளை கோர்ட்ல நிறுத்தி மானத்தை வாங்கியே ஆவணும்’ என மருமகள்மீது உச்சபட்ச கோபத்திலேயே நின்றுகொண்டிருந்தாள்.
நோட்டீஸ் கவலை போதாதென்று செண்பகத்தம்மாளை எதிர்கொள்வதும் ஒரு பெரிய பிரச்சனையாகவே இருந்தது ஜம்புவிற்கு.
“ஏன் செண்பகம் இப்புடி மூணாம் மனுஷங்க மாதிரி நடந்துக்கற? நம்ம பையன், நம்ம மருமவன்னு தோணவே தோணாதா உனக்கு? ஒவ்வொரு நாட்டுலேயும் நிலநடுக்கமெல்லாம் வரும்போது ஒரே நொடியில மொத்தமும் போயி எல்லாரும் ரோட்டுக்கு வந்து நிக்கறதை டிவியில பாக்கறீல்ல? போகும்போது இந்தக் கட்டடத்தையெல்லாம் தூக்கிகிட்டா போகப்போறோம். நாம போனதுக்கப்பறம் பண்ணப்போறதை இப்பவே பண்றான் அவன், விட்ற வேண்டியதுதானே? எதுக்கு எப்ப பாத்தாலும் இப்புடி அநியாயத்துக்கு டென்ஷனாகிட்டே இருக்க?”
“சும்மா தத்துவமெல்லாம் பேசி என் கோவத்தைக் கெளறாதீங்க சொல்லிட்டேன். பத்தரம் ரெடி பண்ணும்போதே சொன்னேன், அவன் பேருக்கு இப்ப மாத்தாதீங்க, அந்த குடிகெடுக்க வந்த ………… நம்மள தெருவுல நிக்க வச்சாலும் வச்சுருவானு. கேட்டீங்களா?”
“அதுக்காக நீ அவங்களை இந்த வீட்டுப்பக்கமே வரவிடாம பண்ணினது ரொம்பத் தப்பு செண்பகம். மருமவ வாசலுக்கு வந்து நின்னப்ப, அந்த பொண்ணு என்ன சொல்ல வருதுன்னுகூட கேக்காம கொஞ்சநஞ்ச பேச்சா பேசின நீ? அது அழுதுகிட்டே இங்கேர்ந்து போனது இன்னும் என் கண்ணுலேயே நிக்குது. நீயும் அவங்களமாதிரி சொத்துக்காகதானே இப்புடியெல்லாம் நடந்துக்கற? அவங்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?”
“ஒண்ணாவே இருந்துட்டு போறேன். பத்தரம் மாத்துன வேகத்துல அவங்க ஆத்தா வீட்டுக்கு எதேச்சையா போறமாதிரி கிளம்பிப் போயி உக்காந்துகிட்டு ரகுவையே சாமானையெல்லாம் எடுத்துட்டுப் போக வச்சவ அவ. அவளுக்கு சமமா என்னை சேர்த்து பேசறதே வேலையாப் போச்சு உங்களுக்கு. பொண்ணு வீடு பாத்துட்டு வந்தப்பவே தலையால அடிச்சுகிட்டேன், வளர்ப்பு சரியா இருக்கறமாதிரி தெரியல, நல்லா விசாரிச்சுட்டு நிச்சயம் பண்ணிக்கலாம்னு. எங்க கேட்டீங்க? ’ரங்கசாமி சொன்னா நல்ல குடும்பமாதான் இருக்கும், நல்ல பொண்ணாதான் இருக்கும்’னு ஒத்த கால்ல நின்னு உங்க இஷ்டத்துக்கே முடிச்சீங்க. இப்ப, உங்களோட சேர்ந்து நானும் அனுபவிக்கறேன்”
“சரி விடு. பழசையே பேசிப் பேசி வெறுப்பை அதிகப்படுத்திக்காத. உன் உடம்புதான் கெட்டுப் போவும்”
“ஆமாமா. நான் பாழா போறேன், அவ நல்லா இருப்பா. என் வயித்தெரிச்சல் அவளை என்ன பண்ணுதுன்னு மட்டும் பாத்துகிட்டேயிருங்க”
செண்பகத்தம்மாளோடு மல்லுகட்டமுடியாமல் மனம் வேதனைப்படுவார். எத்தனையோமுறை அவளை சமாதானப்படுத்த முயன்று மேலும் மேலும் மருமகளுக்கு சாபத்தைதான் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார். ’இவளது சாபம் அந்தப் பெண்ணை மட்டுமா பாதிக்கும்? நமது மகன், பேரன் பேத்திகள் என மொத்த பரம்பரையையே அல்லவா தாக்கும்? புரிந்துகொள்ள மறுக்கிறாளே?’ என வருந்துவார்.
பேரக்குழந்தைகளை பார்க்கவேண்டுமென்ற பேராவலைக்கூட செண்பகத்தம்மாளுக்காகவே கட்டுக்குள் வைத்திருந்தார். ரகுவின் வீட்டிற்குள் கால் வைத்துவிட்டு வந்தால் இங்கு என்னவிதமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற பயம் உள்ளூர இருந்துகொண்டே இருந்தது.
ரகுபதியை வழக்கமாக சந்திக்கும் அதே மணீஸ் கபேவில்தான் இப்போதும் சந்தித்தார்.
“ஏம்ப்பா வெறும் காபி மட்டும் போதும்கறீங்க? டிபன் எதும் சாப்பிடுங்களேன்” “இல்லப்பா. பழையது இருந்துச்சு, சாப்ட்டுதான் வந்தேன்”
“சரிப்பா. சொல்லுங்க. என்ன பேசணும்னு வரச் சொன்னீங்க? ஏதோ வக்கீலையெல்லாம் வேற பாக்க ஆரம்பிச்சுருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன்?”
கையை பிசைந்தபடி குனிந்துகொண்டார். ஒற்றை காபியை பெரிய அலுமினிய தட்டில் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனார் சர்வர். தம்ளரின் விளிம்பு வரை நிறைந்திருந்த காபியை லேசாக சாய்த்து பாதியை வட்டாவில் ஊற்றிவிட்டு, தம்ளரை டேபிளில் வைத்தார்.
“ஆமா. வக்கீலை பாத்தேன். ஆனா எதுவும் செய்ய வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்”
“நீங்க எதாச்சும் செய்யணும்னு நினைச்சாலும் ஒண்ணும் பண்ணமுடியாதுப்பா. ஏன்னா, உங்களுக்குத் தெரியாம நான் எதையும் புடுங்கிகிட்டு போய் ஏமாத்தல. நீங்களே உங்க கையால எனக்கு எழுதி பத்திரம் பண்ணிக் குடுத்ததுதான். இப்ப விக்கும்போதுகூட எல்லாத்தையும் பக்கா லீகலாதான் பண்றேன். இருவத்தஞ்சு பர்சண்ட் அட்வான்ஸ் வாங்கி செலவுகூட பண்ணியாச்சு”
மிடறு விழுங்கினார் ஜம்பு.
“இப்புடி கொஞ்சம்கூட யோசிக்காம அந்த வீட்டை..”
“இதே பாட்டை எத்தனை நாளைக்கிப்பா பாடிகிட்டிருப்பீங்க ரெண்டு பேரும்? வெளக்கம் குடுத்து குடுத்து ஓய்ஞ்சு போச்சு எனக்கு. நான் இருக்கற வீட்டுக்கே ரெண்டு பேரும் வந்துடுங்கன்னு சொன்னாலும் கேக்கமாட்டேன்னு மூஞ்சியைத் திருப்பிக்கறீங்க. போற வீட்டுக்கு வாடகையை நானே பாத்துக்கறேன்னும் சொல்லிட்டேன். இதுக்குமேல என்னதான் எதிர்பாக்கறீங்க? எதுக்கு இப்புடி வீடு வீடுன்னு அதையே புடிச்சு தொங்கிகிட்டிருக்கீங்க?”
ரகுபதியை நிமிர்ந்து பார்த்தவருக்கு, இந்த இடத்தில் செண்பகத்தம்மாள் இருந்திருந்தால் பதில் சொல்வதற்கு ஏதுவாக இருந்திருக்குமெனத் தோன்றியது. ‘செண்பகம் அடிக்கடி சொல்வதுபோல் உண்மையில் நாம் பெரிய ஏமாளியாகவும் திராணியற்றவனாகவும்தான் வாழ்ந்து முடித்திருக்கிறோம். நம்மால் வளர்க்கப்பட்டவனையேகூட எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாமல் திணறி நிற்கிறோமே?’
காபி ஆறத் தொடங்கி, மேல்பகுதியில் வட்டவடிவ அரக்கு நிற ஆடை கட்டியிருந்தது.
“சொல்லுங்க, வேறென்ன பிரச்சனை உங்களுக்கு?”
“வேறென்னப்பா பிரச்சனை இருக்கப் போவுது எங்களுக்கு? போயி சேர்ற நாள் தான் தெரியமாட்டேங்குது.”
காபியை குடிக்காமலே எழுந்தார். வேட்டியின் நுனியை எடுத்து லேசாக கண்களின் ஓரத்தில் பனித்திருந்த நீரை ஒற்றிக்கொண்டார். அங்கிருந்து நகரத் துவங்கியவரை அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ரகுபதி. வெளியே வந்தவரிடம் கைநீட்டிய முதியவர் ஒருவருக்கு, பாக்கெட்டினுள் துலாவி ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்துக் கொடுக்க, அவர் கும்பிட்டுவிட்டு நகர்ந்தார்.
வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்த ஜம்பு, மெதுவாய் நிமிர்ந்து கட்டிடத்தைப் பார்த்தார். ’சிறிதுசிறிதாக சேமித்து, பார்த்து பார்த்து கட்டிய வீடு. இன்னும் சில நாட்களில் வேறு எவரோ ஒருவரின் கைகளுக்குச் சென்றுவிடும். பின் தரைமட்டமாகி, வேறு வடிவத்திற்கு மாற்றம் பெற்றுவிடும்.’
சொத்து பறிபோன உணர்வோ, வாடகை வீட்டிற்கு குடிபெயரவேண்டிய நிர்பந்தம் குறித்த வருத்தமோ அவரிடம் பெரிதாய் இல்லை. உயிர் பிரியும்வரை பேரன் பேத்திகளோடு இதே வீட்டில் திளைத்திருப்போமென கற்பனை செய்திருந்ததுதான் தாங்கவொண்ணா வேதனையைக் கொடுத்தது அவருக்கு.
’இனி ரகுபதியிடம் வீட்டைப் பற்றி பேசி நமது வேதனையை நாமே அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது. வீடு இடிக்கப்பட்டு வெற்றிடமாகக் கிடப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு மனதை பக்குவப்படுத்திக் கொள்ளப் பழகவேண்டும். பென்ஷன் தொகைக்கேற்றாற்போல் வீடொன்றை விரைவில் பார்க்கவேண்டும். வாடகைக்கு ரகுவிடம் கையேந்தி நிற்கக்கூடாது’ – உறுதியான முடிவுக்கு வந்தவருக்கு, செண்பகத்தம்மாளை ஒப்புக்கொள்ள வைத்து வேறு வீட்டிற்கு அவளைக் கொண்டு செல்லும் வழிதான் புலப்படாமலிருந்தது.
’உன் மகனிடம் இறுதியாகவும் பேசிப் பார்த்துவிட்டேன், அவன் அசைந்துகொடுக்கவில்லை. இங்கிருந்து கிளம்பும் வழியைப் பார்’ எனச் சொன்னால் இரத்தம் சூடாகி காளியாட்டம் ஆடுவாள். வழக்கம்போல், மருமகள் கொடூரமான சாபங்களை வாங்கிக் கட்டிக்கொள்வாள். என்ன செய்யலாம்?’
எல்லாவற்றையும் யோசித்துக் களைத்துப் போனவர், கவலையுடனே மெதுவாக வீட்டினுள் வந்து ஈஸி சேரில் அமர்ந்தார். உள்ளிருந்து வந்த செண்பகத்தம்மாள் கைகளையூன்றி அவருக்கு பக்கவாட்டில் தரையிலமர்ந்தாள்.
’என்னென்ன கேட்பாளோ?’ என யோசித்தபடியே கண்களை சாந்தமாக மூடிக்கொண்டார்.
“உங்க மருமவ எனக்கு ஃபோன் பண்ணியிருந்தா”
கண்களைத் திறந்து, சேரில் சாய்ந்த நிலையிலேயே திரும்பிப் பார்த்தார் ஜம்பு.
“எவ்வளவோ சொல்லியும் கேக்க மாட்டேங்கறாரு உங்க புள்ளை, அந்த வூட்டை வித்தே தீருவேன்னு ஒத்தைக் கால்ல நிக்கிறாரு, நீங்க ஒரு தடவை நேர்ல வந்து பேசிப் பாருங்களேன்னா”
நிமிர்ந்தமர்ந்தார்.
“இங்கேர்ந்து போனதுலேர்ந்தே ரெண்டுபேருக்கும் ஒரே சண்டைதான் போலருக்கு. இவன்தான் என்னென்னமோ சொல்லி பொண்டாட்டி புள்ளைங்களையெல்லாம் ஊருக்கு அனுப்பிவுட்டுட்டு வூட்டையும் காலி பண்ணியிருக்கான். அவ ஃபோன் பண்ணப்பவெல்லாம் நான்தான் கோவத்துல என்ன ஏதுன்னு கேக்காம விட்டுட்டேன். வூட்டை விக்கறதுல அவளுக்கு சுத்தமா இஷ்டம் இல்லன்னு சொல்லி ’ஓ’ன்னு அழுவுறா”
“நீ என்ன சொன்ன?”
“அவ இப்புடி சொல்லும்போது நான் என்னத்த சொல்றது? வாய்க்கு வந்ததையெல்லாம் கேட்டுவுட்றலாம்னுதான் ஃபோனையே எடுத்தேன். அவ சொல்றதை கேட்டதும் என் கண்ணுலேயே தண்ணி கட்டிகிச்சு. ’சரிம்மா தாயி, வீணா பிரச்சனை எதுவும் பண்ணிக்காதீங்க, எதுவாயிருந்தாலும் அவன் செய்றபடி செய்யட்டும், வுட்ரு’ன்னுட்டேன்.”
வாய்விட்டு சிரிக்கத் தோன்றியது அவருக்கு.
ஜம்புவின் புன்னகை கலந்த பார்வையில், ’மருமவளைப் பத்தி நான் பேசினப்பவெல்லாம் என்னைப் போட்டு அந்த பாடுபடுத்துனியே.. இப்ப எப்புடி..’ எனக் கேட்பது போல் உள்ளர்த்தம் தொணித்திருந்ததை செண்பகத்தம்மாள் புரிந்துகொள்ளாமலில்லை.
“என்ன பாக்கறீங்க? ஏற்கனவே அவங்களுக்குள்ள பொகைஞ்சுகிட்டு கெடக்குது. நானும் சேர்ந்து அவளை ஏத்திவுட்டுபுட்டு அவங்க ரெண்டுபேரும் ஆளுக்கொரு பக்கமா போறதுக்கா? நாளைக்கி காலையில புள்ளைங்களை கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கேன், இருந்து மத்தியானம் சாப்டுட்டு போறமாதிரி. நீங்களும் அவன்கிட்ட கொஞ்சம் பேசுங்க. அவகிட்ட எதும் பிரச்சனை பண்ணிக்கவேணாம், என்ன பண்ணனுமோ பண்ணிட்டுப் போன்னு சொல்லிருங்க.”
மனம் மகிழ்ந்தது அவருக்கு. ’அவளைக் கோர்ட்டில் நிறுத்தி உண்டு இல்லையென பண்ணியே தீரவேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டிருந்தவள், அவளது ஒற்றை அழுகையில் வீழ்ந்து, ஒரே வினாடியில் அவள்மீதான பார்வையை மொத்தமாக மாற்றிக்கொண்டுவிட்டாளே.’
மனம் குதூகலித்து, பேரன் பேத்திகள் தன் முன்னே வந்து குதித்து விளையாடத் துவங்கிவிட்டதைப்போல் உணர்ந்தார். மீண்டும் அவர்களுடன் பயணிக்கப்போவதை எண்ணி மனம் பூரிக்க, புன்னகைத்தபடியே இங்குமங்கும் நடக்கத் துவங்கியிருந்தார்.
இந்த நாளின் விரைவான அஸ்தமனத்திற்காகவும் வரவிருக்கும் விடியலுக்காகவும் ஏங்கத் துவங்கியிருந்தவரின் மனதில், சொந்த வீடு, வாடகை வீடு என வேறெந்த எண்ணமும் எழாமலிருந்தது...!