History of Voter ID Card
History of Voter ID Card 
கல்கி

வாக்காளர்களே! அடையாள அட்டையின் வரலாறு தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1993 ஆம் ஆண்டு நம் நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இது உலக நாடுகளிலேயே ஆச்சரியப்பட வைத்தது. இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியை தாண்டி விட்டது அதிலும் 94 கோடியே 50 லட்சத்து 25,694 பேர் வாக்களிக்க தகுதி உள்ள வாக்காளர்களாக உள்ளனர் உலக அளவில் மிக அதிக வாக்காளர்களை கொண்ட நாடு இந்தியா தான்.

இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் அனைவருக்கும் வாக்களிக்க அடையாள அட்டை வழங்கியிருப்பது இமாலய சாதனைதான். நம் நாட்டில் வாக்களிக்கும் வாக்காளர் அனைவருக்கும் இவர் தான் வாக்காளர் என்று அறிவதற்கும் வாக்குப்பதிவில் முறைகேட்டை தவிர்ப்பதற்கு ஒரு அடையாள ஆவணம் வேண்டும் என்று முடிவு செய்த இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1957ஆம் ஆண்டு வாக்காளர் அடையாள அட்டை திட்டத்தை முன்மொழிந்தது.

இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளராக இருந்த சுகுகுமார் சென் தான் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என்ற விதையை போட்டவர். அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு அதாவது 1958 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை அறிமுகம் செய்தவர் அப்போதைய சட்ட மந்திரியாக இருந்த அசோக் குமார் சென். இவர் சுகுமார் சென்னின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி இந்தியாவின் இரண்டாவது தலைமை தேர்தல் ஆணையராக கேவிகே சுந்தரம் பதவியேற்றார். அடுத்த சில நாட்களில் அடையாள அட்டை வழங்க செய்யும் மசோதா பாராளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது. வாக்காளர் அடையாள அட்டையை நடைமுறைப்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட போதும் ஏனோ தாமதமாகிக் கொண்டே சென்றது.

இருப்பினும் 1960 ஆம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா தென்மேற்கு பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக கொண்டு வந்தது. பலர் புகைப்படம் எடுக்க முன்வரவில்லை. குறிப்பாக பெண்கள் தங்களை புகைப்படம் எடுக்க மறுப்பு தெரிவித்தனர் இடைத்தேர்தல் நடைபெற்ற அந்த ஒரு தொகுதிக்கு ரூபாய் 25 லட்சம் வரை தேவைப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய தொகையாகும் தேர்தல் நடத்தும் செலவையும் விட வாக்காளர் அடையாள அட்டைக்கான செலவு அதிகமாக இருந்த காரணத்தால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதை அடுத்து இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

19 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த திட்டம் மீண்டும் உயிர் பெற்றது. ஆம் 1979 ஆம் ஆண்டு சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இது ஓரளவு சாத்தியமானதால் அசாம், மேகாலயா, நாகலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டது. இதில் கிடைத்த வெற்றியே 1993 ஆம் ஆண்டு அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை என்பது சாத்தியமானது. இதை செய்து காட்டியவர் அப்போது தேர்தல் ஆணையராக இருந்த டிஎன் சேஷன். அவரது காலத்தில் தான் தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. பல்வேறு தடைகளை தாண்டி 1993 ஆம் ஆண்டு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் வாக்காளர் அடையாள அட்டை என்பது கருப்பு நிறத்தில் இருந்தது 

அதன் முதல் பக்கத்தில் வாக்காளரின் புகைப்படம், பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம் ஆகிவையும் பின்பக்கத்தில் வீட்டு முகவரி, தொகுதி, பாகம், வாக்குச்சாவடி ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் ஆரம்ப காலங்களில் வாக்காளர் அடையாள அட்டைக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அந்த அட்டையில் இடம் பெறும்போது தெளிவற்றதாகவும் கேள்விக்குறியாகவும் இருந்தது இது பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானது பின்னர் அந்த தவறுகள் படிப்படியாக சரி செய்யப்பட்டு வந்ததை தொடர்ந்து வாக்காளர் பட்டியலும் புகைப்படத்துடன் வந்தது தற்போது அழகிய வண்ணப் புகைப்படத்துடன் பிளாஸ்டிக் அட்டையில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இந்த வளர்ச்சியின் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு வந்தது. மின்னணு வாக்காளர் அடையாள அட்டை என்பது வாக்காளர் அடையாள அட்டையின் திருத்த முடியாத பாதுகாப்பான பிடிஎப் பதிப்பாகும். மேலும் இதில் வருகை எண் பகுதி எண் மற்றும் பிற புள்ளி விவரங்களுடன் பாதுகாப்பான கியூ-ஆர் குறியீடு ம் உள்ளது .இதனை செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்காக அடையாளச் சான்றாக செயல்படும் முக்கியமான ஆவணமாகும். EPIC எண் என்பது ஒவ்வொரு வாக்காளர்க்கும் ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட எண்ணெழுத்து குறியீடாகும். இது தேர்தலின் போது அவர்களின் அடையாளத்தை அடையாளம் கண்டு சரி பார்க்க உதவுகிறது. கொடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை உண்மையானதா என்பதை உறுதி செய்ய தேர்தல் அதிகாரிகள் இந்த தனிப்பட்ட அடையாளத்தை தரவுகளுக்கு எதிராக குறுக்கு சோதனை செய்கிறார்கள். இந்த விரிவான சரிபார்ப்பு செயல்முறை அடையாளத் திருட்டு ஆள் மாறட்டும் மற்றும் பிற சாத்தியமான வாக்குப்பதிவு முறைகளுக்கு எதிராக பாதுகாக்கிறது. தேர்தல் நடைமுறைகளை எளிதாக்குகிறது.

EPIC எண்ணின் முக்கியத்துவம் ஜனநாயக தேர்தலில் நேர்மையை பாதுகாக்கும் திறனில் இருந்து உருவாகிறது. இது தேர்தல் கட்டமைப்பில் ஒரு முக்கிய கருவியாக செயல்படுகிறது வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை ஊக்குவிக்கிறது.

ஹீமோகுளோபின் குறைவா இருக்கா? மலை கிராம மக்களுக்கு ரத்த பரிசோதனை!

அறிவுக்கும் உழைப்புக்கும் வயது ஒரு தடையே இல்லை!

மாதச் சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு: பணத்தை சேமிக்கும் 10 வழிகள் இதோ!

அம்மை நோயை குணமாக்கும் 10 எளிய மருத்துவக் குறிப்புகள்!

5 மொழிகளில் ரீமேக்காகும் 'பார்க்கிங்'... கடும் போட்டிக்கு பிறகு விற்பனை!

SCROLL FOR NEXT