மனிதனின் IQ (Intelligence Quotient) என்றால் என்ன? அதனை எப்படி மதிப்பிடுகிறார்கள்? ஐகியூ புள்ளிகளின் அடிப்படையில் ஒருவருக்கு என்னென்ன திறன்கள் இருக்கும்?... போன்ற மனிதனின் நுண்ணறிவு சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த பதிவு.
மனிதனின் நுண்ணறிவை மதிப்பிடுவதற்கென்று வடிவமைக்கப்பட்ட பல்வேறு தரநிலையாக்கப்பட்ட சோதனைகளில் ஒன்றின் வழியாகப் பெறப்படும் மதிப்பீட்டை நுண்ணறிவு எண் அல்லது நுண்ணறிவு அளவு (Intelligence quotient) என்கின்றனர். ஜெர்மன் சொல்லான Intelligenz-Quotient என்பதிலிருந்து சுருக்கப்பட்ட IQ எனும் சொல்லை 1912 ஆம் ஆண்டில் ஜெர்மானிய உளவியலாளர் வில்லியம் ஸ்டெர்ன் என்பவர் முதன் முதலாகப் பயன்படுத்தினார்.
உலகில் சராசரியாக இந்த நுண்ணறிவு எண் 100 என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், வயதுக்கேற்றபடியே இந்த நுண்ணறிவு எண் மாற்றமடைகிறது. 5 வயது குழந்தைகளுக்கு 50 முதல் 75 புள்ளிகளாகவும், 10 வயதில் 70 முதல் 80 புள்ளிகளாகவும் இருக்கும் நுண்ணறிவு எண், 15 முதல் 20 வயதில் உலகச் சராசரி அளவான 100 புள்ளிகளாக மாற்றமடைகிறது. இந்த நுண்ணறிவு எண் அதிகரிப்பதற்கேற்ப அவர்களது அறிவுத்திறன் கணக்கிடப்படுகிறது.
ஆண், பெண் என்று பாலின அடிப்படையில் இந்த நுண்ணறிவு எண் வேறுபாடு இருப்பதில்லை. அவர்களுக்கிடையிலான வயதைப் பொறுத்தே வேறுபடுகிறது. 5 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தங்கள் வயதை ஒத்த சிறுமிகளை விட நுண்ணறிவு எண் அதிகமுடையவர்களாக இருக்கின்றனர். ஆனால், 10 முதல் 12 வயது வரையில் ஆண்களை விட பெண்கள் நுண்ணறிவு எண் அதிகமானவர்களாக இருக்கின்றனர். இந்த இடைவெளி 18 முதல் 20 வயது வரையில் மாறிச் சமநிலையை அடைகிறது.
வயது வந்தவர்களிடையே மரபியல், வளர்ப்பு, சுற்றுச்சூழல், இனம் போன்ற காரணிகளின் அடிப்படையில் நுண்ணறிவு எண் மாறுபடுகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கணிதவியலாளர் டெரன்ஸ் தாவோ மிக உயர்ந்த நுண்ணறிவு நிலை கொண்டவர். அவருக்கு நுண்ணறிவு எண் 200 புள்ளிகளுக்கு மேல் உள்ளது. இது மிகவும் அரிதானது. ஏனென்றால், பெரும்பாலான மக்களுக்கு இந்த நுண்ணறிவு எண் 100 எனும் புள்ளிகளையே எட்டவில்லை. பெரும்பான்மையாக, அனைத்து நோபல் பரிசு வென்றவர்களும் அதிக 150 புள்ளிகளுக்கு மேல் நுண்ணறிவு எண் உடையவர்களாகவே இருந்திருக்கின்றனர். இவர்கள்தான் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியிருக்கிறார்கள். ஆய்வுப் பணிகளில் ஆர்வத்துடன் தீவிரமாகப் பங்கேற்பது மட்டுமின்றி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளையும் கண்டறிந்திருக்கின்றனர்.
நுண்ணறிவுச் சோதனைகளில் அவர்கள் பெறும் புள்ளிகளின் அடிப்படையில், அவரது திறன்கள் மதிப்பிடப்படுகின்றன. அவை:
140க்கு மேல் புள்ளிகளைப் பெற்றவர்கள். நம்பமுடியாத புத்திசாலித்தனம் மற்றும் அரிய படைப்புத் திறன் கொண்டவர்கள். அதிக நுண்ணறிவு எண் கொண்ட இவர்கள், அறிவியல் முயற்சிகளில் எளிதில் வெற்றி பெறுவதுடன், மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை கண்டறிகிறார்கள். விண்வெளியை ஆராய்தல், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், நோய்களுக்கான சிறந்த சிகிச்சைகளைத் தேடுதல், மனித இயல்பு மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்தல் என்று இவர்கள் திறனைச் சொல்லிக் கொண்டே செல்லலாம். உலக மக்கள் தொகையில் இத்தகைய புள்ளிகளைப் பெற்றவர்கள் 0.2% எனும் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பர்.
131 முதல் 140 வரையிலான புள்ளிகளைப் பெற்றவர்கள். தங்கள் இலக்குகளை அடையக்கூடியத் திறனுடையவர்கள். உலக அரசியலாளர்கள், அறிவியலாளர்கள், பெரும் நிறுவனத் தலைவர்கள் மற்றும் மேலாண்மைப் பணியிலிருப்பவர்கள் போன்றவர்கள் இப்பிரிவில் இருப்பர். இந்த நிலையில் உலக மக்கள் தொகையில் 3% எனும் அளவில் இருக்கின்றனர்.
121 முதல் 130 வரையிலான புள்ளிகளைப் பெற்றவர்கள். உயர்ந்த நுண்ணறிவு கொண்ட இவர்கள் வெற்றிகரமானவர்கள். படைப்பாற்றல் திறன் மிக்கவர்கள். உலக மக்கள் தொகையில் இத்தகைய புள்ளிகளைப் பெற்றவர்கள் 6% எனும் அளவில் இருக்கின்றனர்.
111 முதல் 120 வரையிலான புள்ளிகளைப் பெற்றவர்கள். சராசரிக்கு மேல் புத்திசாலித்தனமுடையவர்கள். இவர்கள் வேலை செய்ய விரும்பினால், எளிதாக அதிக ஊதியம் பெறும் வேலையினைப் பெறக்கூடிய திறனுடையவர்கள். உலக மக்கள் தொகையில் இத்தகைய புள்ளிகளைப் பெற்றவர்கள் 12% எனும் அளவில் இருக்கின்றனர்.
101 முதல் 110 வரையிலான புள்ளிகளைப் பெற்றவர்கள். இவ்வுலகின் பெரும்பாலான மக்கள் இப்பிரிவிலேயே அடங்குகின்றனர். இது உலகச் சராசரி நுண்ணறிவு எண் கொண்ட பிரிவாகவும் இருக்கிறது. இவர்களது முயற்சி செய்தால் எந்தவொரு பணியையும் செய்து விட முடியும்.
91 முதல் 100 வரையிலான புள்ளிகளைப் பெற்றவர்கள். உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (25%) இப்பிரிவின் கீழாகத்தான் இருக்கின்றனர். இத்தகையவர்கள் படிப்பில் ஓரளவு வெற்றி பெற முடியும். இவர்களால், குறிப்பிடத்தக்க சிந்தனைத் திறன் தேவையில்லாத துறைகளில் வேலை செய்ய முடியும்.
81 முதல் 90 வரையிலான புள்ளிகளைப் பெற்றவர்கள். இவர்கள் உயர்கல்வி பெறுவது அரிது. இவர்கள் சிந்தனைத் திறன் தேவையில்லாத, உடல் உழைப்பிலான வேலைகளை மட்டுமேச் செய்யக் கூடியவர்களாக இருக்கின்றனர். உலக மக்கள் தொகையில், இத்தகைய புள்ளிகளைப் பெற்றவர்கள் 10% எனும் அளவில் இருக்கின்றனர்.
71 முதல் 80 வரையிலான புள்ளிகளைப் பெற்றவர்கள். இவர்கள் சிறிது மனநலம் குன்றியவர்கள். இவர்கள் பெரும்பான்மையாக சிறப்புப் பள்ளிகளில் படிப்பவர்களாக இருக்கின்றனர். இவர்களின் வெற்றி என்பது சராசரியை விட அரிதாகவே இருக்கிறது. உலக மக்கள் தொகையில். இத்தகைய புள்ளிகளைப் பெற்றவர்கள் சுமார் 10% எனும் அளவில் இருக்கின்றனர்.
51 முதல் 70 வரையிலான புள்ளிகளைப் பெற்றவர்கள். இவர்கள் மனநலக் குறைபாடு உடையவர்கள். இவர்கள் சமூகத்தில் அரிதாகவே முழு அளவிலான உறுப்பினர்களாக இருக்கின்றனர். சுதந்திரமாக வாழ முடியும். வெளிப்புற உதவியின்றித் தங்களைக் கவனித்துக் கொள்ள முடியும். உலக மக்கள் தொகையில், இத்தகைய புள்ளிகளைப் பெற்றவர்கள் 7% எனும் அளவில் இருக்கின்றனர்.
21 முதல் 50 வரையிலான புள்ளிகளைப் பெற்றவர்கள். மிகக் குறைந்த அளவிலான நுண்ணறிவு கொண்டவர்கள். தனி நபர்கள் மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் வளர்ச்சியில் பின் தங்கியே இருக்கின்றனர். இவர்களால் சாதாரணமாகப் படிக்க முடியாது. இவர்களைக் கவனித்துக் கொள்ளப் பாதுகாவலர்கள் தேவைப்படும். உலக மக்கள் தொகையில், இத்தகைய புள்ளிகளைப் பெற்றவர்கள் 2% எனும் அளவில் இருக்கின்றனர்.
20 புள்ளிகளுக்குக் கீழே இருப்பவர்கள். கடுமையான மனநலம் குன்றியிருப்பவர்கள். இவர்களால் சொந்தமாக வாழ முடியாது, வேலைக்குச் செல்ல முடியாது, சொந்தமாக உணவு, உடை மற்றும் தங்குமிடம் சம்பாதிக்க முடியாது. எனவே இவர்கள் தொடர்ந்து யாராவது ஒருவர் பாதுகாப்பில்தான் இருக்க முடியும். இவர்களால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது, இவர்கள் பெரும்பாலும் உளவியல் விலகல்களால் பாதிக்கப்படுகின்றனர். உலக மக்கள் தொகையில் 0.2% எனும் அளவில் இருக்கின்றனர்.