Kitchen Tips 
மங்கையர் மலர்

சமையல் பாத்திரத்தில் கரி படிவதைத் தவிர்க்கவே முடியவில்லையா? 9 மிகவும் பயனுள்ள கிச்சன் டிப்ஸ்!

பிரபு சங்கர்

1. தினமும் மிக்ஸி பயன்படுத்துபவரா நீங்கள்?

மோட்டார் உயிரோடு இருக்கிறது, ஆனால் பிளேடுதான் மழுங்கி விடுகிறது என்று அங்கலாய்த்துக் கொள்கிறீர்களா? புதிதாக பிளேடு வாங்கி பூட்டிக் கொள்ளலாம் என்றால் இந்தச் செலவு வருத்தம் தருகிறது. வேண்டாம், செலவு செய்ய வேண்டாம். வாரத்துக்கு ஓரிரு முறை மிக்ஸி ஜாரில் சிறிதளவு உப்பு போட்டு தண்ணீர் விட்டு, ஓட விடுங்கள், பிறகு கழுவி விடுங்கள். புது பளபளப்புடன், பிளேடுகள் செம ஷார்ப்பாக இருக்கும்.  

2. நான்ஸ்டிக் தோசைக்கல்லைப் பயன்படுத்துகிறீர்களா?

ஆளாளுக்கு என்னவெல்லாமோ சொல்லி பயமுறுத்தினாலும், அதைக் கைவிட மனசில்லை, இல்லையா? ஆனால் அந்தக் கல்லின் ஓரம் தடிமனாகிறதே, அதை எப்படி தவிர்ப்பது? கவலைப்படேல். கல்லை உபயோகித்தவுடன், அது சூடாக இருக்கும்போதே ஒரு துணியால் அழுத்தி நன்றாக முழுமையாகத் துடைத்து விடுங்கள், கல் ஆறின பிறகு லிக்விட் சோப் போட்டு கழுவி விடுங்கள். கல்லின் வட்ட ஓரம் தடிமனாகாது; உங்கள் முகவாட்டமும் போகும்.

3. என்னதான் சோப்புப் போட்டு கழுவி வைத்தாலும், சமையல் பாத்திரத்தில் கரி படிவதைத் தவிர்க்கவே முடியவில்லையே என்று கவலையா?

டோன்ட் ஒர்ரி.  உப்புடன் அரிசி மாவு அல்லது கொஞ்சம் சாம்பல் கலந்து தண்ணீர் விட்டுக் குழைத்து, இந்தக் கலவையால் பாத்திரத்தைத் தேயுங்கள். கரி வந்த சுவடே தெரியாமல் காணாமல் போகும்.

4.  தேங்காய் உடைப்பது ஒரு கலைதான். அந்தக் கலை உங்களுக்கு வரவில்லையா?

மிகச் சரியான இரு அரை வட்டமாக உடைகிறது என்றால் அது சாதனையே! சரி, நீங்கள் தேங்காயை கவனித்திருக்கிறீர்களா? அதன் மேல் பகுதியில் மூன்று நரம்புகள் கொஞ்சம் தெளிவாகவே தெரியும். இதில் எந்த இரு நரம்புகளுக்கிடையே இடைவெளி அதிகமாக இருக்கிறதோ அந்தப் பகுதியில் தேங்காய் உடைப்பானால் ஒரு போடு போடுங்கள், சில்லுகள் பெயராமல் ஒரே தட்டில்கூட தேங்காய் சரிபாதியான இரண்டு மூடியாகி உங்களை மகிழ்விக்கும்.  

5. தக்காளிக் காய் பழுக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா?

தக்காளிக் காய் போட்டு சமையல் செய்து சாப்பிட ஆசை. விலை சல்லிசாக இருக்கிறதே என்று ஒரு கிலோ வாங்கி வந்தாகி விட்டது. முதல்நாள் தக்காளிக்காய் ஐட்டம் ஓகே. மறுநாளும், அதற்கடுத்த நாளும் அதே மாதிரி சமைக்கும்படி வற்புறுத்துகின்றனவா அந்தக் காய்கள்? அதாவது பழுக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா? கவலைப்படாதீர்கள். பழுக்காத தக்காளிகளோடு ஒரே ஒரு பழுத்த தக்காளியைப் போட்டு வையுங்கள் - பழுக்காததெல்லாம் பழுத்துவிடும். 

6. குளிர் காலத்தில் தயிர் லேசில் உறையாது. என்ன செய்யலாம் என்று தவிப்பவரா நீங்கள்?

வழக்கத்தைவிட அதிகமாகவே மோர் ஊற்றினாலும் சிலசமயம் திரி திரியாகத்தான் வேடிக்கை காட்டுமே தவிர, திடமான தயிராக உறையாது. என்ன செய்யலாம்? உறைகுத்திய பாத்திரத்தை தட்டுப் போட்டு மூடாமல் இன்னொரு பாத்திரத்தைக் கவிழ்த்து மூடி வையுங்கள், வெட்டித்தான் சாப்பிடவேண்டும் என்பதுபோல கெட்டியாகத் தயிர் உறைந்துவிடும். 

7. சிலசமயம் தக்காளி கொஞ்சம் கொளகொள என்று ஆகிவிடும். ஆனால் அது அழுகல் அல்ல. என்னமோ அதன் வாகு அப்படி! சரி இந்த கொள கொளப்பை கெட்டிப்பது எப்படி?

கொளகொளத்து வருந்தும் தக்காளிகளை ஒரு பாத்திரத்தில் போடுங்கள், கூடவே அவற்றுடன் நட்பாகப் பழக நாலைந்து ஐஸ் கட்டிகளையும் போட்டு ஓர் இரவு வைத்திருங்கள், மறுநாள் காலை, ஐஸ் கட்டி உருகித் தண்ணீராகிவிடுமே தவிர, தக்காளி மட்டும் கெட்டியாகிவிடும்.

8. மாதுளம் பழத்தை வீட்டுக்காரர் நிறைய வாங்கி வந்துவிட்டார். ஆனால் யார் நறுக்கி முத்துகளை உதிர்த்துக் கொடுப்பதாம்?

இந்த சோம்பேறித்தனத்தாலேயே வெளியே வைத்திருக்கும் மாதுளை, வாடிப்போய் பரிதாபமாக முழிக்கும். சரி, ப்ரிட்ஜில் வைத்துவிடலாம், இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு சுறுசுறுப்பை வளர்த்துக் கொண்டு எடுத்து சாப்பிடலாம் என்று பார்த்தால், அடக் கடவுளே, மாதுளை அழுகியே போய்விட்டதே! இப்படி மொத்தமாக நஷ்டப்படாமலிருக்க அதை  நான்காகக் கீறி (உடைக்க வேண்டாம்) ப்ரிட்ஜில் வைத்து விட்டால் வீணாகாது. அதோடு வேறு ஏதையாவது எடுக்க ப்ரிட்ஜைத் திறக்கும்போது இது கண்ணில் படுமா, உடனே எடுத்து முத்துகளை உதிர்த்து சாப்பிடவும், சாப்பிடக் கொடுக்கவும் தோன்றும். சரியா? 

9. டப்பாவில் போட்டு வைத்திருக்கும் பட்சணத்தில் காரல் வாடை வீச தொடங்குகிறதா?

ஆசை ஆசையாக எண்ணெய் பலகாரங்களைப் பண்ணியாகி விட்டது. பேரப்பிள்ளைகள் வரும், போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது போக, அதுகள் ‘லேஸை‘யும் ‘சீஸ் பால்’ஸையும்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கும். ஆனால், பண்ணி வைத்து டப்பாவில் போட்டு வைத்திருக்கும் பட்சணத்தில் காரல் வாடை வீசுமே, வீணாகப் போய்விடுமே! கடவுளே! அஞ்சேல். பட்சண டப்பாக்களில் காரல் வாடை அடிக்காமலிருக்க ஒரு துணியில் சிறிது உப்பு முடிந்து அந்த டப்பாக்களில் வைத்து விடுங்கள். எத்தனை நாளானாலும் காரல் வாடை வரவே வராது. ஒருவேளை பேரப்பிள்ளைகள் நாள்பட்ட இந்த பட்சணத்தை விரும்பி சாப்பிடவும் கூடும்.

கிரிப்டோவில் முதலீடு செய்வது சரியான யுக்தியா?

தண்ணீர் குடிப்பதற்கு இத்தனை விதிமுறைகளா? இது தெரியாம போச்சே!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

SCROLL FOR NEXT