இசை, நாட்டியம், நாடகம் என்ற மூன்றிலும் திறமை வாய்ந்தவர் அனுகிரஹா ஸ்ரீதர். இந்தியாவைத் தவிர அமெரிக்காவிலும், தென்னாப்பிரிக்காவிலும் நாட்டிய நிகழ்ச்சிகள் வழங்கியிருக்கிறார்.
அமெரிக்காவில் வளர்ந்து வந்த அனுகிரஹா, ஏழு வயதில் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தார். எதற்காக?
“பெற்றோர் அந்த முடிவை எடுத்ததால் இது நடந்தது என்பது வரைதான் அப்போது புரிந்தது. பரதம் பயின்று, அந்தக் கலையை நான் வளர்ப்பதைக் காட்டிலும், அந்தக் கலைமூலம் என்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் தான் என்னை சென்னைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற விளக்கத்தை இப்போது என்னால் தரமுடிகிறது. அதை ஒரு வரமாக நினைக்கிறேன்.
என் அம்மா, எனக்கு ஏழு வயதிருக்கும்போது பரதநாயகி டாக்டர் பத்மா சுப்ரமண்யம் அவர்கள் முன் என்னைக் கொண்டு நிறுத்தி, எனக்கு நாட்டியம் கற்றுத் தரும்படி கேட்க, அவர் முன்னால் பாடியும், ஆடியும் காண்பித்தேன். பரதக் கலைவடிவத்திற்கான விதை அப்போது என்னுள் விதைக்கப் பட்டு விட்டது. என் குருவின் மூலம் பரதம் என்னுள் வளர்ந்து, பரதத்தால் நான் வளரத் தொடங்கினேன். நான் வளர்ந்த இடம், படித்த படிப்பு, கற்றுக் கொண்ட விஷயங்கள் இவை எல்லாமே மாறியிருந்தாலும், என் கூடவே இன்றுவரை மாறாது வந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம் பரதம்.
இப்போது திருமணமாகி ந்யூயார்க்கில் வாழும் நிலையில், இந்த உன்னதமான கலை வடிவத்தை அந்த மண்ணில் அரங்கேற்றி பரிமளிக்க முடிகிறது. சமீபத்தில் நடந்த ரொம்ப அழகான விஷயம் 75வது இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி, கேபிட்டால் ஹில்லில் நடந்த ‘ஆஸாதிகா அம்ருத் மஹோத்ஸவ்’ நிகழ்ச்சி. அதில் நமக்கெல்லாம் ரொம்பப் பிடித்த பாரதியின் “சிந்து நதியின் மிசை” பாட்டிற்கு என்னால் ஆட முடிந்தது. பெரிய தலைவர்களும், இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த பிரமுகர்களும், இந்தியாவின் கலாச்சார தூதுவரும் இணைந்து நம் தேசத்தின் சுதந்திர தினத்தைக் கொண்டாடி, அதில் இந்தக் கலைவடிவத்துக்கு ஒரு மேடை அமைத்துத் தந்தது உணர்ச்சிப் பூர்வமாக இருந்து. அதில் எனக்கு அழைப்பு விடுத்து என்னையும் ஆடச் சொன்னது பெருமையான, புல்லரிக்கும் தருணமாக அமைந்தது. நம் கலாச்சாரமும், பண்பாடும் எவ்வளவு போற்றும்படியாக உலக அரங்கில் இருக்கிறது என்பதை என்னால் பார்த்து ரசிக்க முடிந்தது.
சமீபத்தில் நான் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சிக்கு, பாடல்களுக்கு நானே நடனம் அமைத்தேன். அது ஒரு புதிய மற்றும் அரிய வாய்ப்பாய் அமைந்தது. சொல்லிக் கொடுத்ததை நல்லபடியாய் ஆடி வந்த எனக்கு, அதற்கு அடுத்த கட்டமாக நடனம் அமைக்கவும் முடிந்தது, இது, இந்த நாட்டியக் கடலில் எனக்குக் கிடைத்த ஒரு நல்முத்து.
கடந்த 20 வருடங்களாக நிறைய கற்றுக் கொண்டிருக் கிறேன். இனிமேல் கற்றுக் கொண்டதை வளர்த்துக் கொண்டு, புதிய பரிமாணங்கள் கொடுத்து, இந்தக் கலையை என்னுடைய கோணத்தில் எடுத்துக் காட்டவேண்டும் என்று ஆசை. நான் அமெரிக்காவில் வசிக்கப்போகிறேன் என்ற நிலையில், அந்த நாட்டில் நம் கலையின் அழகையும் ஆழத்தையும் என்னால் முடிந்த வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது என்னுடைய சிறிய காணிக்கையாக இருக்கும்.
இதைத் தாண்டி, என் குரு பத்மா சுப்ரமண்யம் அவர்கள் 108 கரணம் என்னும் நாட்டிய அசைவுகளை வடிவமைத் திருக்கிறார். அது என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம். அதையும் நிச்சயம் பல வகைகளில் வெளிப்படுத்துவேன்.
இன்னொரு விஷயம். திருவான்மையூர் ரோட்டரி சங்கம் எனக்களித்த “வொகேஷனல் எக்ஸலன்ஸ்” விருது நான் மிகவும் மதிக்கத்தக்கது. எனக்கு மிகுந்த பெருமிதத்தை அளித்த விஷயம்.
“பரதநாட்டியமானது ஒரு கலை வடிவம் என்பதைத் தாண்டி, அது வாழ்க்கை முறை. சின்ன விஷயங்களைக் கூட புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் திறனை இதன் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி எதிலும் ஒரு அழகையும், பொலிவையும் என்னால் பார்க்க முடிகிறது. பரதம் நான் ஆத்மார்த்தமாக நேசிக்கும் கலை”.
அனுகிரஹாவிற்கு தொடர்ந்து கடவுள் அனுகிரஹம் கிடைக்க வாழ்த்துக்கள்!