குழந்தை திடப்பொருள் சாப்பிட ஆரம்பித்தவுடன், தாய்ப்பால் கொடுக்கும் அளவு குறையுமா அல்லது அப்படியே இருக்குமா?
முதலில் திடப் பொருட்களையும் பிறகு தாய்ப்பாலையும் வழங்கினால், தாய்ப்பால் கொடுக்கும் அளவு குறையும். குழந்தைக்கு திடப்பொருட்கள் கொடுக்கும் சில மணிநேரங்கள் முன்பு தாய்ப்பால் கொடுத்துவிட்டு பின்னர் திடப்பொருளை ஊட்டினால், தாய்ப்பாலின் சுரப்பு சரியான விகிதத்தில் இருப்பதை உறுதிச் செய்துக்கொள்ளமுடியும். குழந்தைக்கு ஒரு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதுதான் முக்கியம். திடப்பொருள் உணவுகள் இரண்டாம்பட்சம்தான்.
ஒரு இளம்தாய் தனது தாய்ப்பால் பயணம் வெற்றிகரமாக அமைவதை உறுதிசெய்ய என்னென்ன செய்ய வேண்டும்?
பிரசவத்திற்கு முற்பட்ட காலத்திலேயே பாலூட்டுதல் குறித்த வகுப்பை எடுத்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற வகுப்புகளுக்கான வசதிகள் இன்று ஏராளமாக உள்ளன. தாய்ப்பால் குறைபாடு, தாய்ப்பால் ஊட்டுவதில் ஏற்படக்கூடிய சவால்கள் போன்றவை குறித்த பல சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள பாலூட்டுதல் ஆலோசகரை அணுகி (Lactation Consultant) தெளிவு பெறுங்கள். குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்டுங்கள். ஆரம்ப நாட்களில் அடிக்கடி பாலூட்டுவது, சீரான போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதை உறுதி செய்யும். பிறந்த குழந்தையை உங்கள் (தாயின்) மார்பின் மேல் போட்டு அணைத்துக்கொள்ளுங்கள். இதனை ‘Skin-to-skin’ நிலை என்று சொல்வார்கள். அடிக்கடி இவ்வாறு செய்வது பாலூட்டுதலை அனைத்து கோணங்களிலிருந்தும் மேம்படுத்தும். ஆரம்ப நாட்களில் தேவையில்லாமல், பம்பைப் பயன்படுத்தி பாலூட்டுவதன் மூலமோ அல்லது குழந்தைக்கு பால் பவுடர் போன்ற செயற்கை பால் கொடுப்பதன் மூலமோ பால் கொடுப்பதை தவிர்க்கவும். அதிக தாய்ப்பால் சுரப்பதன் காரணமாக சிலருக்கு பால் கட்டிக்கொள்ளும். அப்படிப்பட்ட நேரங்களில் கைகளை பயன்படுத்தி தாய்ப்பாலை அகற்றும் வழிமுறையை பின்பற்றுவதுதான் நல்லது. தாய்ப்பால் கொடுப்பதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பாலூட்டுதல் ஆலோசகரைச் சந்தித்து, தீர்வுகளை நாடுவது குழந்தைக்கும் நல்லது என்பதை மனதில் கொள்ளவும். மனக் குழப்பங்களுடன் பாலூட்டினால், சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். இதற்கு இடம் தர வேண்டாம்.
தாய்ப்பால் குழந்தைக்கு முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஒரு தாய் எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது? உணவு, மனஅழுத்தம் மற்றும் உடற்பயிற்சி போன்ற காரணங்களால் தாய்ப்பால் சுரக்கும் அளவில் மாற்றம் இருக்குமா?
தாய்ப்பால் சுரத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை இரண்டு வழிகளில் அறிந்துக்கொள்ளலாம். முதலாவது, தாய்ப்பால் எடுத்துக்கொள்ளும் குழந்தையின் உடல் எடை ஒவ்வொரு மாதத்திற்கு ஏற்றார்போல் அதிகரிக்கும். இரண்டாவது, குழந்தை சீராக தாய்ப்பால் எடுத்துக்கொண்டால், அதற்கு ஏற்றார்போல் சிறுநீர் கழிக்கும். உதாராணத்திற்கு எட்டு நாளான குழந்தைக்கு, பொதுவாக, ஒரு நாளைக்கு 8 முதல் 12 முறை நாப்கின் மாற்ற நேரிடும். மேலும், தாய்ப்பால் சுரத்தலின் அளவு என்பது தாய் எடுத்துக்கொள்ளும் உணவு, தண்ணீர் அளவு, ஓய்வு. இவற்றைப் பொருத்தது. மன அழுத்தம் மற்றும் குழந்தையை சரியாக பார்த்துக்கொள்ள முடியாததால் வரும் உடல் மற்றும் மன உளைச்சல் காரணமாக தாய்ப்பால் சுரத்தலில் பாதிப்பு ஏற்படும். மாதசுழற்சி தொடங்கும்போதும் தாய்ப்பால் சுரப்பது குறைவாக இருக்கும். தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தால், தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும். அஸ்துமா அல்லது இதர நோய்களுக்கான மாத்திரைகள் நாள்பட எடுத்துகொள்வதாலும் தாய்ப்பால் பற்றாகுறை ஏற்படலாம். இவ்வாறு மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது, மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்றி, அதன்படி தாய்ப்பால் அளிப்பது தாய்க்கும் சேய்க்கும் நல்லது.