சிறுநீர் கசிவு அல்லது சிறுநீர் அடங்காமை என்பது ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கும் நிலையில் இவை ஏன் வருகிறது? இதற்கு என்ன காரணம்? சிகிச்சை முறை என்ன? என்பது குறித்து இங்கு விளக்குகிறார் மகப்பேறு மருத்துவ நிபுணர் Dr. Mala Raj, Firm Hospitals, Chennai.
சிறுநீர் கசிவு:
பெண்கள் தங்களது 40 -45 வயதில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை இருமும் போதும் தும்மும் போதும் சிறுநீர் வெளியேறுவது. சிறுநீர் கசிவு அல்லது Stress Urinary Incontinence (SUI) என்று அழைக்கப்படுகிறது.
சிறுநீர் அடங்காமை:
சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உணர்வு வரும் போது கழிப்பறையை நோக்கி செல்வதற்குள் சிறுநீர் வெளியேறிவிடும். இது சிறுநீர் அடங்காமை அல்லது Urge urinary incontinence (UI) என்று அழைக்கப்படுகிறது.
சிறுநீர் கசிவுக்கு என்ன காரணம்?
பொதுவாக சிறுநீர்ப்பை bladder மற்றும் சிறுநீர்க்குழாய் அல்லது சிறுநீர் வெளிவரும் வழி urethra இடையில் ஒரு சிறிய angle போன்று இருக்கும். இவை சரியான நிலையில் இருக்கும் போது யுரித்ரா ஆனது சிறுநீரை கட்டுக்குள் வைக்க செய்யும். ஆனால் பெண்கள் வயதாகும் போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையும். அப்போது இந்த angle ஆனது இலேசாக நேராக இருக்கும். சிறுநீர் வெளிவரும் வழியில் (urethra) அதை கட்டுக்குள் வைக்க முடியாமல் தளர்ந்துவிடும். இதனால் தான் இருமினால் தும்மினால் உடல் அழுத்தத்தை சந்திக்கும் போது கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர்க்குழாய் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றுகிறது. இப்படி ஒவ்வொரு முறையும் உடல் அழுத்தத்தை சந்திக்கும் போது சிறுநீர் வெளியேறுகிறது. இதுதான் சிறுநீர் கசிவு அல்லது Stress Urinary Incontinence (SUI) என்று அழைக்கப்படுகிறது.
சிறுநீர் கசிவு யாருக்கு அதிகம் வருகிறது?
சிறுநீர் கசிவு எல்லா பெண்களுக்கும் கண்டிப்பாக வரும் என்று சொல்லமுடியாது. ஆனால் பெரும்பாலான பெண்கள் இதை எதிர்கொள்கிறார்கள். காரணங்கள் பொறுத்து அவர்கள் மிதமாகவோ அல்லது தீவிரமாகவோ அனுபவிக்கிறார்கள். வயது காரணத்தினால் வரலாம். அதிக சிக்கலுடன் பிரசவம், ஆயுதம் போட்டு குழந்தையை வெளியே எடுப்பது போன்றவை எல்லாம் பிற்காலத்தில் சிறுநீர் கசிவு அபாயத்தை அதிகரிக்கும்.
சிறுநீர் அடங்காமை என்றால் என்ன?
சிறுநீர்ப்பையின் தசைகள் தான் detrusor என்று அழைக்கப்படுகிறது. இந்த தசைகள் எரிச்சல் அல்லது அழற்சிக்கு உள்ளாகும் போது இந்த சிறுநீர் அடங்காமை உண்டாகும். (detrusor muscle overactivity) நரம்பு பிரச்சனை, வயது போன்ற நிலையில் தசைகள் பாதிப்பை ஏற்படுத்தும் போது சிறுநீர் அடங்காமை ஏற்படுகிறது. அதனால் சிறுநீர் கசிவு பிரச்சனையா அல்லது சிறுநீர் அடங்காமை பிரச்சனையா என்பதை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கும் போது முழுமையாக இந்த அசெளகரியத்திலிருந்து விடுபட முடியும்.
சிறுநீர் கசிவு - அளிக்கப்படும் சிகிச்சைகள்..
சிறுநீர் கசிவு பிரச்சனை என்றால் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர்க்குழாய் வழியாக வெளியேறும் இடத்தில் உள்ள angle சரி செய்ய வேண்டும். இதற்கு மருந்துகள் துணைபுரியாது. இவர்களுக்கு இரண்டு விதமான அறுவை சிகிச்சைகள் உதவி செய்யலாம்.
சிகிச்சை - 1: பெண்களின் யோனி பகுதியில் டேப் போட்டு அந்த angle சரி செய்யலாம். தற்போது டேப் போடுவது சில பிரச்சனைகளை உண்டு செய்வதால் இரண்டாவது முறை சிகிச்சை பெரிதும் அறிவுறுத்தப்படுகிறது.
சிகிச்சை - 2: லேப்ராஸ்கோபி மூலம் angle தூக்கி தசையுடன் தையல் போடுவதன் மூலம் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேறாமல் கட்டுப்படுத்தப்படுகிறது. இது Laparoscopic Burch colposuspension சிகிச்சை ஆகும்.
சிறுநீர் கசிவு அறுவை சிகிச்சை குணமாகும் காலம் எவ்வளவு?
சிறுநீர் கசிவுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்ய ஒரு நாள் மருத்துவமனையில் இருந்தால் போதும். general anesthesia மயக்கமருந்து கொடுத்து இந்த சிறிய அறுவை சிகிச்சை செய்யப்படும். மறுநாள் அவர்கள் வீடு திரும்பலாம். வழக்கமான வேலைகள் செய்யலாம். அதற்கு பிறகு இந்த சிறுநீர் கசிவு பிரச்சனை இருக்காது.
சிறுநீர் கசிவு என்பது பெண்களை எப்படி பாதிக்கிறது?
சிறுநீர் கசிவு என்பது கேட்கும் போது ஒன்றும் பிரச்சனையில்லை என்று நினைக்கலாம். ஆனால் இதை எதிர்கொள்பவர்களுக்கு மிகுந்த உபாதை என்று சொல்லலாம். இவர்களால் பொது இடங்களில் இயல்பாக இருக்க முடியாது. இருமினால் அல்லது தும்மினால் சிறுநீர் கசிவு ஆகுமோ என்னும் அச்சத்தில் இருப்பார்கள். இந்த வேதனை சில நேரங்களில் மன உளைச்சலுக்கு கூட ஆளாக்கி விடும் அதிலிருந்து மீண்டு வர இந்த சிறிய சிகிச்சை பெரிதும் பயனளிக்கும்.
சிறுநீர் அடங்காமைக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்
சிறுநீர் அடங்காமைக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. மாத்திரைகள் கொடுத்தாலே அவை தசை அழற்சியை சரி செய்து இதை குணப்படுத்த செய்யும். அதனால் அறிகுறிகள் கொண்டு சிறுநீர் கசிவு அல்லது சிறுநீர் அடங்காமை பிரச்சனை என்பதை கவனத்தில் கொண்டு சிகிச்சை பெற்றால் முழுமையாக குணமடையலாம்.