மங்கையர் மலர்

மும்பை டப்பாவாலாவின் க்ளவுட் கிச்சன்! புது முயற்சி!

மும்பை பரபர!

மும்பை மீனலதா

மும்பை டப்பாவாலாக்கள் மூன்று தலைமுறைகளாக கடந்த 130 வருடங்கள், ஒவ்வொரு நாளும் வெய்யில், மழை, குளிரெனப் பார்க்காமல் கஸ்டமர்களின் வீடுகளிலிருந்து உணவு டப்பாக்களைச் சேகரித்து, அவரவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு கொண்டு போய்க் கொடுத்து வருகின்றனர். தவிர பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கும் பணியாற்றுகிறவர்களுக்கும் டெலிவரி செய்கின்றனர்.

இத்தகைய சிறப்பான சர்வீஸிற்கு Quality Assurance Study 6 Sigma efficiency rating 99.999999 கொடுத்திருக்கிறது. கொரோனா காரணத்தில் தடைப்பட்ட டப்பாவாலாக்களின் தொழில், மீண்டும் பழைய நிலைமையை எட்டிப் பிடிக்க இயலவில்லை. இருந்தாலும் இவர்களது சர்வீஸ் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

நான்காவது தலைமுறையில் வந்த 25 வயது நிரம்பிய டப்பாவாலா அன்ட்ரே ரித்தேஷ், புதிய சகாப்தம் ஏற்படுத்தியுள்ளார். டப்பாவாலாக்களின் மனைவிகள் மற்றும் வீடுகளிலிருக்கும் பெண்மணிகள் என 25 பேர்களை இணைத்து 1000 ச.அடியில் க்ளவுட் கிச்சனை தொடங்கியுள்ளார். 25 பேர்களுக்கும் பலவகை சமையலில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மெனு தயாரிக்கப்படும். அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பலர் முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம். இதன்மூலம் நசித்துப் போன டப்பாவாலாக்களுக்குப் புது வாழ்வு கிடைக்குமென்றும், வழக்கமாக செயல்படும் டப்பாவாலாக்களின் தொழில் பாதிக்கப்படாதென்றும் கூறப்படுகிறது.

க்ளவுட் கிச்சன் விபரம்:

பெரிய – பெரிய உணவகங்களிலிருக்கும் கிச்சனை சுருக்கி, வீட்டினுள் அல்லது ஒரு இடத்தினுள் கொண்டு வந்துவிட்டால், க்ளவுட் கிச்சனாகிவிடும்.

கி.மு. – கி.பி. போல கொ.மு – கொ.பி (அதாங்க கொரோனாவிற்கு முன் மற்றும் கொரோனாவிற்குப் பின்). உலகையே ஆட்டிப் படைத்த கொரோனாவினால் அநேக துறைகள் பெரிய மாற்றத்தை அடைந்துள்ளன.

எல்லாமே ஆன்லைன் ஆக, கொரோனாவிற்குப் பின்பும் பல அலுவலகங்களின் பணிகள் ஆஃப் லைனுக்கு மாறாமல், ஆன்லைனிலேயே நடந்து வருகிறது.

மருத்துவர்கள் தங்கும் க்வாரன்டைன் மையங்களாகவும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் க்வாரண்டைன் வைக்கப்படும் இடங்களாகவும் ஸ்டார் ஹோட்டல்கள் செயல்பட, அநேகர் வேலை இழந்தனர். அப்போது ஆரம்பமானது இந்த ‘ஆன்லைன் கிச்சன்’ எனும் ‘க்ளவுட் கிச்சன்.’

முதலீடு அதிகமில்லை. குறிப்பிட்ட உணவு வகைகளைத் தயார் செய்து Take away அல்லது டெலிவரி முறையில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கலாம். வீட்டு சமையலறை; மொட்டை மாடி, பால்கனி போன்ற இடங்களே போதும். சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப் க்ரூப் வழியே ‘க்ளவுட் கிச்சன்’ அயிட்டங்களை மக்கள் அறியச் செய்யலாம். மேலும் Zomato, Swiggy போன்றவைகளுடன் இணைத்துவிட்டால், ஆர்டர்கள் கிடைக்கும்.

நிறைய பேர்களை க்ளவுட் கிச்சன் ஈர்த்துள்ளது.  வீட்டு ருசி மாதிரி இருப்பதோடு விலையும் reasonable ஆகத்தான் உள்ளது. ஹோட்டலில் சென்று சாப்பிடுவது மாதிரி இல்லாவிட்டாலும், க்ளவுட் கிச்சனுக்கும் வரவேற்பு இருக்கிறதென்பது நிதர்சனம். மும்பை டப்பாவாலாக்களுக்கும் க்ளவுட் கிச்சன் மூலம் நல்ல வழி ஏற்படுமென நம்புவோம்.  மும்பை டப்பாவாலாக்களின் நான்காவது இளைய தலைமுறையை வாழ்த்துவோம்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT