North indians... Image credit - deccanherald.com
மங்கையர் மலர்

பிழைப்பதற்காக ஊருவிட்டு ஊரு வந்த சகோதரர் என்ன சொன்னார் தெரியுமா?

கல்கி டெஸ்க்

-தா சரவணா

ப்போது தமிழகம் முழுவதும் எந்த ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றாலும் வட இந்தியர்கள் முகம் அதிகமாகத் தென்படுகிறது. அதிலும் ஆண்கள்தான் அதிகம் காணப்படுகின்றனர். அவர்களது ஊரில் குறைவான சம்பளம் மட்டுமே கிடைப்பதால், வேலை தேடி தமிழகத்தை நோக்கி வரும் இவர்களில் பலர் கடும் உழைப்பாளிகள். அதனால் உள்ளூர் முதலாளிகளும் பெரும்பாலான பணிகளுக்கு இவர்களையே தேர்வு செய்கின்றனர். வயலில் நாற்று நடுவதற்குக்கூட வட இந்தியர்கள் வந்துவிட்டனர்! 

இவர்களுக்குத் தேவை பணி உறுதி, சம்பளம் மட்டுமே. இவர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கிக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். உணவிலும் பெரிய கட்டுப்பாடுகளை அவர்கள் விதிப்பதில்லை. அரிசி கிடைத்தால் போதும். சற்று அதிகப்படியாக கோதுமை மாவு கிடைத்தால் இன்னும் சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். எவ்வளவு நேரம் பணி செய்யச் சொன்னாலும், பணிபுரிய தயாராக உள்ளார்கள். அதனால்தான் தமிழக முதலாளிகள் இவர்களை விரும்புகின்றனர். 

இப்படி இருக்கையில் இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று வாதிடுபவர்களும் உள்ளனர். ஆனால், பல வேலைகளுக்கு உள்ளூர் ஆட்கள் சரிப்பட்டு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, வாதம் செய்பவர்களிடம் பதில் கிடையாது. ஒருநாள் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி பயணித்தபோது, (அந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து டாட்டா நகர் வரை செல்வதாகும்) அந்த ரயிலில், எந்த ஸ்டேஷனில் ரயில் நின்றாலும், எந்தப் பெட்டியிலும் ஆட்கள் ஏற முடியாத அளவுக்கு ஏற்கனவே நிரம்பி வழிந்தபடி இருந்தது. ஏசி கோச்சுகள் மட்டும் விதிவிலக்கு.

அப்படி வரும்போது உடன் பயணித்த ஒரிசாவை சேர்ந்த ஒருவரிடம் பேச்சு கொடுத்தோம். அவர் கூறுகையில், “எங்கள் மாநிலத்தைக் காட்டிலும் தமிழகம் சிறப்பான மாநிலமாக உள்ளது. எங்களுக்குப் போதிய சம்பளம் தருகின்றனர். மேலும், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் பணி செய்கிறோம். அதனால் பணி பாதுகாப்பும் எங்களுக்கு உள்ளது. வருடத்தில் ஒருமுறை ஊருக்குச் சென்று வருகிறோம். அதற்கும் எங்கள் முதலாளிகளே பணம் கொடுத்து அனுப்புகின்றனர். எங்கள் சாப்பாடு மற்றும் தங்கும் இடச் செலவை அவர்களே பார்த்துக்கொள்கின்றனர். இதனால் நாங்கள் சம்பாதிப்பது நல்ல சேமிப்பாக வைத்துக் கொள்கிறோம். நாங்கள் நேரம் காலம் பார்ப்பதில்லை. எவ்வளவு நேரம் ஆனாலும் பணியை முடித்துவிட்டுத்தான் செல்கிறோம். அதற்கேற்ற சம்பளம் முதலாளிகள் கொடுத்து விடுகின்றனர். ஆனால், எங்களில் சிலர் ஒரு சில இடங்களில் தவறாக நடந்து கொள்கின்றனர். அதுதான் எங்கள் அனைவருக்கும் பிரச்னையாக உள்ளது” என்றார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே அருகில் இருந்த நம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் வெளியே எச்சில் துப்பினார். அது அந்த ஒரிசா நபர் மீது பட்டது. அதைப் பார்த்து பதறிப்போன நம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ‘சாரி’ என்றார். அதைக்கேட்ட அந்த நபரோ ‘நோ ப்ராப்ளம் அண்ணா’ என்றார். ஆனாலும் அவரது பெருந்தன்மையை மீறி ஒரு வேதனை அவர் முகத்தில் தெரிந்தது. என்னதான் நன்கு சம்பாதித்தாலும், ஊர் விட்டு ஊர் வந்து பிழைப்பு நடத்துவது என்பது மிகவும் சிரமமானதுதான் என்பதை அவர் முகம் நமக்கு காட்டியது.               

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT