உலகில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாக எலிசபெத் பிளாக்வெல் அறியப்படுகிறார். அதற்கு முன்னர் பல நாடுகளில் பெண்கள் மருத்துவராக இருந்தாலும் அவர்கள் அதை கல்வியாக பயின்று பட்டம் பெறவில்லை.
எலிசபெத் பிளாக்வெல் 1821 ஆம் ஆண்டில் பிப்ரவரி 3 ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டலில் பிறந்தார். சாமுவேல் பிளாக்வெல் மற்றும் ஹன்னா தம்பதியருக்கு பிறந்த ஒன்பது குழந்தைகளில், மூன்றாவது குழந்தை தான் எலிசபெத். அவரது உடன்பிறந்தவர்களில் எமிலி பிளாக்வெல், அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற மூன்றாவது பெண் ஆவார்.
எலிஸபெத்தின் தந்தை சாமுவேல் பிளாக்வெல் ஒரு சர்க்கரை சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வந்தார். சாமுவேல் தனது நான்கு மகன்களைப் போலவே தனது ஐந்து மகள்களையும் கல்வி பயில வைத்தார். வறுமையின் காரணமாக சாமுவேல் 1832 இல் பிரிஸ்டலில் இருந்து நியூயார்க்கிற்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்தார், பின்னர் 1838 இல் சின்சினாட்டிக்கு குடிபெயர்ந்தனர். எலிசபெத்திற்க்கு 17 வயதாக இருந்தபோது அவரது தந்தை இறந்தார்.
வருமானத்திற்காக எலிசபெத் ஹன்னா, மரியன் ஆகியோருடன் இணைந்து இளம் பெண்களுக்கான ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு அகாடமி பள்ளியைத் சின்சினாட்டியில் தொடங்கினர். பின்னர் எலிசபெத் மருத்துவப் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினார்.
பாலின பாகுபாட்டினால் நியூயார்க்கில் உள்ள ஜெனீவா மருத்துவக் கல்லூரியைத் தவிர, அவர் விண்ணப்பித்த மற்ற அனைத்து கல்லூரிகளிலும் நிராகரிக்கப்பட்டார். ஜெனிவா கல்லூரியில் ஆண் மாணவர்கள் எலிசபெத் படிக்க ஏதுவாக ஆதரவு வாக்களித்தனர். இவ்வாறு 1847 இல் எலிசபெத் பிளாக்வெல் அமெரிக்காவில் மருத்துவப் கல்லூரியில் சேர்ந்தார். ஜனவரி 23, 1849 இல் மருத்துவப் பட்டமும் பெற்றார்.
ஏப்ரல் 1849 இல், பட்டம் பெற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க மருத்துவ இதழில் அவர் எழுதிய டைபாய்டு காய்ச்சல் பற்றிய ஆய்வு கட்டுரை, முதல் முறையாக ஒரு பெண் மாணவியால் வெளியிடப்பட்ட மருத்துவக் கட்டுரையாகும். மருத்துவப் பயிற்சிக்காக பாரிஸ் சென்ற அவர் ஒரு பொது மகப்பேறு மருத்துவமனையில் பயின்றார். அப்போது ஒரு நோயாளியிடமிருந்து நோய்த்தொற்று ஏற்பட்டதால் ஒரு கண்ணில் பார்வையற்றவரானார்.
பின்னர் லண்டனுக்குச் சென்று, செயின்ட் பர்த்தலோமிவ் மருத்துவமனையில், புகழ்பெற்ற புளோரன்ஸ் நைட்டிங்கேல் உடன் பணிபுரிந்தார். நியூயார்க்கிற்குத் திரும்பிய அவர், தன் சகோதரி எமிலியுடன் சேர்ந்து 1857 இல் ஏழைப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக நியூயார்க் மருத்துவமனையை திறந்தார். முழுவதும் பெண்கள் பணிபுரிந்த உலகின் முதல் மருத்துவமனை இதுதான்.
பின்னர் மருத்துவமனையை மேம்படுத்தி பெண்கள் மருத்துவப் பயிற்சியை மேற்கொள்ளும் இடமாக மாற்றினார். பெண் பார்வையாளர்களுக்கு பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கினார் .
அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது செவிலியர்களை ஒழுங்கமைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க பங்கைக் எலிசபெத் கொண்டிருந்தார். மேலும் அவரது மருத்துவமனையானது பெண்களுக்கான மருத்துவப் கல்லூரி திட்டத்தை உருவாக்கியது.
பெண்களுக்கு மருத்துவக் கல்வியை நிறுவ முயற்சிக்க எலிசபெத் பிரிட்டனுக்குச் சென்றார். ஜூலை 1869 இல், அவர் பிரிட்டனுக்குப் பயணம் செய்தார். பல வித முயற்சிகளுக்கு பின் 1874 ஆம் ஆண்டில், எலிசபெத் லண்டனில் ஒரு மகளிர் மருத்துவப் பள்ளியை சோபியா ஜெக்ஸ்-பிளேக்குடன் நிறுவினார்.
தன் வாழ் நாள் முழுக்க பல பெண்களை மருத்துவராக்கிய எலிசபெத் பிளாக்வெல் 1910 மே 31 அன்று இங்கிலாந்தின் ஹேஸ்டிங்ஸில் விண்ணுலகம் எய்தினார். உலகெங்கிலும் பெண் மருத்துவர்கள் உருவாக காரணமானவர் எலிசபெத் பிளாக்வெல் என்றால் மிகையல்ல.