எங்க ஊரு SUPER WOMAN 
மங்கையர் மலர்

எங்க ஊரு SUPER WOMAN - 5 அறிமுக அணிவகுப்பு!

கல்கி டெஸ்க்

சாதனைப் பெண்மணி - 5 : சத்யவதி

அறிமுகப்படுத்தியவர்: வித்யா குருராஜன்

Vidya Gururajan, Sathyavathi

அறிமுக உரை:

சாதனை படைத்த பெண்கள் என்று கேட்டால் பட்டியல் கொஞ்சம் நீளம்தான். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையில் சாதனையாளரே! ஆனால், நம்மோடு நம்முடனேயே வாழ்ந்துகொண்டு, போராட்டங்களோடு முட்டி மோதிக்கொண்டு, பின்வாங்கிவிடாமல் மெதுவாக மேலேறிக்கொண்டு, உடன் மற்ற சில மகளிரையும் மேலேற்றிவிட்டு உச்சத்தைத் தொட்ட சூப்பர் உமன் ஒருவரைத்தான் உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறேன்.

புதுச்சேரியைச் சேர்ந்த திருமதி. சத்யவதி..

சீனாவின் தொன்மையான ‘அபாக்கஸ்’ என்ற ஆணி மணிச்சட்டத்தில் கணக்கிடுதலைக் கற்றுக்கொடுப்பதற்கான ஒரு பயிற்சி மையம் நடத்திவருகிறார் இவர். குழந்தைகளின் கணக்கிடும் திறன் வளர்ப்பதோடு நிதானம், கவனம், கூர்மை ஆகியவற்றை வளர்க்கும்  இந்த அபாக்கஸ் நிச்சயமாக ஒரு வரப்பிரசாதம்தான். அதே நேரம் இது ஒரு சிக்கலான கலை. கற்றல் சிக்கலென்றால், சிறு பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தல் அதைவிடவும் சிக்கல்.

SIP Abacus Training Center at Moolakulam, Puducherry

அப்படியென்றால், புதுச்சேரியின் ஆயிரக்கணக்கான குழந்தைகளை இதில் சாம்பியன்களாக்கி, பெற்றோரைத் திருப்திப்படுத்தி, 12 ஆண்டுகளாக அபாக்கஸ் பயிற்சி மையத்தினை வெற்றிகரமாக நடத்திவரும் சத்தியவதி சூப்பர் உமன்தானே!

புதுவையின் வனத்தாம்பாளையம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிப்படிப்புக்கு ஏழு கிலோமீட்டர் சைக்கிளில் பக்கத்து ஊரான அரியூருக்கு வரவேண்டும். பொம்பளப்புள்ள படிச்சு இப்ப என்ன ஆகப்போகுது என்ற கேள்விகளோடு கல்விப் பயணம் துவங்கிய பல கோடி இந்திய பெண்களுள் சத்தியவதியும் ஒருவர். பள்ளிப் பருவத்திலேயே கணக்கில் காதல் வந்துவிட நாளடைவில் கணக்குகளைத் தோழிகளுக்குச் சொல்லிக்கொடுக்கத் துவங்கியிருக்கிறார்.

இயற்பியலில்‌ இளங்கலைப் பட்டம்‌‌ பெற்று தொடர்ந்து பி.எட் படிப்பையும் முடித்திருக்கிறார். கணவர் அளித்த ஊக்கத்தால் பி.எட் முடித்து, அவர் படித்த பள்ளியிலேயே பணிக்கு விண்ணப்பிக்க, உடனே வேலையும் கிடைக்க, இப்படித்தான் கேஷுவலாகத் துவங்கியிருக்கிறது இவரின் கரியர்‌.

இரண்டாவது மகன் பிறந்ததும் பணியினை விட்டுவிலகிய இவருக்கு அபாக்கஸ் என்ற ஒன்றைக் காட்டிக்கொடுத்து செய்கிறாயா என்று ஒரு தோழி கேட்க, அன்று சட்டென்று எடுத்த முடிவே வாழ்வின் திருப்புமுனை என்கிறார் இந்த அபாக்கஸ் ஆசிரியை.

தோழியிடமிருந்து  மலேஷியாவில் துவங்கப்பட்ட ஸிப் அபாக்கஸ் நிறுவனம் பற்றி அறிந்த சத்யவதி, உள்ளிருந்து வந்த குரலுக்கு மதிப்பளித்து இதற்குள் இறங்க முடிவெடுக்க, கணவரும் குடும்பமும் தடைசொல்லாதிருக்க, அபாக்கஸ் கற்கும் பயிற்சியில் இணைந்தார்.

கணிதத்தில் திறன் கொண்டவர், கற்பித்தலில் காதலுடையவர், கற்றலுக்கு வயதும் சூழலும் தடையே அன்று என்று நினைப்பவர்.

நிறுவனம் அளித்த பயிற்சியில் விரைவாகக் கற்று மாஸ்டர் டிரெய்னராக இன்றைக்கு உயர்ந்து நிற்கிறார்.  ஆரம்பத்தில் வேறு‌ நபர்களின் அபாக்கஸ் மையங்களில் ஆசிரியையாகப் ‌பணிபுரிந்த இவர் 2012ல் சொந்தமாக ஒரு‌ பயிற்சி மையம் துவங்கினார்.

வெறும் 45 மாணவர்களோடு, 3 ஆசிரியர்களோடு‌ ஆரம்பிக்கப்பட்ட இவரது பயிற்சி மையம் இன்று 425 மாணவர்களோடு 15 ஆசிரியர்களோடு பரபரப்பாய் நடக்கிறது. இவரது பயிற்சி‌மையத்தில் பயிலும் மாணவர்கள் ஆண்டுதோறும் ஸிப் நிறுவனம் நடத்தும் ப்ராடிஜி போட்டிகளில் கோப்பைகளை அள்ளி வருகிறார்கள்.  சிறந்த மையத்துக்கான விருதும் இவர்களுக்கே கிடைத்தது வருகிறது.

SIP - Prodigy Events

கொரோனா காலகட்டத்தில் இயங்கலையில் வகுப்புகள் நடத்தியதையும் ஆர்வத்தோடு கற்ற பிள்ளைகளையும், கட்டணத்தில் குறை வைக்காத பெற்றோரையும், இதனால் வந்த வருமானம் ஆசிரியர்களுக்கு அந்த காலகட்டத்தில் பேருதவியாக இருந்ததையும் நினைவு கூர்கிறார் சத்யவதி.

அர்ப்பணிப்போடு செய்யும் எந்த வேலையும் தவறாகவும் போகாது, அங்கீகாரம் பெறாமலும் போகாது என்பதே இவரின் அடிப்படை நம்பிக்கையாகவுள்ளது. வியாபாரம் என்று மட்டும் இந்த மையத்தை நடத்தாமல் குழந்தைகளை முதலில் நிறுத்தி அவர்களிடம் ஒழுங்குமுறையினையும் வலியுறுத்தி அபாக்கஸ்ஸில் கணக்கிடுதலை எளிமையாகப் புரியும்படி ரைம்ஸ் பாணியில் கற்பித்து தொடர் பயிற்சிகள் அளித்து 5 நிமிடங்களில் 80 கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் கணக்குகளைத் துல்லியமாகப் போடும் இண்டர்நேஷனல் ஸ்டாண்டட் அளவுக்கு குழந்தைகளைக் கொண்டு வரும் பயிற்சி மையம் என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கும் எங்க ஊரு சூப்பர் உமன் சத்யவதியை உங்களுக்கெல்லாம் அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

Gold member of SIP Academy, Trophies in Abacus Competitions

பிரச்னை, சிக்கல், இக்கட்டு எல்லாம் சந்திக்காமல் இந்த இடத்தை அடைந்துவிடவில்லை சத்யவதி. அனைத்தையும் நேர்மறையாகப் பார்த்து கையாளும் திறன் அவரிடம் ‌நிறைந்துகிடப்பதனால் சோதனைகளைச் சாதனைகளாக்கி வளர்ந்துவருகிறார். அவரது‌ எதிர்கால இலக்குகள் யாவற்றையும் அடைந்திட அவர் நம்பும் பிரபஞ்சம் அவருக்கு ஆற்றல் அளிக்கட்டுமாக.

Sathyavathi

சாதனைப் பெண்மணி - 5 : சத்யவதி

சுய அறிமுக உரை:

என்னைப் பற்றி...

என் பெயர் சத்யவதி. புதுச்சேரியில் வாழ்கிறேன். 18 ஆண்டுகளாக அபாக்கஸ் பயிற்சி மையம் நடத்தி வருகிறேன். கணவர் சதீஷ் குமார். இரு மகன்கள் உள்ளனர்.

இயற்பியலில் இளங்கலையும், கல்வியியலில் இளங்கலையும் முடித்திருக்கிறேன். தனியார் பள்ளிகளில் சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்தேன். தோழி ஒருவரிடமிருந்து ஸிப் அபாக்கஸ் பற்றித் தெரிந்துகொண்டு இதில் இறங்க முடிவெடுத்தேன். ஸிப் அபாக்கஸ் நிறுவனம் அளித்த பயிற்சிகளில் சேர்ந்து அபாக்கஸ் கற்றுக்கொண்டேன். அதே நிறுவனத்தில் ஃபிரான்சைஸ் எடுத்து 2006ல் புதுச்சேரியில் ஒரு அபாக்கஸ் பயிற்சி நிறுவனம் துவங்கினேன்.  18 ஆண்டுகளாக வெற்றிகரமாக இப்பயிற்சி நிறுவனத்தை நடத்திக்கொண்டு வருகிறேன். மாலை வேளைகளிலும் வார இறுதி நாட்களிலும் வகுப்புகள் நடைபெறுகின்றன.

Ms ragavi, world recorder for fastest 100 two digit multiplication

எங்களிடம் கற்கும் மாணவர்களிடம் கணக்கிடுதலில் வேகம்,  துல்லியம் இரண்டையும் கொண்டுவருவதற்காக ப்ரெயின் ஜிம் பயிற்சிகளோடு, தொடர் தீவிர பயிற்சிகள் அளித்து வருகிறோம். பயிற்சி பெற்ற திறமைமிக்க ஆசிரியர் குழு இருப்பதால் ஆர்வமுள்ள பெற்றோரும் பிள்ளைகளும் எங்கள் பயிற்சி மையத்தை நாடி வருகிறார்கள். ஓரளவு நல்ல வருமானமும் ஈட்டுகிறோம். அபாக்கஸ் பயிற்சியின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு தற்போதைய காலங்களில் வளர்ந்து வருகிறது. இன்று 425ஆக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை ஏறுமுகத்தில்தான் இருக்கிறது.

மகளிருக்காகவே பல்லாண்டுகளாய் இயங்கி வரும் மங்கையர் மலர் இதழ் மகளிர் தினத்துக்காக நடத்தும் ‘எங்க ஊர் சிறந்த பெண்மணி’ போட்டிக்காக என்னை அறிமுகப்படுத்திய எங்கள் அபாக்கஸ் பயிற்சி மையத்தின் மாணவனின் தாயார்  வித்யா குருராஜன் அவர்களுக்கும், என்னை அங்கீகரித்திருக்கும் நடுவர் குழுவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். என்னோடு தேர்வாகியிருக்கும் சக சிறந்த பெண்மணிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.

இந்த சாதனைப் பெண்மணிகளின் அணிவகுப்பில் 'SUPER WOMAN' யார் என்பது இறுதிப் பதிவாக ஏப்ரல் 8 அன்று வெளியிடப்படும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT