Mother & child  
மங்கையர் மலர்

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

ராதா ரமேஷ்

சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு, பிரபலமான பத்திரிகை ஒன்றில் ஒரு பெண்மணி எழுதிய கட்டுரை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில், தன்னுடைய குழந்தை எந்த ஒரு கேள்வியை கேட்டாலும் ஒற்றை வரியிலேயே பதில் சொல்வதாகவும், பெரும்பாலும் உரையாடுவதில் ஈடுபாடு காட்டுவதில்லை என்பதும்  உட்பட பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட அந்த கட்டுரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டு காட்டியுள்ளது போலவே, இன்றைய காலகட்டங்களில் பெரும்பாலும் குழந்தைகளுடன் உரையாடுவது என்பது பெரும் சவாலாகவே இருக்கிறது.

நாம், நம்முடைய பள்ளி காலங்களில் பரிமாறிக் கொள்வதற்கும், பேசுவதற்கும் இருந்ததைப் போல பல்வேறு சுவையான கதைகள் இன்றைய காலகட்டங்களில் அவர்களிடம் இல்லை என்றே சொல்லலாம். பெருகி வரும் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்கள் காரணமாக, அவர்களின் கற்பனை திறனானது பல்வேறு விதமாக குறைந்து வருகிறது.

இன்று பெற்றோராக இருக்கும் நாம், குழந்தைகளாக வாழ்ந்த காலகட்டங்களில், அறிவியலின் பயன்பாடு அதிகமாக வளர்ச்சி அடையாத காரணத்தால், நாம் பல்வேறு விஷயங்களுக்காக பெரியோர்களையே சார்ந்து இருந்தோம். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. குழந்தைகளின் முன் தகவல்களை கொட்டித் தீர்ப்பதற்காக பல்வேறு சாதனங்கள் காத்துக் கிடக்கின்றன. அதனால், அவர்களுக்கு சுற்றி இருப்பவர்களின் தேவை என்பது, மிகவும் குறைவாகவே உள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள்.

பெற்றோராக இருக்கும் நம்மில் பலரும் குழந்தைகளுக்கு மற்ற விஷயங்களை கற்றுத் தருவதைப் போல, வாழ்வியல் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் செயல்களைப் பற்றியும் பெரும்பாலும் கற்றுத்தர முனைவதில்லை.

குழந்தைகளிடம் நம்முடைய ஒவ்வொரு உரையாடலும் அன்றாட வகுப்பறை நிகழ்வுகளைப் பற்றி அலசி ஆராய்வதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மற்ற குழந்தைகளிடமும் ஆசிரியர்களிடமும் எவ்விதம் பழகுகிறார்கள், பள்ளிகளில் அவர்களுடைய உறவுமுறை பற்றியும், நண்பர்கள் பற்றியும் அவர்களை ஈர்த்த விஷயங்கள், அவர்களை மிகவும் சோகத்திற்குரியதாக மாற்றிய விஷயங்கள் போன் பல்வேறு நிகழ்வுகளைக் குறித்து, நாம் அவர்களிடம் உரையாட கற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும், குழந்தைகளிடம் உரையாடும்போது, அவர்களிடம் கேட்பதற்கு இரண்டு விதமான கேள்வி முறைகள் உள்ளன. அவை Closed question, Open question. குழந்தைகளிடம் கேள்விகள் கேட்கும் போது, ஒரு வரியில் பதில் வரவழைக்கக் கூடிய வகையில் கேள்விகளைக் கேட்கக் கூடாது.

உதாரணமாக, "நீ என்ன சாப்பிட்டாய்?" என்று கேட்டால் குழந்தை "இட்லி, தோசை" என்று ஏதாவது ஒரு வார்த்தையில்தான் பதிலைச் சொல்லும். இது முதல் வகைக் கேள்வி (Closed question).

அதையே, "உனக்கு உணவில் என்னென்ன வகைகள் பிடிக்கும்?" என்று கேட்டால், அக்குழந்தையிடம் சொல்வதற்கு நிறையப் பதில்கள் இருக்கும். அவ்வாறு, பதில் சொல்லும் போதும், அந்த உணவுகளையும் நம்மால் வகைப்படுத்திக் கேட்க முடியும். காலை உணவு, இரவு உணவு, மதிய உணவு, பழ வகைகள், ஸ்னாக்ஸ் வகைகள்  இப்படி பலவாறாக நம்மால் அதனை வகைப்படுத்திக் கொண்டே செல்ல முடியும். மேலும், இத்தகைய உணவுப் பொருள்களிலும் உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவுகள் என்ன? தீமையை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் என்ன? எந்த உணவுகளை எப்பொழுது உட்கொள்ளலாம்? எதனை எந்த நேரத்தில் உட்கொள்ளக் கூடாது? எனக் குழந்தைகளிடம் பல்வேறு விஷயங்களை நம்மால் பரிமாறிக் கொள்ள முடியும். இதுதான் இரண்டாம் வகைக் கேள்வி (Open question ).

எனவே, குழந்தைகளிடம் எப்பொழுதும் உரையாடும் போது, அவர்களிடம் தொடர்ந்து உரையாடலை மேம்படுத்தும் விதமாக, நாம் கேள்விகளைக் கேட்க வேண்டும். இவ்வாறு, நாம் அவர்களிடம் பேசும்போது, அவர்களிடம் மொழித்திறனை மேம்படுத்துவதோடு, அவர்களை பேசுவதிலும் ஆர்வம் உள்ளவர்களாக மாற்ற முடியும்.

முடிந்தவரை குழந்தைகள் முன்பு அதிகமாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. குழந்தைகளிடம் அதிகப்படியான நேரத்தை செலவிட்டால் மட்டுமே நாம் வாழும் இந்த வாழ்க்கையின் மீதும், நாம் சந்திக்கும் மனிதர்களின் மீதும் ஒரு நல்ல மதிப்பையும் மரியாதையையும் நம்மால் ஏற்படுத்த முடியும். எனவே, முடிந்தவரை குழந்தைகளுடன் அதிகமாக உரையாடுங்கள்! அது அவர்களை நம்பிக்கை நிறைந்த மனிதர்களாக மாற்ற உதவும்!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT