சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம் மண்ணில் மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டிய பல்வேறு புலவர்களில் அவ்வையாரும் ஒருவர். வாழ்க்கைக்கு தேவையான அறநெறி கருத்துக்களை மிகச் சுருக்கமாக பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் அவர் இயற்றிய பாடல்கள் எல்லாம் மாபெரும் பொக்கிஷம் என்றே சொல்லலாம். இத்தகைய பெருமை வாய்ந்த புலவர் ஔவையார் எவருக்கும் பரிசளிக்காத செல்வந்தரான கருமி ஒருவரிடம் பாடி பரிசு பெற்ற கதையைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தன. ஆனால் அவரோ இயல்பிலேயே மிகவும் கஞ்சத்தனம் உடையவர். யாருக்கும் எந்த ஒரு பொருளையும் கடுகளவும் கொடுத்து உதவ மனதில்லாத இயல்புடையவர். ஆனால் அவருக்கு புலவர்களை வரவழைத்து அவர்கள் வாயால் பாடி புகழ் பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. எனவே அவரை நோக்கி வரும் புலவர்கள் எல்லாரையும் அவர் பாட வைத்து, நிறைய பரிசுகள் தருவதாக அறிவிப்பார்.
செல்வந்தரை பாடி அவரிடமிருந்து பல்வேறு பொருட்களை பரிசாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு புலவர்கள் செல்வந்தரை நோக்கி படையெடுக்க தொடங்கினர். அவரைப் பற்றியும் அவரிடம் உள்ள செல்வத்தைப் பற்றியும் பல்வேறு பாடல்கள் பாடிய பின் அந்த செல்வந்தர் பாடிய புலவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை கொடுப்பதாக அறிவிப்பார். ஆனால் அவ்வாறு அறிவித்த பரிசுகளை உடனடியாக கொடுக்கும் பழக்கம் செல்வந்தருக்கு இல்லை. நாளை வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிடுவார். அவ்வாறு மறுநாள் வரும்பொழுது அப்பொழுதும் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி அவர்களை மீண்டும் மீண்டும் அலைக்கழித்து ஒரு காலகட்டத்தில் பரிசே வேண்டாம் என்ற மனநிலைக்கு புலவர்களை தள்ளிவிடுவார்!
அந்த செல்வந்தரின் இயல்பை அறிந்து கொண்ட புலவர்கள் அனைவரும் அவரை பாடுவதையோ அல்லது அவரிடம் பரிசு பெற விரும்புவதையோ கைவிட்டு விட்டனர். இத்தகைய காலகட்டத்தில் ஒரு நாள் அந்த ஊருக்கு அவ்வையார் வந்திருந்தார். அவ்வையார் வந்திருப்பதை அறிந்த அந்த செல்வந்தர் அவ்வையார் ஒரு மாபெரும் புலவர் அவரது வாயால் பாடி புகழ் பெற வேண்டும் என நினைத்து அவ்வையாரை அழைத்து வருமாறு கூறினார். உடனே மற்ற புலவர்கள் அனைவரும் நம்மை ஏமாற்றியது போல் அவ்வையாரை அவ்வளவு எளிதில் அந்த செல்வந்தரால் ஏமாற்ற முடியாது என எண்ணி அங்கு நடப்பதை மிகவும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கினர்.
அவ்வையார் அந்த செல்வந்தரை போற்றி பாடல் ஒன்றை பாடினார். அதனால் அகம் மகிழ்ந்த செல்வந்தர், 'அவ்வையே நீ பாடிய அளவுக்கு வேறு யாரும் பாடவில்லை. எனவே நான் அகம் மகிழ்ந்து உனக்கு ஒரு யானையை பரிசாக கொடுக்க நினைக்கிறேன்! நாளை வந்து யானையைப் பெற்றுக் கொள்ளுங்கள்!' என்று கூறினார். அவ்வையார் மறுநாள் வரவே, 'அவ்வையே நான் கொடுக்கும் யானையை தங்களால் பராமரிக்க முடியாது. எனவே உங்களுக்கு குதிரை தரலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன். நாளை வந்து குதிரையை வாங்கிக் கொள்ளுங்கள்!' என்று கூறினார். மறுநாளும் அவ்வையார் வரவே, 'குதிரையால் உங்களுக்கு எந்த பலனும் இல்லை! எனவே உங்களுக்கு ஒரு எருமையை பரிசளிக்க விரும்புகிறேன்! நாளை வந்து எருமையை வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்.
திரும்பி சென்ற ஔவையார், மறுநாளும் வரவே அந்த செல்வந்தர் ஔவையாரிடம் 'எருமையை நீங்கள் பராமரிப்பது மிகவும் கடினம். எனவே நான் உங்களுக்கு ஒரு எருதை பரிசாக அளிக்கிறேன். அதை விற்று நீங்கள் பணமாக்கிக் கொள்ளுங்கள்!' என்று கூறி மறுநாள் வருமாறு வேண்டிக் கொண்டார். மறுநாள் ஔவையார் செல்லும் போது அவரிடம் அந்த செல்வந்தர் 'அவ்வையே உங்களுக்கு எருதை பரிசளிப்பதை விட, உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கக்கூடிய ஒரு புடவையை பரிசளிக்கலாம் என்று நினைக்கிறேன்' என்று கூறினார்.
அதுவரை பொறுமை காத்த அவ்வையார், 'நான் மீண்டும் போய் நாளை வருகிறேன். அதற்குள் அந்த புடவை திரி திரியாக கிழிந்து கந்தலாகிவிடும். அதற்குப் பிறகு நீ எனக்கு கொடுப்பதற்கு உன்னிடம் என்னதான் இருக்கப் போகிறது? உன்னிடம் பரிசு பெறுவதற்காக நடந்து நடந்து என்னுடைய கால்கள் தேய்ந்து போய் விட்டன. இத்தனை நாட்களாக நான் பரிசு பெறுவதற்காக அலைந்து திரிந்ததால் தேய்ந்துபோன கால்கள் தான் நீ எனக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு. எனவே இதுவரை யாருக்கும் பரிசளிக்காத நீ இன்று எனக்கு தேய்ந்த கால்களை பரிசளித்து விட்டாய்! இதுவே போதும்' என்று கூறி அந்நிகழ்வை ஒரு பாடலாக மாற்றி அந்த செல்வந்தரின் மதில் சுவரில் எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
அதன் பின் அந்த செல்வந்தரிடம் இருந்த கஞ்சத்தனம் அவரை விட்டு சென்று விட்டது. அவ்வையாரின் அறிவுக்கூர்மையை உணர்ந்த மற்ற புலவர்களும் அவரை மனதார பாராட்டி மகிழ்ந்தனர்!
எனவே ஒருவரை நல்வழிப்படுத்துவதற்கு வெறும் அறிவுரைகள் மட்டும் போதாது! அந்த அறிவுரைகள் அவர்கள் வாழ்வியலோடு கலந்ததாகவும், பொட்டில் அடித்தால் போல் சட்டென அவர்களுக்கு புரிய வைப்பதாகவும் இருக்க வேண்டும்!