Pink October - Breast Cancer Awareness 
மங்கையர் மலர்

Pink October - மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் - மார்பக புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால்...!

சுசீலா மாணிக்கம்

புற்றுநோய் அதிகமாக தாக்கும் இக்காலகட்ட வாழ்க்கை முறையில் அதற்கான விழிப்புணர்வு இருக்கிறதா என்றால், போதிய அளவு இல்லை என்றுதான் கூற வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் அதை முற்றிலும் குணமாக்கி விட முடியும் என்பதேயே நாம் இன்னும் முழுதாய் உணரவில்லை. 

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் உயிர் காக்கும் உயர்நோக்கோடு ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் அக்டோபர் மாதம் 'பிங்க் அக்டோபர்' என அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள Harshamitra Superspeciality Cancer Hospital ஏற்பாடு செய்திருந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு அமர்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பை பெற்றோம்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் ‘பிங்க் அக்டோபர்’ நம்மில் எத்தனை பேருக்கு பரிச்சயம்? சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அத்தனை மருத்துவர்களும் வெளிப்படுத்திய ஒரே ஆதங்கம் பெண்கள் இன்னும்  முழுதாய் விழிப்புணர்வு பெறவில்லை என்பதே. 'மார்பகமும் நமது கை, கால்களை போன்ற ஒரு உறுப்புதானே. அதில் ஏதாவது மாற்றம் ஏற்படும்போது அதை வெளியே சொல்ல எதற்காக வெட்கப்பட வேண்டும். ஆரம்ப நிலையிலேயே எங்களிடம் வந்துவிட்டால் முற்றிலும் குணமாக்கி விடலாம். பல பெண்கள் ஸ்டேஜ் 3 அல்லது ஸ்டேஜ் 4 -ல் வரும் பொழுது மனம் மிகவும் வருத்தமடைகிறது' என்று ஒரே மாதிரியாக அவர்கள் பதிவு செய்ததைக் காண முடிந்தது.

Breast Cancer Awareness Session

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு அமர்வு கூட்டத்தில் Dr.P.Sasipriya MBBS.,DMRT.,MD.,RT , RADIATION ONCOLOGIST, EXECUTIVE DIRECTOR, HARSHAMITRA HOSPITAL அளித்த தெள்ளத் தெளிவான விளக்கம் நம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று:

"பெண்களை அதிகம் பாதிக்கக்கூடிய அதிலும் முதலிடம் வகிக்கும் மார்பக புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் கண்டிப்பாக நாம் தடுத்து விட முடியும்.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் எனும் ஒரு எக்ஸ்ரே செய்து கொள்ள வேண்டும்.

20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு முடிந்த ஐந்தாவது நாள் செய்ய வேண்டும். நமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது நமது தலையாய கடமை. பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் உயரத் தூக்கிக் கொண்டு இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் இருக்கிறதா - முலைக்காம்புகள் நேர்கோட்டில் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அக்குள் பகுதியில் ஏதாவது மாற்றங்கள், மார்பகத்தில் வலியில்லாத சிறு கட்டிகள், முலைக்காம்பிலிருந்து நிறமற்ற அல்லது ஏதாவது ஒரு நிறத்தில் திரவம் வெளிப்படுதல், மார்பகங்கங்களில் சிறு சிறு கொப்பளங்கள், தோலில் மாற்றங்கள் போன்றவை எளிதாக அறிந்து கொள்ள முடியும். உடனே மருத்துவர் அணுகுவது மிகவும் நல்லது.

இன்றைய அறிவியல் உலகத்திலும் கூட சமூகத்தில் பல இழுக்கான நம்பிக்கைகள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. 'பாவம் செய்ததால்தான் புற்றுநோய் வருகிறது' - 'இந்த புற்றுநோயை வெளியில் சொன்னால் குடும்பத்துக்கு வெட்கம்' - 'பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற வேண்டும்' - 'சிகிச்சைக்கு சென்றால் அங்கு கரண்ட் வைப்பார்கள்' - 'இறந்து விடுவோம்' … இப்படி பலபல தேவையற்ற எண்ணங்கள் சமுதாயத்தில் இறைந்து கிடக்கின்றன.

புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது ஓர் பரம்பரை நோய் அல்ல. ஹார்மோன் மாற்றங்களால் செல்களில் ஏற்படும் அதீத வளர்ச்சியே இது. மற்ற நோய்களைப் போல இதுவும் ஒரு நோய். அதிக செல் வளர்ச்சியை தடுப்பதற்காக வைக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சைதான் கரண்ட் என தவறாக புரிந்து கொள்ளுதலாய் இருக்கிறது. முன்பெல்லாம் இந்த கதிர்வீச்சு சிகிச்சை சில அசௌரியங்களை ஏற்படுத்தியது. இப்பொழுது அறிவியலின் பல கண்டுபிடிப்புகள் மனித குலத்துக்கு பயன் தருகின்றன. அதன் பலனாய் முன்னேற்றப்பட்ட  எத்தனையோ புதிய கருவிகள் உள்ளன. முடிந்தவரை நோயாளிகளுக்கு அதிகம் பாதிப்பு தராத வசதியான சிகிச்சை முறைகளே இன்று நடைமுறையில் உள்ளன.

கேன்சர் பாதித்தவர்களுக்கு முதலில் வருவது பயம். எனவே அவர்களிடம் பேசி முதலில் அவர்களின் பயத்தை போக்குவது எங்களது தலையாய கடமையாய் வைத்துள்ளோம். அவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் உணர்வுபூர்வமாக அணுகி பல்வேறு தளங்களில் மன தைரியம் வழங்கி அவர்களின் முழு ஒத்துழைப்புடனேயே எங்களது சிகிச்சை ஆரம்பமாகிறது.

உலக சுகாதார மையத்தின் (WHO) 2024 theme ஆன  'no - one should face breast cancer alone.'

பல்வேறு இலக்குகளான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தகவல்களை அறிந்து கொள்வதற்கான தளத்தை வழங்குதல், மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான கூட்டமைப்பை வலுப்படுத்துதல், மருத்துவ உளவியல் உணர்வியல் மற்றும் சமூக ஆதரவு உட்பட நோயாளியை மையமாக வைத்து விழிப்புணர்வு மற்றும் கவனிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் - இந்த நோக்கங்களைத்தான் உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு பரிமாணங்களில்  விழிப்புணர்வு மாதமாக இந்த பிங்க் அக்டோபர் அனுசரிக்கப்படுகிறது."

அன்றைய அமர்வில் அங்கு மார்பக புற்று நோயை வெற்றி கொண்ட பெண்களும் இப்பொழுது சிகிச்சையில் இருக்கும் பெண்களும் சிறப்பு அழைப்பார்களாக அழைக்கப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது.  

அதில் ஒருவர் மார்பக புற்றுநோய் வந்ததும் அதன் பின்பு தனது குடும்பத்தாரின் அணுகுமுறைகளையும் பகிர்ந்தார். தனது மகள் தனக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாகவும் அவருக்கு திருமணம் முடிந்தவுடன் கணவன் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு அந்தப் பெண் தனது தாயிடம் “அம்மா. நான் புக்ககம் சென்ற பிறகு உன்னை கவனிக்க ஆள் இல்லை என மனம் தளர்ந்து விடாதே. உனக்கு ஒரு ஆளை ஏற்பாடு செய்திருக்கிறேன் எனக் கூறி தனது தாயின் கண்களை மூடி கூட்டிச் சென்று ஆளுயர கண்ணாடி முன் நிறுத்தினார்களாம். அந்தத் தாயின் வலிமை மிகுந்த வார்த்தைகள் இப்படியாய் இருந்தது “எனது மகளுக்காய் நான் வாழ வேண்டும். என்னை நானே இனி கவனித்துக் கொண்டு வலிமையுடனும் வளமுடனும் வாழ்வேன்” பொதுவாய் பெண்கள் மிகுந்த பலவீனமானவர்கள் என்று யார் சொன்னது? அவர்கள் சக்தியின் வடிவம்!

ஹர்ஷமித்ரா  சார்பில் பல்வேறு முன் முயற்சிகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. சென்ற சில வருடங்களாக திருச்சி மலைக்கோட்டை அக்டோபர் மாதம் முழுவதும் பிங்க் நிறத்தில் காட்சியளிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். பல விழிப்புணர்வு பேரணிகள், பல போட்டிகள் அதன் மூலம் பொது மக்களைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு விழிப்புணர்வு தருதல், எளிய மக்களுக்கான மருத்துவமனையாக திகழ்தல்… அதிலும் சிறப்பாய் இந்த வருடம் மேமோகிராம், தெர்மோகிராம், அல்ட்ராசோனாகிராம் என ரூபாய் 6500 மதிப்புள்ள பரிசோதனைகள் ரூபாய் 999 மட்டுமே என அறிவித்து அதையும் 'மூன்று கிராம் தங்கம் 999 ரூபாய்' என அனைத்து வகை இணையவழிகளிலும் பதிவு செய்திருந்தார்கள். இதனால் பயன் பெற்றோர் ஏராளம். இப்படி பற்பல சேவைகளை மருத்துவத்துடன் இணைந்து செய்து கொண்டிருக்கும் மருத்துவ இணையர்களை மனதார வாழ்த்தி விடை பெற்றோம்.

“சுய பரிசோதனை மனதுக்கு மட்டுமல்ல - நம் மார்பகத்திற்கும்தான்”

Pink once - Think twice - Spread hope - Raise life…

உயிர் அமுதம் சுரந்து மனுகுலம் காக்கும் நம் மார்பகத்தைக் காப்பது நமது கடமையல்லவா?

குளிர்காலத்தில் நிமோனியா வரலாம்... ஜாக்கிரதை! 

என்னது? செல்லப் பிராணிகளுக்கும் நீரிழிவு நோய் வருமா?

நிபந்தனை இன்றி நேசிப்போமா!

யூரிக் அமிலத்தை குறைக்கும் 5 வகையான உணவுகள்!

எது போதனை?

SCROLL FOR NEXT