short story 
மங்கையர் மலர்

சிறுகதை: என்னவள்... terms and conditions!

கல்கி டெஸ்க்

-ஜெ. வினு

காலதேவன் சொல்லும் பூர்வஜென்ம‌ பந்தம். ‌நீ யாரோ, நான் யாரோ, யார் சேர்த்ததோ... அவனுக்கும் திருமணம் முடிந்த கையோடு அவளைப் பார்த்து இப்படிப் பாட வேண்டும்போல் இருந்தது.

கனவுகள் சில சமயங்களில் நிஜம் ஆகிவிடுகின்றன. அப்படி ஒரு‌ தருணம்தான்‌ அவன், அவள்‌ கழுத்தில் மூன்று‌முடிச்சு போட்டது. இது நடந்தேறுமா என்ற ஐயம் திருமணம் நடக்கும் முந்தின நாள் வரை அவனை‌த் தொடர்ந்துகொண்டே  இருந்தது. 

நான்கு வருடம் முன்பு வரை, ஒரு‌ பெண்ணைச் சந்திப்பான். ‌நட்புடன் இருப்பான். நட்பு காதலாக மாறும் என்றெல்லாம் யோசித்ததே இல்லை.    

எத்தனையோ பெண்களை அதற்கு முன் கடந்து சென்றிருக்கிறான். ஆனால், இவளிடம் தோன்றிய உணர்வு வேறு எந்தப் பெண்ணிடமும் தோன்றவில்லை. பழகிய சிறிது காலங்களிலேயே, மனம்‌ அவளை விரும்ப ஆரம்பித்தது. இருவரின் மனமும் ஒரே அலைவரிசையில் இயங்க, அவள் வெளிநாடு செல்லும்முன், தன் மனதில் இருப்பதை அவளிடம் கூறிவிட, அவளும் சம்மதிக்க, பிறகென்ன? ஆனந்தத்தின் எல்லை என்பது எது எனத் தெரிந்துகொண்டான். அவளுக்காகவே, இவனும் வெளிநாடு சென்று‌ படித்து வேலையும் கிடைக்கவே, அடுத்தக்கட்ட வாழ்க்கையின் முக்கிய அம்சமான திருமணம் என்ற‌ பேச்சு எழுந்தது. பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்தவனுக்கு, எதிர்ப்பு இருக்கவே செய்தது.

எதிர்ப்புகளை எப்படி சரி செய்வது எனத் தெரியவில்லை அவனுக்கு. வெளிநாட்டில் இருந்துகொண்டு, உள்ளூரில் இருக்கும் இரு குடும்பங்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது என்பது கடினமாக இருந்தது. வெளிநாட்டு வாழ்க்கைத் தரும் நெருக்கடிகள் ஒரு‌புறம்… இரு‌ குடும்பங்கள் தரும் நெருக்கடிகள் மறுபுறம்... எனச் சந்தேகங்கள் ஆயிரக்கணக்கில் எழுந்து மனதை வாட்டிய காலங்கள், எப்படியாவது இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தேறினால் போதும் என்ற பயம் நிலைகொள்ள ஆரம்பித்தது அவனுக்கு.

எந்த இக்கட்டான சூழ்நிலையிலும், அவளின் அருகாமையும், அவளுக்கு அவன்‌ தந்த தைரியமும், அவனுக்கு அவள் தந்த தைரியமும் மனம் சோர்ந்து போகாமல் இருக்கச் செய்தன.

பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடியவே, அவளை இந்த ஜென்மத்தில் மறக்க வேண்டிய நிலை வந்துவிடுமோ என்ற‌ எண்ணம் எழும்போதெல்லாம், இறை நம்பிக்கையை மட்டும் அவன்‌ கைவிடவில்லை. வருடங்கள் ஓடியதே தவிர, முடிவுகள் அவனுக்குச் சாதகமானதாக இருக்கவில்லை. கடைசியில் ஒரு‌ வழியாக அரைமனதுடன் பெரியவர்கள் சம்மதம் கிடைக்கவே, திருமண பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. ஒரு சில நேரங்களில் சுமூகமாகவும், சில நேரங்களில் சற்றுத் தொய்வாகவும் இரு‌வீட்டாரும் களத்தில் இறங்கவே, நிச்சயமாக இந்தத் திருமணம் நடந்தேறும் என்ற‌ நம்பிக்கை வந்தது அவனுக்கு. ஒரு வழியாக அனைத்தும் முடிவாகி நாளும் முடிவு செய்து தாய்நாட்டிற்கு வந்து, திருமண வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு இடிபோல் ஒரு‌ செய்தி… ‌அவளின்‌ வீட்டில் ஒரு பெரியவரின் மரணம். திருமணத்தைக் குறித்த நாளிலேயே செய்வதா? இல்லை வேறு முகூர்த்தம் பார்ப்பதா? என மீண்டும் ஒரு தடங்கல். சில பரிகாரங்கள் செய்து,  முன் குறித்த நாளிலேயே திருமணம் நடத்தி விடலாம் என்ற நற்செய்தி காதில் விழவே, தொலைந்துபோன குழந்தை மீண்டும் கையில் கிடைத்த உணர்வு அவனுக்கு.

கடந்த காலங்களில் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் மறக்கடித்தது, அவனின் திருமண வைபவம். இரு வீட்டாரின் அசாத்திய உழைப்பு, திருமணத்தில் தெரிந்தன. ஊரறிய, உலகறிய அவளை கைப்பற்றிய தருணம்  அலாதியானது அவனுக்கு. திருமண‌ வைபவங்கள் அனைத்தும் ஆனந்தத்தை அள்ளித் தந்தன. அவள் அருகில் இருக்கும்போது,  எதுவும் ஆனந்தம்தானே...

இதோ அவளோடுதான் இனிவரும் காலங்கள் நகரப் போகின்றன. அம்மியும் மிதித்து அருந்ததியும் பார்த்தாயிற்று..

இந்தத் திருமணம் நடைபெற்றதற்கு அவளின் பங்களிப்புதான் ஏராளம். திருமணத்தில் அவளின் தந்தை அவளை நடத்திய விதம் அவனுக்குப் பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியங்களை அள்ளித் தந்திருந்தார் அவளின் தந்தை. அவர் அளவிற்கு அவளை தானும் எதிர்காலத்தில் கவனித்துக்கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டான். அன்றும், இன்றும், என்றும் அவன் அம்மா செல்லம்தான். அம்மாவிடம் காட்டும் பாசம் கண்டிப்பாக தன் துணையிடமும் காண்பிக்க முடியாதா என்ன அவனுக்கு!

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணத்தின் மூலம், தன் வாழ்க்கை இனி சொர்க்கமாக மாறும் என்ற‌ நம்பிக்கையுடன், புது வாழ்க்கையை அவன் தொடங்கிவிட்டான்.

திருமண‌ வைபவங்களில் ஒன்றான‌ நலங்கு வைபவத்தில், சொந்தபந்தங்கள் முன், விளையாட்டாக, வாரத்தில் நான்கு நாட்களுக்கு நான் சமையல் செய்கிறேன்‌ இனிமேல் எனக் கூறிவிட்டான். அவனின் அந்த உத்திரவாதம், வீடியோவிலும் பதிந்துவிட்டது. Terms and conditions எதுவும் அவன் அப்போது கூறவில்லை. The real game starts now...

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT