ஓவியம்: தமிழ் 
மங்கையர் மலர்

சிறுகதை - தாய் மனம்!

கல்கி டெஸ்க்

-மனோந்திரா

செத்துவிட வேண்டுமென்ற முடிவோடுதான் பேச்சியம்மாள் கிணற்று மேட்டில் நின்று கொண்டிருக்கிறாள். இரவு ஒன்பது மணி இருக்கும். அன்று மார்கழி மாதம் இருபதாம் தேதி. பௌர்ணமி முடிந்து பத்துநாட்கள் ஆகியிருந்தபடியால் வானில் நிலவு தோன்றியிருக்கவில்லை. இருள் குறித்த எந்தப் பயமும் இல்லை பேச்சியம்மாளுக்கு. கிணறு தோண்டியபோது அதிலிருந்து அள்ளப்பட்ட, உடைந்து நொறுங்கிய பாறைகள் கிணற்றின் அருகில் ஒரு குன்றுபோல் குவிக்கப்பட்டிருந்தன.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு பெரியவனுக்கு நான்கு வயது; சின்னவனுக்கு இரண்டு வயது. அப்போது தோண்டப்பட்டது இந்தக் கிணறு. அப்போது மகள் பிறந்திருக்கவே இல்லை. அந்தப் பாறைக் குவியலைத்தான் கிணற்று மேடு என்று சொல்லிக்கொள்வார்கள். மூன்று வேப்பமரங்களும் ஒரு மஞ்சனத்தி மரமும் சுயம்புவாக முளைத்து இன்று பெரியமரங்களாக நிற்கின்றன.

அந்தக் கிணறு வட்ட வடிவில் அமைந்திருந்தது. அதன் விட்டத்தின் அளவு முப்பத்தைந்து அடி. ஆழமோ எழுபத்தைந்து அடி. கிணற்றின் சுற்றுவட்டம்  மேலிருந்து கீழாக இருபது அடி அளவிற்கு கற்களாலான சுவரைக்கொண்டிருந்தது. அதுவரை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அதற்குக் கீழ் அடிவரை இயற்கைப் பாறைகள்தான். படிக்கட்டுகளுக்குக் கீழ் இறங்க வேண்டுமென்றால் கயிறுகட்டித்தான் இறங்க வேண்டும். தற்போது தண்ணீரின் மட்டம் ஒரு இருபத்தைந்து அடி இருக்கும். நீச்சல் தெரியாதவர்கள் உள்ளே விழுந்தால் மரணம் நிச்சயம். பேச்சியம்மாளுக்கு நீச்சல் தெரியும். அவள் கிணற்றில் விழுந்து சாக விரும்பினால் வயிற்றில் கல்லைக் கட்டிக்கொண்டுதான் உள்ளே விழ வேண்டும். அப்படி இல்லையென்றால் கிணற்று மேட்டில் இருக்கும் மரங்களில் ஏதாவது ஒரு மரத்தின் கிளையில் தூக்குப் போட்டுக்கொள்ளலாம். இரண்டு வழிக்கும் தேவையான கயிறு அவள் கையில் இருந்தது. 

அந்தக் கிணற்றைச் சுற்றி ஏழு ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கிறது. அந்நிலத்திற்குக் கண்மாய்ப் பாசன வசதி இருந்தபோதிலும் முழுமையாகக் கண்மாயை நம்பி விவசாயம் செய்யமுடியாது. எனவேதான் இந்தக் கிணறு வெட்டப்பட்டு ஏழரைக் குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார் பொறுத்தப்பட்டிருக்கிறது. அந்த நிலத்தில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்குக் காத்துக் கிடந்தன.

பேச்சியம்மாள் திருமணமாகி வந்தபோது இந்த இடத்தில் அவளது கணவனுக்குப் பங்காக இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே கிடைத்திருந்தது. அதில் அவள் போட்டுக் கொண்ட வந்த நகைகளை விற்று அக்காலத்தில் அவளும் அவளது கணவனும் சேர்ந்து இந்தக் கிணற்றை வெட்டினர். அதன்பின்பு கணவனும் மனைவியும் வம்பாடு பட்டு உழைத்து மேலும் ஐந்து ஏக்கர் நிலத்தை பேச்சியம்மாள் பெயரில் வாங்கினர். கிணற்றுடன் சேர்ந்த பழைய இரண்டு ஏக்கர் நிலம் பேச்சியம்மாளது கணவர் பேயத்தேவர் பெயரில் இருந்தது. அவர்கள் மேலும் கடின உழைப்பை நல்கி ஊருக்குள் இரண்டுமாடி வீடு ஒன்றும் கட்டிக்கொண்டார்கள். அதற்குள் பிள்ளைகள் மூவரும் தலைக்குமேல் வளர்ந்துவிட்டார்கள்.

மூன்று பிள்ளைகளுக்கும் படிப்பு ஏறவில்லை. ஒருவர்கூட பத்தாம் வகுப்பைத் தொடவில்லை. மூத்தவன் பெயர் பாண்டி. அவனுக்கு பேச்சியம்மாள் தன் அண்ணன் மகளைத் திருமணம் செய்துவைத்தாள். அண்ணன் மகள் என்பதால் தன்னை அன்பாகக் கவனித்துக்கொள்வாள் என்று நம்பினாள். அவளது நம்பிக்கை வீண்போகவில்லை. வீட்டுக்கு வந்த முதல் மருமகள் பேச்சியம்மாளை மிக நன்றாகக் கவனித்துக்கொண்டாள். இளையவன் பெயர் செல்வராஜ். அவனுக்கு பேயத்தேவர் தனது தங்கை மகளைத் திருமணம் செய்துவைத்தார். அவருக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு. சொந்தத் தங்கை மகள் என்றால் கடைசிக் காலத்தில் மருமகள் தனக்குப் பேருதவியாக இருப்பாள் என்று. இளைய மருமகள் மாமனார் மாமியார் இருவரையுமே வெகு சிறப்பாகக் கவனித்து வந்தாள். மகளின் பெயர் பவுனம்மாள். அவளை உசிலம்பட்டியில் கட்டிக்கொடுத்திருந்தனர். மருமகனுக்கு ரேஷன் கடையில் விற்பனையாளர் உத்தியோகம். கைக்குப் பற்றாத சம்பளம். கொஞ்சம் கஷ்ட ஜீவனம்தான். மகளது வாழ்க்கையைப் பற்றிய மனக்கவலை எப்போதும் இருந்துகொண்டிருந்தது பேச்சியம்மாளுக்கும் பேயத்தேவருக்கும்.

பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும் மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது பேச்சியம்மாள் தம்பதியருக்கு அந்த கொரோனா என்ற கொடிய நோய் வரும்வரை. பேயத்தேவர்  கொரோனாவிற்கு பலியானார். அவரது மரணம் அந்தக் குடும்பத்தை நிலைகுலையச் செய்தது.

பேச்சியம்மாள் தன் சரீரரத்தில் பாதியை இழந்து விட்டதைப்போல் உணர்ந்தாள். எல்லாம் கொஞ்ச நாள்தான். அவள் விரைவிலேயே சமநிலைக்குத் திரும்பிவிட்டாள். இரண்டு மருமகள்களும் மாமியாரை விழுந்து விழுந்து கவனித்தார்கள். மிகவும் அன்புக்குரிய கணவன்தான் என்றபோதும் அவரது இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றுதான் என்றபோதும் அவர் இல்லாதது இந்த வயோதிக காலத்தில் பேச்சியம்மாளுக்கு ஒருவகை விடுதலையைக் கொடுத்தது என்றே சொல்லலாம். அவர் இறந்த ஆறு மாதத்தில் ஒருசுற்று பெருத்துவிட்டாள். முகத்தில் ஒருவகைப் பொலிவும் அமைதியும் இழையோடியது.

தந்தை இறந்து வருடம் திரும்பிய நாளில் பாண்டி ஒரு விஷயத்தைச் சொன்னான்.

“அம்மா! சொத்தப் பிரிக்கிற நேரம் வந்திருச்சும்மா. என் குடும்பமும் தம்பி குடும்பமும் பெருசாயிறிச்சு. ஒரே குடும்பமா எத்தன நாளைக்கு இருக்க முடியும்?”

செல்வராஜும் அதை ஆமோதித்தான்.

“எங்களுக்கும் தனித்தனியா சொத்துச் சொம்புன்னு இருக்கணுமில்ல. அப்பத்தான எங்க பிள்ளைகளுக்கும் கலியாணம் காச்சின்னு பண்ணமுடியும்” என்றான்.

“அப்பா பேர்ல ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல அரை ஏக்கர் கிணறு பம்ப்செட்டுக்குப் போயிரும். அம்மா உங்க பேர்ல அஞ்சு ஏக்கர் இருக்கு. அத எங்க ரெண்டுபேருக்கும் பாதி பாதியா தான செட்டில்மெண்ட் பண்ணிக் குடுத்திரு. அப்பா பேர்ல உள்ளத எங்க பேருக்கு நேரடியா மாத்திக்கிர்றோம்” என்றான் பாண்டி.

பேச்சியம்மாளுக்கு ஒரே பதற்றமாகிப் போனது.

“ஏம்ப்பா! தங்கச்சிக்கு ஏதாச்சும் குடுக்கணும்; எனக்கு சாவு மொதலு இருக்கு. அதுக்கெல்லாம் ஒதுக்க வேணாமா?” என்று மகன்களைப் பார்த்து பேச்சியம்மாள் கேட்டாள்.

“ஏம்மா! ரெண்டு பயங்க இருக்கோம். எங்கமேல நம்பிக்க இல்லையா. ஒன்னிய ராணி மாரி வச்சுப் பாதுகாக்க மாட்டமா” என்றான் செல்வராஜ்.

“அப்புறம், வீட்ட என்ன செய்யலாம்” என்று கேட்டான் பாண்டி. ஏற்கனவே மாடியில் சின்னவனும் கீழே பெரியவனும் வசித்துவருகின்றனர். பேச்சியம்மாள் பெரிய மகனோடு வாழ்ந்து வருகிறாள்.

சின்னவன் சொன்னான் “நம்ம ரெண்டுபேரு பேர்லயும் வீட்ட அம்மா எழுதிக்குடுக்கட்டும். நாம ரெண்டுபேரும் மாத்தி மாத்தி அம்மாவ கவனுச்சுக்கிறுவோம்.”

இதைக் கேட்டு பேச்சியம்மாள் வாயடைத்துப்போய் நின்றாள்.

“இந்த காப்பிய குடிங்க அத்த” என்றபடி மூத்த மருமகள் காஃபி தம்ளரை சிரித்த முகத்துடன் நீட்டினாள். அனிச்சையாக அதை வாங்கிக்கொண்ட பேச்சியம்மாளின் மனதில் பெரும் புயல் வீசிக்கொண்டிருந்தது.

மகன்களுக்குத் தெரியாமல் மகளுக்குப் போன்போட்டு வரச்சொன்னாள் பேச்சியம்மாள். மறுநாள் காலையில் மகளும் மருமகனும் டாண் என்று வந்து நின்றனர்.

“சொத்த பிரிக்கப் போறீகலாம்ல அண்ணே! நான் ஒருத்தி இந்த வீட்ல பெறந்திருக்கேன்றதயே மறந்துட்டீங்களா? ஏங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லவேண்டாமா?” அப்படி இப்படி என்று பொரிந்து தள்ளினாள் பவுனம்மாள்

“எங்க சொத்த பிரிக்கிறதுக்கு ஓங்கிட்ட ஏன் கேக்கணும்” என்று காட்டமாக பதில் சொன்னான் செல்வராஜ்.

“ஒனக்கென்னம்மா வேணும்” என்று அமைதியாகப் பாண்டி கேட்டான்.

“எனக்கும் சொத்துல பங்கு வேணும்” என்றாள் பவுனம்மாள்.

“ஓங்கலியாணத்தப்ப போட்டுவிட்ட நகநட்டுக அதுக்கப்புறம் செஞ்ச செய்மொறைக எல்லாம் எந்தக் கணக்கு. நாட்டு வழக்கப்படி பொம்பளப் பிள்ளைகளுக்கு அவ்வளவுதான். இதென்ன புதுப் பழக்கம் சொத்துல பங்கு கேட்டுவாரது!” என்று தணிந்த குரல் சொன்னான் பாண்டி.

“நீங்க என்னா இன்னும் அந்தக் காலத்லயே இருக்கிங்க! இப்ப பொம்பளப் புள்ளைகளுக்கு சொத்துல பங்குண்டு. சட்டம் வந்திருச்சு” இது பவுனம்மாளின் கணவர்.

“நாட்டு நடப்பு பெருசா சட்டம் பெருசா?” என்று செல்வராஜ் கேட்டான்.

“சட்டம்தாங்க பெருசு” என்றான் பவுனம்மாளின் கணவன்.

“கலியாணத்ல அறுபது பவுன் நக போட்டம்; காதுகுத்து கவுரெடப்புன்னு ஏகப்பட்ட ரூவா செய்மொற செஞ்சோம். அதுக்கெல்லாம் சட்டம் எங்க இருக்கு? எல்லாம் நாட்டு நடப்புத்தான். சொத்து பாகவஸ்தியும் நாட்டு நடப்புப்படிதான் நடக்கும்” என்று பாண்டி சற்று கடுமையாகவே பேசினான்.

“நாங்க கேசுபோட்டா குடுத்துத்தான ஆகணும்” என்று பவுனம்மா சொன்னதும்

“தாராளமா போட்டுக்கங்க. அப்பறம் சொகந்தரம் அது இதுன்டு சொல்லி பொண்ணு கேட்டு வந்துராதீங்க” என்றான் பாண்டி.

“அதெப்பிடிண்ணே சொகந்தரத்த விட்டுக்குடுப்பேன். நான் இந்த வீட்ல பெறந்ததுக்கு அப்பறம் என்ன அருத்தம்” என்றாள் பவுனம்மாள்.

“நீதான் சட்டப்படி பாப்பமின்றயில. சொகந்தரம் எந்தச் சட்டத்தில வருது? அது நாட்டு நடப்பு. நாட்டு நடப்பத்தான் நீ மதிக்கிறதில்லையே” இது செல்வராஜ்.

இதற்கிடையில் ஊரிலுள்ள இரண்டு பெரிய மனிதர்களை அங்கு அழைத்துக்கொண்டு வந்தாள் பேச்சியம்மாள். ஒரு குட்டிப் பஞ்சாயத்து நடந்தது. அதில் கீழ்க்கண்டவாறு பேசி முடிக்கப்பட்டது:

பேயத்தேவர் பெயரில் இருக்கும் ஒன்றரை ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து பாண்டி, செல்வராஜ் மற்றும் பேச்சியம்மாள் ஆகியோர் தலா அரை ஏக்கர் வைத்துக்கொள்வது. கிணறு பம்ப்செட்டை மூவரும் பொதுவாகப் பயன்டுத்திக்கொள்வது. பேச்சியம்மாள் பெயரில் உள்ள ஐந்து ஏக்கரில் ஒரு ஏக்கரைப் பேச்சியம்மாள் பெயரிலேயே வைத்துக்கொண்டு மீதியிருக்கும் நான்கு ஏக்கரை இரண்டு மகன்களுக்கும் சமமாகப் பிரித்துக்கொடுப்பது. பவுனம்மாளுக்கு பாண்டியும் செல்வராஜும் தலா ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்துவிடுவது. வீடு பேச்சியம்மாள் சாகும்வரை அவள் பெயரிலேயே இருப்பது. சொகந்தரப் பெண் குறித்த விஷயத்தில் நாட்டு நடப்புப்படி நடந்துகொள்வது. சொகந்தரத்தை யார் முறிக்க நினைத்தாலும் அவர் எதிர் தரப்பினருக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியது. பேச்சியம்மாள் வசமுள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தில் அண்ணன் தம்பிகளில் யாரேனும் ஒருவர் பேச்சியம்மாள் இருக்கும்வரை உழவு செய்துகொள்ளலாம். அவ்வாறு உழவு செய்பவர் பேச்சியம்மாளைத் தன்னுடன் வைத்துப் பராமரிக்க வேண்டும். அவர் இறந்தபின்பு அந்நிலத்தை இருவரும் பிரித்துக்கொள்ளலாம்.

அண்ணன் பாண்டி தனது தாயாரைப் பராமரிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டான். சிறிதுகாலம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. கொஞ்ச காலத்திற்குள் மகனிடமும் மருமகளிடமும் ஒருவகை சலிப்பும் புறக்கணிப்பும் உருவாகிக்கொண்டிருப்பதை பேச்சியம்மாள் உணரத்தொடங்கினாள். போதாதற்கு ரத்த அழுத்தமும் நீரிழிவு நோயும் அவளைப் பிடித்துக்கொண்டது. உடலில் புண்கள் ஏற்பட்டு ஆறாமல் கிடந்தன. அதற்கு வைத்தியம் பார்ப்பதற்கு பாண்டிக்கு நிறைய செலவும் அலைச்சலும் ஏற்பட்டது. நோயாளிக்குத் தகுந்தவாறு தனியாக உணவு தாயார் செய்ய வேண்டியிருந்ததால் மருமகளுக்கு மாமியார்மீது ஒருவகை வெறுப்பு வளரலாயிற்று. பாண்டிக்கு திருமண வயதில் இரண்டு பெண்பிள்ளைகள் இருந்தனர். அவர்களது திருமணம் நோயாளித் தாயாரால் பாதிக்கப்படுமோ என்று பயந்தான் பாண்டி. 

பேச்சியம்மாளை சமையலறைக்குள் வரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அக்கறையாலல்ல, அருவெறுப்பால்! அவள் புழங்கிய பாத்திரங்களை வேறு யாரும் புழங்குவதில்லை. வீட்டிற்குள்ளேயே ஒருவகைத் தீண்டாமை அனுஷ்டிக்கப்பட்டது. 

பாண்டி தனது தம்பியிடமும் தங்கையிடமும் அம்மாவைப் பார்த்துக்கொள்ளுமாறு வேண்டினான். அம்மாவின் நிலத்தைத் தந்துவிடுவதாகவும் மேற்கொண்டும் தன்னால் முடிந்ததைத் தருவதாகவும் சொல்லிப் பார்த்தான். இருவரும் சம்மதிக்கவில்லை. பிள்ளைகள் தன்னை சுமையாகப் பார்க்கிறார்கள் என்பதையும் தன்னை அருவெறுக்கிறார்கள் என்பதையும் பேச்சியம்மாள் புரிந்துகொண்டாள்.

மகன்கள் முகம்கொடுத்துப் பேசுவதில்லை. மருமகள்கள் காதுபடவே “சனியன் தொலையமாட்டேங்குதே” என்று பேசிக்கொண்டார்கள். தனிமையையும் புறக்கணிப்பையும் எத்தனை நாள் தாங்கமுடியும் அவளால்! அவமானமும் ரோஷமும் அவளைத் தற்கொலைக்குத் தூண்டின. 

கிணற்று மேட்டில் அமர்ந்துகொண்டு ஆற அமர யோசித்தாள் பேச்சியம்மாள். தான் செத்து மடிவது மட்டுமே அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும் என்று அவள் திடமாக நம்பினாள். எப்படிச் சாவது என்றும் முடிவெடுத்துவிட்டாள். மரத்தில் தூக்கு மாட்டிக்கொள்வதே சிறந்த வழியாகப்பட்டது. கிளை ஒன்றில் கயிற்றைப் போடும்போது ஒரு எண்ணம் அவள் மனதில் மின்னல்போல் வந்துபோனது. அது என்ன எண்ணம் என்பதைப் பிடிப்பதற்குள் அது மறைந்துவிட்டது.

சற்றுத் தயங்கி நின்று நிதானமாக அதை நினைவிற்குக் கொண்டுவர முயற்சித்தாள்.

‘பிள்ளைகள் உன்மீது அன்பு செலுத்தவில்லை என்பது உண்மை. நீ அவர்கள் மீது அன்பு செலுத்துகிறாயா’ என்ற ஆழ்மனக் கேள்விதான் அந்த எண்ண மின்னல்.

தான் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பில் என்ன குறை இருக்கிறது என்று யோசித்தாள். நல்ல நிலையில் மூன்று பிள்ளைகள் வாழ்ந்துகொண்டிருக்கும்போது ஒரு தாய் தற்கொலை செய்துகொண்டால் அந்தப் பிள்ளைகள் மீது எவ்வளவு பழிச் சொற்கள் வந்து விழும்; எத்தகைய இழிவிற்கு அவர்கள் ஆளாவார்கள்; அவர்கள் காலம் முழுவதும் குற்றவுணர்வில் வெந்து சாவார்களே; பெற்ற பிள்ளைகளுக்கு அவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுப்பதா என்று மளமளவென எண்ணங்கள் தோன்றின. 

கயிற்றை உருவி கிணற்றில் வீசிவிட்டு வீடு நோக்கி மெள்ள நடந்தாள் பேச்சியம்மாள்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT