ஓவியம்; தமிழ் 
மங்கையர் மலர்

சிறுகதை – சைக்யாட்ரிஸ்ட்!

கல்கி டெஸ்க்

-நாபா மீரா

‘கல்யாணி மருத்துவமனை அட்சயா மனநல மருத்துவர்’ என்ற போர்டு தாங்கிய ரூம். ரிசப்ஷனில் பெயர் பதிந்து, மகன் பாலாஜியுடன் வெளியே காத்திருந்தார் சீனிவாசன்.

அவர்களது சொந்த ஊர் மதுரை. பசுமலைக் கிராமம். வானம் பார்த்த பூமி. காலத்திற்கேற்றவாறு பயிர் செய்து வயிற்றை நிரப்பும் விவசாயக் குடும்பம்.

கல்யாணமாகி நீண்ட இடைவெளியில் ஒரே மகன் பாலாஜி. சென்னையில் உள்ள ஐ.டி கம்பெனியில் நல்ல வேலை. குடும்பம் ஓரளவு தலைநிமிர்ந்தது.

ஒரு நாள் “அப்பா... ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. வேலைய விட்டுட்டு பசுமலைக்கே ஓடி வந்துடலாம்னு தோணுது.”

இருபத்தாறு வயசாயிடுச்சு. வேலை இருந்தாலே பெண் கிடைக்கிறது குதிரைக் கொம்பு. மனத்துள் அதிர்ந்தனர் பெற்றோர்.

“நிதானமா யோசிச்சு முடிவெடுப்பா” தாய் அலமேலு சொல்ல, “கல்யாணம்தானே? அதெல்லாம் வேணாம். கடைசிவரை உங்களோடவே இருந்துடறேன்.”

வானிலிருந்து தேவர்கள் 'ததாஸ்து' சொன்னார்களோ? சென்னையில் ஆபீசில் ஒரு நாள் மயங்கிச் சரிந்தான் பாலாஜி. ஹை பிபி – ஸ்ட்ரெஸ். மருத்துவர்களின் பரிந்துரையில் இதோ இப்போது இங்கே...

சைக்யாட்ரிஸ்ட் பார்க்க தங்கள் முறை வந்ததும் உள்ளே நுழைந்தனர் சீனிவாசனும் பாலாஜியும்.

உள்ளே இருந்த இளம் டாக்டர், “ பிபி, ஸ்ட்ரெஸ், சரியான தூக்கமின்மை எல்லாம் இந்த வயசுல சகஜம்தான்.” சீனிவாசனிடம் பேச ஆரம்பிக்க, சற்றே குழம்பியவர், “என் மகனுக்காகத்தான். இழுக்க...”

“ஓ அப்படியா? நீங்க கொஞ்சம் வெளிய இருங்க சார்...” கூப்பிடறேன்.

பாலாஜியிடம் சில கேள்விகள் கேட்டவள், “சொல்லுங்க. நா எப்படி உங்களுக்கு உதவ முடியும்?”

“ஸ்ட்ரெஸ். ஃப்ரீயா தூங்கறதுக்கு டாப்லெட்ஸ் எழுதிக் கொடுங்க டாக்டர்?”

“நீங்கதான் நோயாளின்னு எனக்குத் தெரிந்தாலும் உங்கப்பாவ நோயாளியா ட்ரீட் பண்ணினேன். ஏன் தெரியுமா? வயோதிகத்துலதான் மன அழுத்தத்துக்கு மருந்து வேணும். இந்த வயசான காலத்துல அவரோட மனோதிடத்தைப் பார்த்து நீங்க கத்துக்க வேணாமா?”

“என்னால முடியலியே. இப்ப என்னை என்னதான் செய்யச் சொல்றீங்க?” என்றான் எரிச்சலும் பதற்றமுமாக.

“இப்படியே போச்சுன்னா செத்துடுவேன்” விரக்தி தொனித்தது அவன் குரலில் .

அவன் கையை மென்மையாக அழுத்திக் கொடுத்தவள், “வாழ வேண்டிய வயதில் சாவைப் பற்றி பேசலாமா பாலாஜி?” சற்றே இடைவெளி விட்டவள் மீண்டும் தொடர்ந்தாள்...

“மன அழுத்ததுக்கான மாத்திரைகள் உங்களக் கொஞ்சம் கொஞ்சமா அதுக்கு அடிமையாக்கிடுமே தவிர நிரந்தரத் தீர்வு தராது. மனதுக்குப் பிடித்த வகையில் புத்தகங்கள் வாசிப்பது. மனதுக்கு இதம் தரும் பாடல்கள் கேட்பது. இப்படி எத்தனையோ தீர்வுகள் இருக்க மாத்திரைகளோ, சாவோ எதுக்குச் சொல்லுங்க?”

சற்றே தெளிந்தவன், “அதுக்குத்தான் வேலையை விட்டுட்டு கிராமத்துக்கே வந்துடறேன்னு சொன்னா, இந்த அப்பா அம்மா வேற... கல்யாணம் அது... இதுன்னு...”

“அதுவும் அவசியம்தானே. வயோதிகத்தோட தவிப்பு. ஒரே மகனான உங்களையே சுற்றிவரும் கனவுகள் இயல்புதானே” - அட்சயா.

“இது... இதெல்லாம் சேர்ந்துதான் என் மனுவுளைச்சலை அதிகப்படுத்திட்டிருக்கு.” மீண்டும் குரலில் எரிச்சல், சோர்வு.

‘எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை… இதுதான் பயணம் …
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் – பயணம் முடிந்து விடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்து விடும்...’

மெல்லிய குரலில் ஒலித்த கண்ணதாசனின் பாடல் வரிகளில் அகத்தில் ஒரு இனம் புரியாத உணர்வு துளிர்க்க...

“நா என்ன பண்ணனும்னு சொல்லுங்க டாக்டர்?”

“வாழ்க்கை ஆற்று நீர் மாதிரி. அதோட போக்கிலியே பயணம் செய்யுங்க. அப்பாவுக்கு விவசாயத்துல உதவி. உங்க படிப்புக்கு ஏற்ற ப்ரீலான்சர் வேலை. ஆக்டிவிடீஸ் ஸ்ப்ளிட் ஆகறச்ச மனஅழுத்தமும் விலகும். செல்ப் சிம்பதிய விட்டுட்டு வாழ்க்கைய எம்பதியோட அப்ரோச் பண்ணுங்க... ஆல் த பெஸ்ட்” கொஞ்சம் வைட்டமின் மாத்திரைகள் எழுதிய ப்ரிஸ்க்ரிப்ஷனுடன் கைகுலுக்கி அனுப்பி வைத்தாள் அட்சயா.

தந்தையுடன் விவசாயம். ப்ரீலான்சர் வேலை. பசுமலைக் கிராமத்து சூழலில் பாலாஜியின் வாழ்க்கை இதமாக நகர்ந்துக்கொண்டிருந்தது. மீண்டும் வரன் வேட்டை. பெரிய விருப்பம் இல்லாவிட்டாலும் பெற்றோர் போக்கிலேயே விட்டுவிட்டான் பாலாஜி. திடீரென்று ஒருநாள் தூக்கத்தில் மாரடைப்பால் சீனிவாசனின் உயிர் பிரிந்தது. கணவனும் இல்லை. மகனுக்கு மணவாழ்க்கையும் அமையவில்லையே. அலமேலு புலம்பினாள்.

“அம்மா எனக்குன்னு ஒருத்தி எங்கேயோ பிறந்திருப்பா. உங்க கண் முன்னாடி சிக்கிரமே வந்து மருமகளா நிற்பா...” என்று கலங்கிய தாயின் கண்களைத் துடைத்து ஆற்றினான் மகன்.

மாத்திரை, மருந்துகள் இல்லாம நம்ம மன அழுத்தங்களைத் தாண்டி இன்னைக்கு நாம் அம்மாவுக்கு ஆறுதல் சொல்றோம்னா டாக்டர் அட்சயாதான் காரணம். சந்திச்சு நன்றி சொல்லணும்’ எண்ணமே தித்தித்தது பாலாஜிக்கு.

பாலாஜியின் முப்பத்தி ஐந்தாவது பிறந்தநாள். வழக்கம்போல் ஒரு மனநலக்காப்பகம் தேடிக் கிளம்பிவிட்டான். இந்த முறை சென்னை, டாக்டர் அட்சயாவையும் சந்திக்கும் முடிவோடு...

மேரி மனநலக்காப்பகம் ரிசப்ஷனில் அனுமதி பெற்று, ஒவ்வொரு அறையாகச் சென்று இனிப்பு வழங்கி ஆறுதலாகப் பேசினான்.

கடைசி அறை... அதிர்ச்சியில் உறைந்தான் பாலாஜி. எங்கோ வெறித்த நிலையில், அது அது டாக்டர் அட்சயாவா? ஒரே சாடையில் ஏழு பேர் இருப்பார்கள் என்கிறார்களே. ஒரு வேளை அப்படியோ?

இல்லை என்று உண்மையைப் பறைசாற்றியது அங்கே அருகில் இருந்த பெண்மணி பகிர்ந்த தகவல்கள். தன்னைப் பார்வதி என்று கூறியவள், “அட்சயாமோள்கூட கல்யாணி ஆசுபத்திரில நர்ஸா வேலை பார்த்த எனக்குன்னு குடும்பம் இல்லை. என்னோட தனிமையைப் போக்கி அவங்க குடும்பத்துல ஒருத்தியா மோளோட பெற்றோர்களும் ஏத்துக்கிட்டாங்க...

எல்லாமே நல்லாப் போயிட்டிருந்த சூழ்நிலையில 'கொரோனா' ரூபத்துல காலன் புகுந்து மோளோட பெற்றோர் உயிரைக் காவு வாங்கிட்டான். கந்துவட்டிக்காரங்க நாங்க இருந்த ஒரே வீட்டையும் ஏமாத்தி அபகரிச்சுட்டாங்க. அப்பத்திலிருந்தே மோளு இப்படி ஆயிட்டா. வேலையும் போயி கஷ்டப்பட்டு கடைசியில இங்க வந்து அடைக்கலமாயிட்டோம். ஆமா… உங்களுக்கு அட்சயா மோள எப்படித் தெரியும்?”

தன்னைப்பற்றிச் சுருக்கமாகக் கூறியவன், “கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி பீல் பண்றேன். உங்க ரெண்டு பேரையும் என்னோட கிராமத்துக்கு அழைச்சிட்டுப் போறேன். அந்தச் சூழ்நிலையில டாக்டர் கண்டிப்பா குணமாயிடுவாங்க.”

“அதெல்லாம் சரிப்பட்டுவராது தம்பி. வயசுப் பெண்ணோட இன்னொரு வீட்டுல வந்து தங்கறதேல்லாம் முறையா இருக்காது. உங்க நல்ல மனசுக்கு நன்றி. அப்பப்ப வந்து பார்த்திட்டுப்போங்க. என் காலம் வரைக்கும் நா பார்த்துப்பேன். அதுக்கப்புறம்...” என்று கலங்கியதில் வார்த்தைகள் வராமல் தடுமாறினாள் பார்வதி.

“பார்வதியம்மா உங்கத் தயக்கம் எனக்குப் புரியுது. நா உயிரோட இன்னைக்கு நடமாடறதுக்குக் காரணமான இவங்களை இப்படியே விட்டுட்டுப்போக என் அந்தராத்மா சம்மதிக்காது. உங்களுக்குச் சம்மதம்னா இந்த ஹோம் சர்ச்சுல அட்சாவைத் திருமணம் செய்து என் மனைவியா கூட்டிட்டுப் போறேன்.”

ன் பிறந்த நாளைத் திருமண நாளாக்கி, அவர்கள் இருவருடன் பசுமலைக்குப் புறப்பட்டான் பாலாஜி.'

கதவைத் திறந்த அலமேலு மணக்கோலத்தில் மகனைக்கண்ட அதிர்ச்சியில் சற்றே பின்வாங்கினாள். அவர்களின் பின்னே நின்றிருந்த முதிய பெண்மணி உள்ளே சென்றுவந்து ஆரத்தி எடுத்து மணமக்களை வீட்டுக்குள் அழைத்தாள்.

பிரமை பிடித்த நிலையில் நின்றிருந்த அலமேலுவை ஆதரவாகப்பற்றி ஆசுவாசப்படுத்திய பார்வதி நடந்ததை நிதானமாக அவருக்கு எடுத்து உரைத்தார்.

“மருமக உங்க முன்னாடி வந்து நிப்பான்னு சொன்னபடியே செஞ்சுட்டியா பாலா” குரல் தழுதழுக்கக் கேட்ட தாயை இதமாக அணைத்து ஆறுதல் படுத்தினான் பாலாஜி.

“உங்களுக்கு எப்படிப் புரிய வைக்கிறதுன்னு தெரியலைம்மா - இந்த உயிர் பூமிக்கு வர நீ காரணம்னா- அது போய்ச்சேர்ந்த இடத்துல புல்லு முளைக்காமக் காப்பாத்தினது இவங்கதாம்மா. என் மனநலத்த மீட்டுக் காப்பாத்திய தேவதைம்மா இவ.”

பெருமிதம் பொங்க, மனநிறைவுடன் அவர்களை ஆசீர்வதித்தாள் அலமேலு. அருகில் நின்றிருந்த பார்வதியின் மனமும் நிறைந்தது.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT