எதிர் வீட்டு சிவராமன் சார், வழக்கம் போல தன்னுடைய ஸ்கூட்டரை பல முறை உதைத்து, ஸ்டார்ட் பண்ண முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அது ஒரு பழைய மாடல் வண்டி. மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை என எப்போதாவதுதான் அதை எடுப்பார்.
அவருக்கு குறைந்தது எழுபது வயது இருக்கும். காற்று சற்று பலமாக அடித்தால் விழுந்து விடுகிற அளவுக்கு மெலிந்த தேகம். ஆனாலும், ஒரு பத்து தடவையாவது கிக்கரை உதைத்து வண்டியை ‘ஸ்டார்ட்’ செய்து ஓட்டிக்கொண்டு போவார்.
என் வீட்டு திண்ணையில் அமர்ந்து செய்தித்தாளை படித்துக் கொண்டு, அவர் படுகிற சிரமத்தை கவனித்தும் , கண்டும் காணாதது போல … செய்தி தாளில் என் முகத்தை நான் புதைத்துக் கொண்டேன்.
ஏனென்றால்… அப்படி ஒரு முன் அனுபவம் அவரோடு எனக்கு கிடைத்து இருந்தது .
இதற்கு முன்பு,
‘பாவம் வயதானவர் சிரமப்படுகிறாரே’
என்று நானாக உதவிக்கு சென்று, அந்த வண்டியை ஒரு சிலமுறை, ‘ஸ்டார்ட்’ பண்ணி கொடுத்திருக்கிறேன்.
ஆனால் என்னோட பாணியில், அவர் வண்டியை சற்று பலமாக உதைத்து, ஆக்சிலேட்டரை வேகமா முறுக்கி கொஞ்ச நேரம் கதற விடுவேன்.
பொதுவாக இப்படி ‘ஸ்டார்ட்’ ஆக அடம் பிடிக்கிற வண்டிகளை, ஓங்கி இரண்டு மிதி மிதித்து அதே வேகத்தில் கை பிடியை தொடர்ந்து நன்றாக முறுக்கினால்…
அது கரும் புகையாய் கக்கி விட்டு, சிறிது நேரத்தில் வெண்ணிற புகைக்கு மாறி விடும்.
அதுக்கப்புறம் மெதுவாக ஒரு மிதி மிதித்தாலே போதும், உடனே ஸ்டார்ட் ஆகி விடும். அதற்கு பிறகு அந்த வண்டிய ‘ஸ்டார்ட்’ செய்ய, அவருக்கும் சுலபமாக இருக்குமே என்று நினைத்து அப்படி செய்வேன்.
ஆனால் நான் அப்படி கடுமையாக ‘ஸ்டார்ட்’ செய்வதில் அவருக்கு உடன்பாடில்லை. நான் அவர் வண்டியின் கிக்கரை ஓங்கி உதைக்கும் போதெல்லாம் …
"தம்பி தம்பி .. பார்த்து .. பார்த்து , மெதுவா உதைங்க .."
என்று பதறுவார்.
நான் வண்டியின் கைப்பிடியை வேகமாக முறுக்கினாலோ ...
அவர் இன்னும் டென்ஷன் ஆகிவிடுவார்.
"அச்சச்சோ.. இப்படி எல்லாம் முரட்டுத்தனமா வண்டிய முறுக்கக்கூடாது. எங்க வண்டிய இப்படி பண்ணினா, என் ஞானசுந்தரிக்கும், எனக்கும் சுத்தமா பிடிக்காது.”
என்று சொல்லிவிட்டு…
“சுந்தரி என்கிட்ட அடிக்கடி சொல்லுவா .. ‘நம்ம வண்டியும்… நமக்காக நம்மள நம்பி வந்து, உழைக்கிற ஜீவன். அதுக்கு உசிரு இருக்கோ இல்லையோ… நாம அத நேசிக்கிற அளவுக்கு அதுவும் நம்மள நேசிக்கும். அதனால அதை சினேகமா.. பதமா தான் கையாளணுமின்னு’ சொல்லுவா”
அவர் இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்.
அதனால 'நாம எதுக்கு இவருக்கு உதவி செய்யணும். அப்புறம் அவரோட அறிவுரையை ஏன் கேட்கணுமின்னு' நினைத்து ஒதுங்கி கிட்டேன்.
சிவராமன், கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர். அவர் மனைவி ஞானசுந்தரி, அரசு ஆரம்ப சுகாதார மருத்துவனையில நர்ஸாக இருந்தவங்க. இந்த வாகனம், அவர் மனைவி அவருக்கு ஆசையாக வாங்கி கொடுத்ததாம்.
இவர் வேலைக்கு போகிற வரைக்கும், இந்த வண்டிய தினமும் துடைத்து, அடிக்கடி சர்வீஸ் எல்லாம் பண்ணி ஒட்டிக்கிட்டு இருந்தார்.
அவர் பணிஓய்வு ஆனதும், அவர் மனைவிய வேலைக்கு கூட்டிட்டு போறதும் வர்றதுமா இருந்தார். பிற்பாடு இரண்டு பேரும் ஓய்வு ஆனதுக்கு பிறகு… இந்த வண்டிக்கு ஓட்டம் குறைஞ்சது. அப்புறம் கோயில் குளத்துக்குன்னு போவதற்கு, வாரத்தில ஒரு முறை எடுப்பாங்க.
கொரானா அலையில, அவர் மனைவி கொரானாவுல உடம்புக்கு முடியமா இறந்துட்டாங்க. அதுக்கு பிறகு இப்படி எப்பாவதுதான் அந்த வாகனத்தை எடுப்பார். ஆனா தினமும் அதை துடைச்சு சுத்தமா வெச்சு இருப்பார்.
"ஏன் சார் .. இப்படி உதைச்சு ஸ்டார்ட் பண்ணி சிரமப்படறதுக்கு பதிலா, இந்த வண்டிய குடுத்துட்டு வேற பட்டன் ஸ்டார்ட் மாதிரி வாங்கிக்கலாமே" ன்னு கேட்டதுக்கு..
"எனக்கு இந்த ஸ்கூட்டர் வெறும் வண்டியா தோணலைப்பா. இப்ப இந்த வண்டி பழசாயிடுச்சேன்னு வித்துட்டா… சுந்தரியோடு நான் அனுபவித்த அந்த இனிமையான பழைய நினைவுகளும் காணாம போயிடும்”. என்பார்.
அந்த வண்டியில் இருக்கும் பின் சீட்டை பார்த்தால் , வெடிப்புகள் நிறைய ஆகி, கிழிந்து போகிற அளவில் இருக்கும்.
‘அதையாவது மாத்திக்கலாமே’ன்னு சொன்னால் ...
"அதை மாத்த கூடாதுப்பா. இது அவ உட்கார்ந்த சீட்டு. நான் என் சுந்தரிய கூட்டிகிட்டு இந்த ஊரையே சுத்தி வந்தது, கோவில் குளங்கன்னு அவளோட போய் வந்ததுன்னு எல்லாத்தையும் இப்ப இந்த சீட்டு தான் ஞாபகபடுத்திகிட்டு இருக்கு.”
அவர் பேசும் போது ...ஒரு மாதிரி பரவச நிலையில அந்த காலத்தின் நினைவுகளில் மெய்மறந்த நிலையில் பேசுவார்.
“அவளோட நான் வெளியில போறப்ப .. அவ ஒரு ராணி மாதிரி இந்த சீட்ல சந்தோசமா, புன்னகையோடு உக்கார்ந்துட்டு வருவா. அப்படி அவளை பாக்குறப்ப , திருவிழா தேருல, அந்த அம்மன் கருட வாகனத்தில வர்ற மாதிரி… அவள் முகத்தில அப்படி ஒரு தேஜஸ் தெரியும். அப்ப அவளுக்கு தேர் ஓட்டுற சாரதி மாதிரி என்னை நான் நெனைச்சுப்பேன்.”
“ஏரோபிளேனில் போகணுமுன்னு அவளுக்கு ரொம்ப ஆசை. அவ ஆசையை என்னால அப்ப நிறைவேத்த முடியலை. ஆனா இந்த வண்டிய நான் வேகமா ஓட்டிட்டு போகும் போது.. ‘விமானத்தில பறக்கற மாதிரி இருக்குன்னு’ ஒரு குழந்தை மாதிரி சொல்லுவா. அவ இப்ப என் கூட இல்லேன்னாலும், இந்த வண்டியாவது அவ நினைவா இருக்கட்டுமே”.
இது போல.. அவருடைய மனைவி பற்றியும், இந்த ஸ்கூட்டர் பற்றியும் அவர் எல்லோரிடமும் மிக சிலாகித்து பேசுவதை பலமுறை கேட்டிருக்கேன்.
அவர் இந்த வண்டிய , மனைவி மீது இருக்கிற நேசத்தால விரும்புறாரா அல்லது அவர் மனைவிய ஞாபகப்படுத்துவதால இத நேசிக்கிறாரான்னு எனக்கு தெரியலை.
‘பெரிசு , ரொம்ப ஓவரா தான் பொண்டாட்டிய பத்தி பேசி, ‘லவ் சீனு’ காட்டுது. இந்த டப்பா வண்டிதான், அவருடைய தேவதையின் வாகனம் போல "
அவரை கேலி செய்து , சிலபேர் அவருக்கு பின்னால் பேசுவதும், சிரிப்பதும் உண்டு.
சிலருக்கு மனைவி, மக்கள், குடும்பம். வேறு சிலருக்கு வளர்ப்பு பிராணிகள், வீடு அல்லது வாகனங்கள். இப்படி யார் மீது என்றாலும், எதுவானாலும்… அவர்கள் வைத்திருக்கிற அந்த காதல், அன்பு என்பது உண்மைதானே.!
அது போல அவர் மனைவியை நேசிப்பது மாதிரி, இந்த வண்டியையும் நேசிக்கிறார்.
‘இப்படி யாருக்கு யார் மேலும், எது மேலும் … இந்த அன்பு, பாசம், காதல் வரக்கூடும். இது போல தீவிரமான நேசம், அன்பு எல்லாம் அவரவர் மனசு சம்பந்தப்பட்டது. அதை அவ்வளவு சுலபத்தில் மத்தவங்களால புரிஞ்சிக்க முடியுமுன்னு நாம எதிர்பார்க்கவும் முடியாது’.
சிவராமன் சார் பற்றிய நினைவுகளில் மூழ்கி இருந்த நான் , அவர் இன்னமும் வண்டியை ஸ்டார்ட் செய்ய உதைத்து கொண்டிருப்பதை பார்த்து… மனது கேட்காமல் எழுந்து வந்தேன். அப்போது அவர் வண்டி ‘ஸ்டார்ட்’ ஆகிவிட்டது.
வண்டியில் இருந்து, வழக்கம் போல கரும் புகை கிளம்பியது. சிறிது நேரம் மெதுவாக ஆக்சிலேட்டரை முறுக்கி கொண்டே இருந்தார். பின்பு மெதுவாக ஒட்டிக்கொண்டு போனார்.
அவர் போகும் போது, வண்டியின் பின் பக்கம் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை அன்றுதான் நான் பார்த்தேன் .. அதில் “MY ANGEL” (என் தேவதை) என்று எழுதி இருந்தது.
முற்றும்.