எங்கிருந்து வந்தது அந்த தைரியம்? புவனாவுக்கே புரியவில்லை!
அம்மா, அப்பா, மாமா, மாமி மற்றும் பெண் பார்க்க வந்த பிள்ளை வீட்டுக்காரர்கள் மத்தியில் “மாப்பிள்ளையைப் பிடிக்கலை” என்றாள் வெளிப்படையாய்.
அப்பா கோபக்கனலாய் பார்க்க, அம்மா ‘என்ன நடக்கப் போகிறதோ’ என்ற கவலையில் தவிக்க,
“ஏம்மா ஃபோட்டோவைப் பார்த்துதானே சம்மதிச்சே?” மாப்பிள்ளையின் அப்பா சுர் முகத்துடன் கேட்க,
புவனா பதில் ஏதும் சொல்லவில்லை.
புவனாவின் அப்பா வேதா “என்ன புவனா பைத்தியமா உனக்கு?” என்று கத்த,
“விடுங்க. ஏதாவது லவ் மேட்டரா இருக்கும். பெண்ணைக் கேட்டு ஏற்பாடு செய்யலையா?” மாப்பிளை ரவி சீற,
“தரகனை உதைக்கணும். காசுக்காக கண்ட ஜாதகத்தையும் தந்துடறான்” ரவியின் அக்கா திட்டினாள்.
“என் பையனுக்கென்ன மஹாராஜா! எத்தனையோ பெண் கிடைப்பா. வாடா” என்று அப்பா எழ,
“ஸாரி ஸார் நடுவிலே ஏதோ தப்பு நடந்திருக்கு. என்னனு விசாரிச்சிட்டு மேற்கொண்டு…” வேதா கெஞ்ச,
“ஐயோ! மேற்கொண்டா? ஆளை விடுங்க சாமி. வந்ததுக்கே நல்ல மரியாதை தந்தீங்க” என்று கிளம்பினர்.
செம கோபமாய் திரும்பிய வேதா “இப்ப திருப்தியா? எத்தனை நாள் என்னை அவமானப்படுத்தணும்னு ப்ளான்?” கத்தினார்.
“ஐயோ! அப்பா நானெப்படி அப்படி நினைப்பேன்” அழுதாள் புவனா.
“பின்னே என்னடி? மாப்பிள்ளைக்கு என்னடி குறைச்சல்? அழகா, லட்சணமா இருக்கான். கை நிறைய சம்பாதிக்கறான். நல்ல குடும்பம்.” அம்மாவும் கோபிக்க,
“ஆனால்…” தயங்கினாள் புவனா.
“ஆனால் என்னடி ஆனால்? நீ வேற யாரையாவது மனசிலே வைச்சிண்டிருக்கியா? சொல்லு” அம்மா அழ ஆரம்பிக்க,
“அம்மா அழாதேம்மா” என்று புவனா தேற்ற,
“அழாத என்னடி பண்றது? நீ செஞ்ச வேலைக்கு…” அம்மா புலம்ப,
“அம்மா நான் மட்டும் மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்குனு சொல்லியிருந்தால் காலாகாலத்துக்கும் நாம அழணும்” அமைதியாய் பேசினாள் புவனா.
"என்னடி ரெண்டாவது குண்டை தூக்கிப்போடறே?" புரியாமல் கேட்டார் வேதா.
“ஆமாம்பா மாப்பிள்ளை கெட்டவர். தப்பானவர்” அழுத்தமாய்ச் சொன்னாள் புவனா.
“அப்பிடின்னா?” அதிர்ச்சியாய் அம்மா கேட்க,
“குடி, சூது, பல பெண்களோட சகவாசம் உள்ளவர். அவரைக் கட்டிக்கிட்டு நானெப்படி நிம்மதியா வாழமுடியும்?” சீறினாள் புவனா.
“மாப்பிள்ளை கெட்டவர்னு உனக்கெப்படி தெரியும்? நீ சொன்னா நான் நம்பிடுவேனா?” ஒத்துக்கொள்ள முடியாமல் கேட்டார் வேதா. ..3
“யார் சொன்னா நம்புவீங்க?”
“நான் விசாரிச்சவரையில் மாப்பிளை நல்லவர். யார் சொன்னாலும் நம்ப மாட்டேன்.”
“மாப்பிளையோட அம்மா சொன்னா?”
“என்ன சொல்றே நீ?" சட்டென சுவர் மேல் சாய்ந்தார் வேதா.
“என்னடி இது? மூணாவது குண்டா?” அம்மா அதிர,
“ஆமாம்மா. பெண் பார்க்க வரதுக்கு ரெண்டு மணி நேரம் முன்பு மாப்பிள்ளையின் அம்மா செல்ஃபோனில் என்னிடம் பேசினாங்க. அவங்க பிள்ளைக்கு இப்ப கல்யாணம் வேணாம்; ஒரு பெண்ணோட வாழ்க்கை பாழாப்போகும்னு தடுத்தாங்களாம். பையனோட அப்பா கேட்கலையாம்.”
“இதை என்னை நம்பச் சொல்றே!” நம்பாமல் கேட்க,
“வாய்ஸ் ரெகார்ட் பண்ணியிருக்கேன் கேளுங்க.” என்று புவனா ஆன் பண்ண,
“பெண்ணே! என் பிள்ளையை பிடிக்கலைனு சொல்லிடு. அவனுக்கு மது, மாது, சூதுனு ஏகப்பட்ட கெட்ட வழக்கமுண்டு. எத்தனை முறை சொல்லியும் திருந்தலை. திருந்தவும் மாட்டான். என் புருசனோட தங்கை மகளை அவனுக்குத் தரேன்னாங்க. அவ நல்லாயிருக்கணும்னு சம்பந்தம் பண்ணலை. அப்ப வேற ஒரு பெண்ணோட வாழ்க்கை மட்டும் பாழாகலாமா? என் பிள்ளை உனக்கு நல்ல புருசனா இருக்கமாட்டான். வேண்டாம்னு சொல்லிடு.”
“போதுமா?” என்று புவனா கேட்க, ‘இப்படியும் ஒரு நல்ல மனுஷியா’ என்று வாயடைத்து பிரமித்து நின்றனர் புவனாவின் பெற்றோர்.