Man is getting wet in the rain 
மங்கையர் மலர்

கவிதை: மனிதனின் கேள்விக்கு மழையின் பதில்!

ரெ. ஆத்மநாதன்

மனிதனின் கேள்வி:

மழையே உன்னையுந்தான் 

மகிழ்வுடனே வரவேற்று…

உள்ளத்தால் பூரித்து 

உவகை பொங்கிடவே 

உன்னில் நனைந்ததை 

உள்ளம் மறக்காது! 

எந்நாளும் அந்நினைவு 

இதயத்தை விட்டகலாது!

ஐப்பசி கார்த்திகையில் 

அப்பத்தா தொணதொணப்பாய்

எப்பொழுதும் தூறிடுவாய்!

இடைவெளியே இல்லாமல்

அப்பப்போ பெய்வதுமாய்

அடுத்தடுத்து தூறுவதுமாய்

வெயிலுக்காய் எங்களை 

வெறுப்பேற்றி விளையாடிடுவாய்!

பழசை மறந்துவிட்டு 

பகட்டிலே பரிணமிக்கும் 

புதுப்பணக் காரனைப்போல் 

புதுவழியி்ல் பயணித்து…

முப்பதுநாள் பெய்யவேண்டியதை 

மூன்றுமணி நேரத்தில்

கொட்டித் தீர்க்கின்றாய்!

குவலயத்தை அலைக்கழிக்கின்றாய்!

இதுவல்ல உன்குணம்!

எங்கிருந்து இதைக்கற்றாய்?

உனைக்கண்டு மகிழ்ந்திருந்த 

உள்ளங்கள் இப்போது 

உன்வரவைக் கேட்டாலே 

உதறி நடுங்குவதை 

அறிவாயா நீயுந்தான்

அதற்குப் பதிலுண்டா?

மழையின் பதில்:

ஏரிகளைத் தூர்த்து 

இடமாக்கி வீடுகட்டி…

கால்வாய்கள் அகலத்தைக் 

கச்சிதமாய்க் குறைத்துவிட்டு…

தூரே வாராமல்

துட்டை மட்டும் 

ஆட்டை போடும்…

கூட்டத்தைக் கேட்காமல்

கூனிக் குறுகிநின்று

கோபத்தால் கொட்டித்தீர்க்கும்

என்னிடமே கேட்கின்றாய்!

எந்தன் பதிலிதுதான்!

மரங்களை அழித்தீர்கள்!

மனங்களையும் பசுமையாக்கும் 

புல்வெளியைக் களைந்தீர்கள்!

சிறிதும் இடம்விடாமல்

சிமெண்டைப் பரப்பிவைத்து

மண்ணுடனே நானிணையும் 

மகிழ்வைக் கெடுத்தீர்கள்!

நான்பாயும் இடங்களிலே 

நகர்என்ற பெயரால் 

வீடுகளைக் கட்டிவைத்து 

என்விளையாட்டைத் தடுத்தீர்கள்!

இவையெல்லாம் செய்வோரை 

ஏனோ விட்டுவிட்டு 

அப்பாவி என்னிடந்தான் 

அடுக்குகின்றீர் கேள்விகளை!

மனிதர்களே நீங்கள் 

மகிழ்வாய் வாழ்ந்திடவே 

நானும் பிறப்பெடுத்தேன்

நாளும் உழலுகின்றேன்!

தப்பெல்லாம் செய்துவிட்டு

சங்கடங்கள் தலைதூக்கியதும்

என்னிடத்தில் பாய்வது 

ஏற்புடைத்தா சொல்லுங்கள்!

நானின்றி நீங்களில்லை

நன்கறிவேன் இதனையுந்தான்!

உங்கள் நடவடிக்கை 

உறுதியாய் மாறினால்

என்றும் துணையிருப்பேன்!

இயல்புக்குத் திரும்பிடுவேன்!

உங்கள் வாழ்க்கையை மாற்றும் "கசிவுத் தொட்டி கோட்பாடு"! 

அன்னையிடம் வேல் வாங்கியதும் வேலவர் திருமேனியில் வியர்க்கும் அதிசயம்!

எந்த புலவருக்கும் பரிசளிக்காத கருமி... அவ்வையார் பாடிய பாடல்!

Plato's Quotes: தத்துவஞானி பிளேட்டோவின் பொன்மொழிகள்!

சாதாரண பிரஷ் Vs. எலக்ட்ரிக் பிரஷ்: எது சிறந்தது? 

SCROLL FOR NEXT