அன்று காலை மணி 10 இருக்கும். வழக்கம் போல தூங்கி எழுந்து வெளியில் வந்த நித்யா, தனது வாசலில் இருந்த பால் பாக்கட்டுகள், செய்தித்தாள் இவற்றுடன் சேர்த்து கடிதம் ஒன்று வந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமாக அதையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே செல்கிறாள்.
நித்யா இரவு பணி முடித்து உறங்க வெகு நேரம் ஆகும் என்பதால் வழக்கமாக காலை 10 மணிக்கு மேல் தான் எழுவாள். விடுமுறை நாட்களில் மதியவேளை வரை கூட அந்த உறக்கம் நீள்வதுண்டு. இந்த கடிதம் என்னவென்று அவளுக்கு புரியவில்லை. யாரிடம் இருந்து வந்திருக்கிறது என்று பார்க்க கடிதத்தின் விடுவர் முகவரியை பார்த்தபோது, ராஜீவ் என்று மட்டும் இருந்தது. பெறுநர் என்ற இடத்தில் இவளின் பெயரும் முகவரியும் இருந்தது. கடிதத்தை பிரித்து படிக்க துவங்கினாள் நித்யா.
நித்யா,
நித்தமும் உனது நினைவில் உழலும் ராஜீவ் எழுதுவது. உன் நலம் ஒன்றை மட்டுமே எப்போதும் விரும்புகிறேன். தினமும் காலையில் கூவும் குயிலின் கணத்தில் உன் குரலோசை, அசைந்தாடும் அழகு மயிலின் நளினத்தில் உன் நடையின் சாயலின் சுவடுகள் மெதுவாய் நகரும் வெண் மேகங்களின் மென்மையில் உனது மேனியின் மென் தொடுதல், மரகத மாலையில் மல்லிகள் வாசத்தில் உன் கூந்தல் மணம் என நான். நாள்தோறும் காணும் அனைத்திலும் நீ மட்டுமே நிறைந்திருக்கிறாய்.
உன்னோடு இருக்கும் நெருக்கமான குறுகிய தருணங்களை விட உன்னைப் பிரிந்து நான் கடக்கும் இந்த நீண்ட நெடிய நாட்கள் தான் உன்னை நான் மிகவும் காதலிக்க எனக்கு கற்றுத்தருகின்றன. உன்னை நான் ஒவ்வொரு நொடியும் நினைக்க வைக்கின்றன. உன்னுடன் தான் நானும் இருக்கிறேன். கலங்காதே. காத்திரு...
பிரியமான காதலுடன்
உன் ராஜீவ்.
இந்த கடிதத்தின் வார்த்தைகளைப் படித்தவுடன் நித்தியாவிற்குள் ஏதோ ஒரு மயக்கம். இந்த காதல் கடிதம் இவ்வளவு கவிதைத்துவமாக யார் தனக்கு எழுதியது? யார் இந்த ராஜீவ் என்று அவள் யோசிக்க துவங்கிய நேரம் அவளின் வீட்டு கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
கதவை திறந்தவள் அவளின் எதிரில் நின்றிருந்த பெண்ணைப் பார்த்து "ஹேய் நித்யா, சொல்லுமா என்றாள்.
"அக்கா சாரி. இன்னிக்கு போஸ்ட்மேன் எனக்கு வந்த லெட்டர் உங்க வீட்டு வாசல்ல போட்டு போய்ட்டாரு. வீடு ஒரே Buildingல, அதுல எ, பி ன்னு இருக்கறத பாக்கல போல. 106 னு பாத்ததும் இங்க போட்டு போய் இருக்காரு அக்கா. லெட்டர் உங்க கிட்ட தானே இருக்கு?" என அவள் கேட்டாள்.
அவள் கேட்ட பிறகு தான் நித்யாவிற்கு புரிந்தது... 'ஆமால? இந்த பொண்ணு பேரும் நித்யாதான்னு நா எப்படி மறந்தேன்?' என மனதிற்குள் நினைத்தவள், "சோ சாரி நித்யா, நா எனக்கு வந்த லெட்டர்னு பிரிச்சிட்டேன், பட் படிக்கல அதுக்குள்ளே நல்ல வேள நீ வந்திட்ட... இரு.." என்று உள்ளே சென்று கடிதத்தை எடுத்து வந்து நித்யாவிடம் கொடுத்தாள்.
"ரொம்பதேங்க்ஸ் அக்கா, அவருக்கு லெட்டர்ஸ் எழுதுறது ரொம்ப புடிக்கும். அதான் இப்டி அடிக்கடி லெட்டர்ஸ்ல தான் நாங்க பேசிக்குவோம்" என்று புன்னகைத்தாள்.
"ம்ம்ம்ம் நடத்து நடத்து" என்றவளைப் பார்த்து வெட்கப் புன்னகையுடன் நகர்ந்தாள் நித்யா.
ராஜீவ் போன்ற ஆணை தன் வாழ்வில் ஏன் இன்னும் சந்திக்கவே இல்லை என்ற எண்ணம் நித்யாவிற்கு மட்டும் ஏனோ தோன்றிக்கொண்டே இருந்தது.....