மங்கையர் மலர்

தொடுகை!

ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி – 2022

வாசகர்கள்

கதை: லலிதா சங்கர், ஓவியம்: தமிழ்

பரிசுக்கதை – 11

நடுவர் பார்வையில்...

Good touch – bad touch பற்றிய கதை. கடைசியில் ஒரு twist உள்ளது

“ஏங்க!  நம்ம சுஜாக்குட்டியைப் பார்த்தா நம்ம கண்ணே பட்டுடும்போல இருக்கு இல்லேங்க?” 

“பின்ன இல்லையா?  என் பொண்ணு கொள்ளை அழகுடி.” 

“அது என்ன உங்க பொண்ணு? என் பொண்ணும்தான்.” 

“அம்மா! நாம எங்க போறோம்?” 

“சூரஜ்ஜோட பர்த்டே பார்ட்டிக்கு.” 

“ஐ! ஜாலி!”

 “சுஜா!  காலைலேர்ந்து இதோட எத்தனை தடவை இதே கேள்வியைக் கேப்ப?  ம்ம்ம்!” 

“மா! அங்க என்ன இருக்கும்?” 

“கேக் இருக்கும், ஸ்னாக்ஸ், ஜூஸ் எல்லாம் இருக்கும், அப்புறம் உனக்குப் பிடிச்ச டின்னர் எல்லாம் இருக்கும்.” 

“அப்புறம்?” 

“பாட்டு போட்டு டான்ஸ் ஆடுவாங்க. நீயும் ஆடறயா?” 

“ம்ம்ம்!”

அந்தப் பிரமாண்டமான நட்சத்திர ஹோட்டலில் பளீரென்ற விளக்குகளுக்கு நடுவே முகம் மலர்ந்தபடி சூரஜ், சுஜாவைப் பார்த்து ஓடோடி வந்தான். 

“சுஜா!  வா!  வா!  உனக்குத்தான் காத்துக்கிட்டிருக்கேன்…  கேக் கட் பண்ணலாமா?” 

கேக் கட் பண்ணும் வைபவம் இனிதே நடந்தது. 

அடுத்து டீ.ஜெ இசைக்கு ஏற்ப அனைவரின் நடனம் ஆரம்பம். 

“ஏங்க? அது யாருங்க? கூட்டத்துக்கு நடுவுல முரடன் மாதிரி ஒருத்தன் நின்னுக்கிட்டிருக்கான்? அவன் பார்வையே சரியில்லையே!” 

“ஆமாம்!  நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.  அவன் ஒருமாதிரித்தான் இருக்கான்.” 

“அவன் நம்ம சுஜாகிட்ட என்னவோ பேசறான் பாருங்க!”

“பாப்பா! உன் பேரென்ன?” 

“சுஜா!” 

“என் பேரு சுப்பிரமணி! ஹி ஹி...”

“மாடில அம்மாவையும் பாட்டியையும் பார்த்துட்டு வரணுங்க.  இவ வேற இப்போதான் மும்மரமா ஆடிக்கிட்டிருக்கா.” 

“அங்க உன் தம்பி இருக்கான் பாரு!  அவன்கிட்ட சொல்லிட்டு வா.  அவன் பார்த்துப்பான்.” 

“செல்வா! செல்வா!”

“என்னக்கா?” 

“நாங்க அம்மாவையும் பாட்டியையும் பார்த்துட்டு வர்றோம்.  அதுவரைக்கும் இந்த சுஜாவை ஜாக்கிரதையா பார்த்துக்கோ.” 

“சரிக்கா…”  

அரைமணிநேரம் கழித்து, 

“சுஜா!  சுஜா!  இங்க வா!” 

“அக்கா! எதுக்கு இப்போ குழந்தையைக் கூப்பிடற? அவ எப்பவாவதுதானே வர்றா?  கொஞ்ச நேரம் ஜாலியா இருக்கட்டும் விடு.” 

“குழந்தை சாப்பிட வேண்டாமா?” 

“அதெல்லாம் சூரஜ் கூட சேர்ந்து சாப்பிட்டுப்பா.” 

“பாப்பா!  அம்மா, அப்பா கூப்பிடறாங்க பாரு?  நீ போய்ட்டு வா கண்ணு.  அண்ணனுக்கு ஒரு முத்தா குடு பார்ப்போம்!” 

“யோவ்!  நீ யாருய்யா?  யாரு நீ?  என் பொண்ணுகிட்ட முத்தம் கேக்கற?” 

“மாமா!  நல்லா சொல்லுங்க.  இவன்  எங்கிருந்து வந்தான்னு தெரியலை.  இவனோட ஒரே ரோதனையா இருக்கு. குழந்தைங்களுக்கு நடுவுல லூசு மாதிரி இவன் நின்னுக்கிட்டு உசிரை வாங்கறான்.” 

“அதற்குள் எங்கிருந்தோ ஒரு பெண்மணி ஓடி வந்து.  அய்யா!  தப்பா நினைச்சுக்காதீங்க.  இது என் மவன்தான். குழந்தைங்கன்னா அவனுக்கு உசிரு.” 

“நீ யாரும்மா?”

“நான் இந்த ஹோட்டல்ல வேலை செய்யறேங்க.” 

“அவனுக்குக் குழந்தைங்க உசுருன்னா ஒரு கல்யாணத்தைப் பண்ணி குழந்தைங்களைப் பெத்துக்கச் சொல்லு. அத விட்டுட்டு ஊருல இருக்கற குழந்தைங்களை இவன் கொஞ்சறதை நாங்க வேடிக்கை பார்க்கணுமா?

காலங்கெட்ட காலத்துல எங்கக் குழந்தைங்ககிட்ட வம்பு பண்ணிக்கிட்டு…  கூட்டிக்கிட்டுப் போம்மா இவனை…”

“சரிங்க அய்யா! இவனை வீட்டுல பார்த்துக்க ஆள் இல்லன்னு இங்க கூட்டிக்கிட்டு வந்தேன். நீங்க மானேஜர்கிட்ட எதையும் போட்டுக்குடுத்துடாதீங்க சார்!  புண்ணியமாப்போகும்.” 

“சரிம்மா! முதல்ல இங்கேர்ந்து கிளம்பு.” 

“அக்கா!  நீ போய் இப்போ நிம்மதியா சாப்பிட்டுட்டு வா!  நான் குழந்தையைப் பார்த்துக்கறேன்.” 

“சுஜாக்குட்டி! நாங்க சாப்டாச்சு.  நீங்களும் சூரஜ்ஜோட சாப்டுட்டு சீக்கிரம் கிளம்புவீங்களாம். நேரமாச்சுல்ல?”

“ம்ம்ம்!”

எல்லாம் முடிந்து, சுஜாவுக்குப் பிடித்த அழகான பொம்மையை ரிட்டர்ன் கிப்ட்டாக வாங்கிக்கொண்டு காரில் திரும்பும் வழியில்,

“அந்த ஆளைப் பார்த்தீங்களா?  நல்லவேளை! நாம கண்குத்திப்பாம்பு மாதிரி பார்த்துக்கிட்டிருந்தோம். இல்லேன்னா அவன் நம்ம குழந்தையை என்ன பண்ணி இருப்பானோ! தப்பிச்சோம்.” 

“ஆமாம்! உங்க அண்ணனுக்கு அறிவு இல்லையா என்ன?  யார் யாரை உள்ள சேர்க்கணும்னு அவனுக்குத் தெரியவேண்டாமா?”

“சுஜா!  கண்ணு!  ஏம்மா உம்முன்னு வர? பயந்துட்டயா தங்கம்?” 

“ம்ம்ம்!”

“சொல்லும்மா!  அம்மாதான் உனக்கு குட் டச், பேட் டச் லாம் கத்துக்குடுத்துருக்கேன்ல?  அந்தமாதிரி ஏதாவது ஒண்ணு நடந்துச்சுன்னா கத்தி சொல்லிடு சரியா?”

“அம்மா!  எனக்கு கத்தணும்போல இருந்துச்சும்மா. ஆனா,  ரொம்ப பயம்மா இருந்துச்சு.” 

“அச்சச்சோ!  அப்படியா?  இதை ஏன் நீ அங்க வெச்சு சொல்லல?” 

“சொல்லணும்னுதான் நினச்சேன்.  நீங்கதான் அந்த அண்ணாவைத் திட்டிக்கிட்டு இருந்தீங்களே!” 

“உன்னை அவன் பேட் டச் பண்ணினது தெரிஞ்சிருந்தா திட்டினதோட அல்லாம அவனை போலீசில் பிடிச்சுக் குடுத்துருப்போம்.  நீ என்கிட்டே ஓடிவந்து சொல்லி இருந்திருக்கலாம்ல? இப்படி ஆகிப்போச்சே!” 

“யாரை போலீசில் பிடிச்சுக் குடுத்துருப்பீங்க?” 

“வேற யாரை? அந்த லூசுப்பயலைத்தான்.

“போம்மா!  அந்த அண்ணாதான் மாமாகிட்டேர்ந்து என்னைக் காப்பாத்திக்கிட்டிருந்தார்.  மாமாதான் என்னை பேட் டச் பண்ணினார்.  நீங்க அந்த அண்ணாவைத் துரத்திட்டு மாமாகிட்ட என்னை விட்டுட்டுப்போயிட்டிங்க. இந்த மாமா ரொம்ப மோசம். அம்மா!  இந்த மாமாவைப் போலீசில் பிடிச்சுக்குடுத்துடலாமா?  போலீசில் பிடிச்சு குடுத்து கம்பால அவரை அடி அடின்னு அடிக்கணும். அடிக்கலாமா?  ப்ளீஸ் மா!” 

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT