மங்கையர் மலர்

ஆயுளைக் கூட்டும் கல்சட்டி பயன்பாடு.

மகாலட்சுமி சுப்பிரமணியன்

ண்பாண்டங்களைப் போலவே அக்காலத்தில் கல்சட்டிகள் சமையலறையில் பெரிதும் பயன்படுத்தப் பட்டன. கல்சட்டிகள், பாத்திரங்கள் என இதன் பயன்பாடு நிறைய இருந்தது. இதன் மூலம் சமைக்கப்பட்ட உணவின் ருசி, ஆரோக்யம் என நம் வீட்டு பெரியோரைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.

மீண்டும் நம் அடுக்களையில் இடம் பிடிக்க ஆரம்பித்துள்ள கல் பாத்திரங்கள் பல நன்மைகளை கொண்டுள்ளன. கல்பாத்திரங்களில் தோசைக்கல், தயிர் சட்டி, குழம்பு சட்டி, பணியாரக்கல், என பல விதங்களில் உள்ளன.

சோப்புக் கல் என்று சொல்லப்படும் மாவுக் கல்லால் இந்தப் பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. மதுரை மற்றும் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான கல் பாத்திரங்கள் அனைத்தும் செய்யப்படுகின்றன.

கல் பாத்திரத்தை பழக்குவதற்கு சில நாட்கள் ஆகும். ஆனால் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் எளிதில் சமையல் செய்து விடுவதை உணர்வதோடு அதன் ருசியிலும் வித்தியாசத்தை அறிய முடியும்.

கல்பாத்திரங்கள் சூடாகி கொதி நிலை வந்ததும் அடுப்பை நிறுத்தி விடலாம். கல்பாத்திரத்திலேயே சூடு அதிக நேரம் இருக்கும் என்பதால் உணவு பதமாக வெந்து சாப்பிடும் வரை சூடாகவே இருக்கும்.

இதனால் எரிபொருள் மிச்சமாவதோடு சமையலையும் விரைவாக முடித்திடலாம். பொதுவாக கல் சட்டியில் சமைக்கும் உணவு, சமைத்த உணவு விரைவில் கெட்டுப் போவதில்லை. தயிரிலும் புளிப்பு ஏறுவதில்லை. கையாள்வதும் மிகவும் எளிது.

ல்சட்டி செய்வதற்கு பயன்படுத்தப்படும் கல்லில் மக்னீசியம் இருப்பதால், நேரடியாக உணவில் கலப்பதற்கு ஏதுவாகும். அலுமினிய, ஹிண்டாலிய பாத்திரத்தில் சமைக்கும் போது ஏற்படும் தீமைகள் இதில் வராது.

ஃப்ரிட்ஜ் பயன்பாடு வருவதற்கு முன் நம் இல்லங்களில் உணவை அதன் சுவை, சூடு மாறாமல் வைத்திருக்க உதவியது கல் பாத்திரங்களே.

கேஸ் அடுப்பில் சமைக்கும் போது கல் சட்டியில் உள்ள வெப்பம் காரணமாக உணவு விரைவில் தயாராவதோடு, சூடும் அதிக நேரம் இருக்கும் என்பதால் ஹாட் பாக்ஸ், ஃப்ரிட்ஜ் போன்றவை தேவைப்படாது.

இதில் சமையலின் அமிலத்தன்மையைக் குறைக்கும். செரிமானக் கோளாறுகளை சரிசெய்யும். சூட்டை நீண்ட நேரம் வைப்பதால் உணவு நேரமானால் தண்ணீர் விட்டுக் கொள்வது, கெட்டுப் போவது வாசனை மாறுவது போன்ற பிரச்னைகள் வராது. கிருமிகள் வளராது என்பதால் உடலுக்கு நன்மையைத் தரும். தாளிக்கும் போது நல்ல மணம் வரும். எல்லா வகையிலும் கல்சட்டி பயன்பாடு என்பது நம் ஆரோக்யத்திற்கு, ஆயுளைக் கூட்டுவதற்கு பெரிதும் உதவும்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT