நமது முதுகை உபயோகிக்காமல் நாம் செய்யக்கூடிய செயல்கள் மிகச் சிலவே எனலாம். நாம் நிற்கும்போது, நடக்கும்போது, உட்காரும்போது, குனியும்போது, எதையாவது தூக்கும்போது, விளையாடும்போது, ஏன் தூங்கும்போது கூட எல்லாச் செயல்களிலுமே நமது முதுகு மிகப் பெரும் பங்கு வகிக்கின்றது.
நமது தினசரி அலுவல்களில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்ற காரணத்தால் நமது உடலிலுள்ள மற்ற உறுப்புகளைவிட முதுகிற்குச் சேதம் ஏற்படும் வாய்ப்பு அதிகமே. நான்கில் மூவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் முதுகில் சேதம் ஏற்படுகிறது. அத்துடன் வலியும், இயலாமையும், தொந்தரவும் அவர்களுடைய வாழ்வின் சில பொழுதுகளிலாவது ஏற்படுகின்றது. மனிதரிடையே பரவலாகக் காணப்படும், நீண்ட நாட்கள் தொந்தரவு தரும் சிக்கல் மிகுந்த கோளாறுகளுள் கீழ் முதுகுவலியும் ஒன்று.
முதுகு வலிப் பிரச்னைகளை அனுபவித்தவர்களைக் கேட்பீர்களானால், அதைச் சரி செய்வதைவிட வராமலேயே தடுத்துவிடுவது எவ்வளவோ எளிய செயல் என்று எடுத்துக் கூறுவார்கள். இருந்தபோதிலும் நாம் நமது முதுகை ஆரோக்கியத்தோடு வைத்துக்கொள்ள ஒரு சில காரியங்களையும் செய்தல் வேண்டும்.
1. உட்காரும்போது, குனிந்தோ – கவிழ்ந்தோ உட்காரக் கூடாது. அது நமது முதுகுத் தண்டின் வளைவையும் அழத்தத்தையும் அதிகப்படுத்தும். நிற்கும்போது முதுகை நேராக வைத்திருக்க வேண்டும். வயிற்றை உள்ளிழுத்தவாறு நிற்க வேண்டும். நேராகச் செயல்படும் பழக்கத்தைப் பெருக்கிக்கொள்ள, தலைமீது சிறு சுமையை வைத்துக்கொண்டு நடக்கப் பழக வேண்டும்.
2. உறுதியான மெத்தையைப் படுக்கை விரித்து மல்லாந்தோ அல்லது ஒருக்களித்தோ படுக்க வேண்டும். மெத்தையின் கீழ் ஒரு பலகையை உபயோகிக்கலாம். படுக்கையை விட்டு எழும்போது கை,கால்களை மடக்காமல் நேராக எழுக் கூடாது.
3. நல்ல உறுதியான நாற்காலியில் முக்கியமாக கீழ் முதுகுக்கு ஆதாரமுள்ள நாற்காலியில் உட்கார வேண்டும். இடுப்பை விட முழங்கால் முட்டிகள் மேற்புறம் இருக்குமாறு உட்கார வேண்டும். முதுகை நிமிர்த்த அடிக்கடி எழ வேண்டும்.
4. பொருட்களை தூக்கும்போது, வேலையின் பெரும்பகுதியை கால்கள் செய்யும்படி விட வேண்டும். இடுப்பின் மேற்புறத்தை அதிகமாக வளைக்கக் கூடாது. குறிப்பாக தூக்கும் பொருள் கனமாக இருந்தால் இவ்வாறு செய்ய வேண்டும். முதுகை நேராக வைத்துப் பொருளை மேலே பற்றித் தூக்க வேண்டும்.
5. உயர்குதிகாலுள்ள செருப்புகளை அணிவதைத் தடுக்க வேண்டும். சமமான நிலையிலுள்ள தட்டையான செருப்புகளே நல்லது. இதனால் வேலையை எளிதாகச் செய்ய முடிவதுடன், எங்கும் வேகமாக இயங்க முடியும். நடையில் தடுமாற்றமோ சிரமமோ இருக்காது.
6. அளவிற்கு மீறிய உடல் எடை முதுகிற்குச் சுமையைத் தரும். எனவே உடல் எடையைச் சீராக வைத்திருக்க வேண்டும்.
7. முதுகுப் பகுதியிலுள்ள தசைகளைப் பலப்படுத்த தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.