Protection of girl child m.dinamalar.com
மங்கையர் மலர்

குழந்தை நல பாதுகாப்பு சட்டம் என்ன சொல்கிறது?

சேலம் சுபா

‘குழந்தைகள் நம் எதிர்காலம்’, ‘குழந்தைகள் நம் நாட்டின் வருங்காலத் தூண்கள்’, ‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’ என்றெல்லாம் நாம் குழந்தைகள் பற்றி பெருமையாக சொல்லி வருகிறோம். ஆனாலும் குடும்பப் பாதுகாப்பு உள்ள குழந்தைகளும் சரி; ஏதோ ஒரு சூழலில் ஆதரவற்ற நிலையில் வாழும் குழந்தைகளும் சரி; பல்வேறு பாதிப்புகளை சந்தித்தே வருகின்றனர்.
பாலியல் ரீதியாகவும் பல்வேறு முறைகளில் மனரீதியாகவும் பாதிக்கப்படும்  குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான சட்டங்கள் என்ன சொல்கின்றன? 

சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் கோ. கல்பனா சில குற்றங்கள் மற்றும் அதற்கான சட்டம் சார்ந்த தண்டனைகள் பற்றி இங்கே விளக்குகிறார். 

குழந்தைகள் தங்கள் குடும்பம் உறவுகள் மற்றும் சமூகம் மூலம் பாதுகாக்கப் படவேண்டும். விதிவிலக்காக குழந்தைகளுக்கு பாலியல்ரீதியாகவோ அல்லது வேறு வகைகளிலோ துன்பம் தருபவர்கள் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015கீழ் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

வழக்கறிஞர் கோ. கல்பனா

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 32/2012 எனும்  (protection of children from sexual offence act (32/2012) போக்சோ சட்டம் என்றால் என்ன?

18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசம் இன்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம்தான் போக்சோ சட்டம்.  இதில்  வயது வரம்பு 18ல் இருந்து 16 மற்றும் 12 என்று வகைப்படுத்தப்பட்டு  சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.  2012 ஆம் ஆண்டு முதல் சட்டம் செயல்பாட்டில் உள்ளது. 

பிரிவு  மூன்று மற்றும்  பிரிவு நான்கின்படி குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்கு  உட்படுத்துவது குற்றம் எனவும் அதற்கான  குறைந்தபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள். அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை எனவும், அத்துடன் அபராதமும் விதிக்கப்படுகிறது. 

குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல்துறை அதிகாரி என  யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கு குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் சிறையும்  அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் மற்றும்  அபராதமும்  தண்டனையாக வழங்கப்படுகிறது .

குழந்தைகளை போதைப்பொருள் வாங்க வைக்கிறார்களே? அதுவும் குற்றம்தானே? 

Protection of girl child

குழந்தை ஒன்றை மது குடிக்க வைத்தல் அல்லது போதை மருந்து உட்கொள்ள வைத்தல் அல்லது போதைப்பொருள் பயன்படுத்த செய்தலுக்கு கடுமையான தண்டனை உண்டு. 

பிரிவு 77,  78ன்படி இந்த சட்டங்கள் குழந்தையை மது, போதை மருந்து, போதை பொருள் விற்பனை செய்வதற்கு, சுற்றித்திரிந்து விற்பனை செய்வதற்கு, சுமந்து செல்வதற்கு, விநியோகிப்பதற்கு அல்லது கடத்தலுக்கு பயன்படுத்துதல் போன்ற செயலை எவர் ஒருவர் செய்கிறாரோ அவர் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்து தண்டிக்கப்படுவார். 

குடும்ப வன்முறையின் காரணமாக பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் சட்டம் உதவுமா?

நிச்சயம் உதவும். சமூகத்தில் மட்டுமல்ல; குடும்பத்திலும் பெற்றோர் மற்றும் உறவினரால் பாதிக்கப்பட்ட  குழந்தைகள் அவர்கள் மீது புகார் தரும்  பட்சத்தில்,  குழந்தைகளுக்கு எதிரான மற்றைய குற்றங்களின் கீழ் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2015ஐ  பயன்படுத்தலாம்.

தவறான வழியில் சென்று சட்டத்துடன் முரண்படும் குழந்தைகள் குறித்து?

குழந்தைகள் என்றுமே தவறான வழிக்கு செல்வதில்லை. சூழல்களால் சில குழந்தைகள் சட்டத்துடன் முரண்படலாம். இப்படிப்பட்ட குழந்தைகளை கைது செய்தல்  பற்றி பிரிவு 10ல்  விதிமுறைகள் உள்ளன. சட்டத்துடன் முரண்படும் குழந்தைகளை காவல் துறையினர் கைது செய்து அவர்களை சிறப்பு சிறுவர் நீதி காவல் மையத்தின்  பொறுப்பில்  அல்லது பெயர் குறிப்பிடபட்ட குழந்தை நல காவல் அலுவலரின்  பொறுப்பில் ஒப்படைத்தல் வேண்டும். கைது செய்த நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் பிரிவு 27இன்படி குழந்தைகள் நலக் கமிட்டியால் ஏற்படுத்தப்பட்ட குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இன்னும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைப்படும் குழந்தைகள் தொடர்பான  விதிமுறைகளும் உண்டு.

குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி சட்டம்  என்ன சொல்கிறது?

குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் பிரிவு 79 குழந்தைத் தொழிலாளியை சுரண்டுதல் பற்றி சொல்கிறது. தனது சம்பாத்தியத்துக்கு அல்லது அத்தகைய சம்பாத்தியத்தை ஈட்டுவதற்கு குழந்தை ஒன்றை யார் ஒருவர் வெளிப்படையாக வேலைக்கு அமர்த்துகிறாறோ அல்லது தம்மிடத்தில் இருத்தி வைத்துக்கொள்கிறாரோ அவர் 5 ஆண்டுகள் வரை கடுஞ்சிறைத் தண்டனையும் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்.

இன்னும் இதுபோன்ற பல சட்ட விதிமுறைகள் குழந்தைகள் பாதுகாப்புக்காக உள்ளது. இவைகளை மக்கள் அறிந்துகொண்டு பயன் பெற வேண்டும்.     

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT