Soul
Soul 
மங்கையர் மலர்

இறுதி வரை வரப்போவது யார்?

தா.சரவணா

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.

அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல் மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன் மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.

ஒருநாள் அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.

தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.

அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ "நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும், "என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது" என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான்.

அவன் வருந்தினான். "நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன்" என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான். இது தான் வாழ்க்கை. . .

(படித்ததில் பிடித்தது)

The Color Code: A Child’s Perspective on Pink and Blue!

குடும்பத்தின் மகிழ்ச்சியில் பெண்களின் அளப்பரிய பங்கு!

‘A Silent Voice’ – that talks about friendship and forgiveness!

சோளக்கொல்லை பொம்மைகளின் சுவாரஸ்ய வரலாறு தெரியுமா?

தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றித் தெரியும்! 'தில்லானா' என்றால் என்னவென்று தெரியுமா?

SCROLL FOR NEXT