Drishti pottu Img Credit: Sigaram News
மங்கையர் மலர்

குழந்தைகளுக்குத் திருஷ்டிப் பொட்டு கருப்பு நிறத்தில் வைப்பது ஏன்?

தேனி மு.சுப்பிரமணி

சின்னக் குழந்தைகளுக்குக் கண்ணேறு (திருஷ்டி) பட்டுவிடக்கூடாது என்பதற்காகக் குழந்தையின் நெற்றியிலும், இரு கன்னங்களிலும் பெரிய அளவிலான கருப்பு நிறப் (திருஷ்டிப்) பொட்டு வைக்கும் வழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இந்தத் திருஷ்டிப் பொட்டு ஏன் கருப்பு நிறத்தில் வைக்கப்பட வேண்டும்? குழந்தைகள் கருப்பு நிறப் பொட்டு வைத்த பின்பும், அழகாகத்தானே இருக்கின்றன. அந்த அழகு கண்ணேறு (திருஷ்டி) படாதா? என்கிற கேள்விகளுடன் பெங்களூர், கித்வாய் நினைவு புற்றுநோய் நிலையத்தின் தன்னார்வ நோய்த் தணிப்புக் கண்காணிப்பாளரும், மேனாள் வேதியியல் துறைப் பேராசிரியரும், கரித்தூள் சிகிச்சை வல்லுநருமான முனைவர் சீ.வத்சலா அவர்களைத் தொடர்பு கொண்ட போது,

Dr. C.Vatsala

"முன்பு, அரிசி அல்லது ஜவ்வரிசியை வாணலியில் போட்டுக் கரியாக வதக்கி, அதனைக் கூழாகக் காய்ச்சி, தேங்காய் சிரட்டையில் (கொட்டாங்குச்சி) ஊற்றிக் காய வைத்து, அதனைக் கருப்பு நிறப் பொட்டுக்கான சாந்தாகப் பயன்படுத்தி வந்தனர். வணிக நிறுவனங்கள் கருப்பு நிறச் சாந்தைத் தயாரித்துச் சந்தைப்படுத்திய பின்பு, வீட்டில் கருப்பு நிறச் சாந்து தயாரிக்கும் வழக்கம் நின்று போய்விட்டது.

கருப்பு நிறப் பொட்டுகளுக்கான சாந்து தயாரிப்பில் பெருமளவில் கரித்தூள் சேர்க்கப்படுகின்றன. இந்தக் கரித்தூளுக்கு மாசுகளை ஈர்க்கும் சக்தி உண்டு. காற்றில் கலந்து வரும் மாசுகளிலிருந்து குழந்தைகளை இந்தக் கருப்பு நிறச் சாந்துப் பொட்டுகள் காக்கின்றன. குழந்தைகளுக்குக் கருப்பு நிறத்திலான சாந்துப் பொட்டுதான் வைக்க வேண்டுமே தவிர, கருப்பு நிற ஒட்டுப் (ஸ்டிக்கர்) பொட்டுகளை வைப்பதில் எந்தப் பயனுமில்லை.

கரித்தூள் என்று நாம் சாதாரணமாக நினைத்து அதனை ஒதுக்கி விட முடியாது. நமக்கு இந்தக் கரித்தூள் பல்வேறு பயன்களைத் தருவதாக அமைந்திருக்கிறது.

வசம்புவை (கிராமப்பகுதிகளில் இதனைப் பேர் சொல்லாதது என்பார்கள்) விளக்குச் சுடரில் கரித்து, அதனைத் தரையில் (அதற்கான கல்லில்) தேய்த்துக் கிடைக்கும் கரித்தூளைக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுக்கும் வழக்கம் முன்பு இருந்தது. இதன் மூலம் குழந்தைக்கு செரிமானம் ஆகாத நிலை மாறும். தொடர்ந்து அழுது கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இந்தக் கரித்தூளை ஆமணக்கு எண்ணெய்யில் கலந்து குழந்தையின் தொப்புளைச் சுற்றிப் போட்டால், சிறிது நேரத்தில் குழந்தை அழுவதை நிறுத்திவிடும்.

மதுவைக் குடித்துவிட்டுக் குடிபோதையிலிருப்பவர்களுக்கு ரொட்டித்துண்டைக் கரித்துக் கொடுப்பார்கள். இந்தக் கரித்தூள் அவர்களுக்குள் சென்ற பின்பு, அவருடைய போதை சிறிது சிறிதாகக் குறைந்து போய்விடும்.

எண்ணெய்ப் பலகாரங்களை அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு அவதிப்படுபவர்களுக்கு, அதேப் பலகாரத்தைக் கருகலாக்கிக் கொடுத்தால் அவருக்குச் செரிமானம் ஆகிவிடும்.

வீட்டில் பெண்கள் தோசையைச் சிறிது கருகலாகச் சுட்டுக் கொடுத்து விட்டால், அவர்களுடன் சண்டை போடாதீர்கள். அந்தத் தோசையிலுள்ள கரித்தூள்கள் தங்கள் உடலுக்கு நல்லதையேச் செய்யும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

முன்பெல்லாம், அசைவ உணவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது, அந்த உணவுப் பையில் சிறிய கரித்துண்டைப் போட்டு எடுத்துச் செல்வதுண்டு. இதற்குப் பேய், பிசாசுகள் அதனைச் சாப்பிட்டுவிடும் என்பது காரணமில்லை. அசைவ உணவிலிருந்து வெளியேறும் மணத்தை அந்தப் பையில் போட்டிருக்கும் கரித்துண்டுகள் ஈர்த்துக் கொண்டுவிடும். அதனால், அசைவ உணவின் மணம் அந்தப் பையை விட்டு வெளியேறாது. பயணத்தில் விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக அந்த உணவைக் கொண்டு செல்ல முடியும் என்பதுதான் உண்மையான காரணம்.

இதே அடிப்படையில், குளிர் சாதனப் பெட்டியில் சில கரித்துண்டுகளைப் போட்டு வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வரும் துர்நாற்றத்தைக் கரித்துண்டு ஈர்த்துக் கொள்ளும்.

முந்தையக் காலத்தில் திருட்டுத் தொழில் செய்பவர்கள், கரித்தூளை ஆமணக்கு எண்ணெய்யில் குழைத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டு திருடச் செல்வார்கள். இதற்கு இரவு வேளையில், கருமை நிறம் வெளியில் தெரியாது என்றும், வீட்டிலிருப்பவர்கள் திருடர்களைப் பிடித்துவிட்டால், அவர்களிடமிருந்து நழுவிச் செல்ல ஆமணக்கு எண்ணெய் உதவும் என்றும் சொல்வார்கள். இது மட்டும் காரணமில்லை, உடலில் பூசிய கரித்தூள் உடலிலிருந்து வெளியேறும் வாசனை முழுவதையும் ஈர்த்துக் கொண்டுவிடும். இதனால், சிறப்புப் பயிற்சி பெற்ற காவல்துறை மோப்ப நாய்கள் எதையும் கண்டுபிடிக்க இயலாது என்பதுதான் முதன்மைக் காரணம்.

நிறங்களை அகற்றும் பண்பு கரித்தூளுக்கு உண்டு, இதனை அடிப்படையாகக் கொண்டே, நம் முன்னோர்கள் கரித்தூள் கொண்டு பல் துலக்கி வந்தனர். தற்போது கூட, பற்பசை நிறுவனங்கள் பற்பசை கரித்தூள் கலந்து செய்யப்பட்டதாக விளம்பரப்படுத்திக் கொள்வதைக் கவனிக்கலாம்.

பருத்தித் துணிகளைக் கரியாக்கி, அதனை எண்ணெய்யில் கலந்து, வண்டிச் சக்கரங்களுக்குப் போடுவார்கள். கரித்தூளுக்கு நழுவிக் கொடுக்கும் தன்மை (Lubricant) உண்டு. திடீரென்று உடலில் காயம்படும் போது, வண்டிச் சக்கரத்திலுள்ள கரியை எடுத்துப் போட்டுக் கொள்வார்கள். அதிலிருக்கும் கரித்தூள் காயத்தை ஆற்றிவிடும். இந்த வண்டிச்சக்கரத்திலிருக்கும் கரித்தூள் முகப்பருக்களை அழிக்கும் தன்மையுடையது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

பென்சில்களில் கிராபைட் எனும் கரித்தூள் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பைகளில் மாட்டியிருக்கும் ஜிப் (Zip) நகர மறுக்கும் நிலையில் பென்சில் கரியால் ஜிப்பின் இரு புறமும் தேய்த்துவிட்டால் ஜிப் எளிதாக நகர்ந்துவிடும்.

மின் விபத்துகளிலிருந்து பாதுகாப்புக்கான நில இணைப்புக் (Earthing Pit) குழிகளில் மின்சாரத்தை எளிதில் கடத்துவதற்காகக் கரித்தூள் நிரப்புவதுண்டு.

கிராமங்களில் கிணற்று நீரைச் சுத்தம் செய்வதற்காக, தேங்காய்ச் சிரட்டைகளை (கொட்டாங்குச்சி) எரித்துக் கரியாக்கி உள்ளே போடும் வழக்கம் இருக்கிறது.

திருவனந்தபுரம் அரண்மனையில் தரைக்குத் தேங்காய்ச் சிரட்டைகளை (கொட்டாங்குச்சி) எரித்துக் கரியாக்கி, அதனைக் கொண்டு மேற்பூச்சு செய்திருப்பார்கள். அந்த அறையிலிருக்கும் வெப்பத்தைக் கரித்தூள் ஈர்த்துக் கொண்டு அறையினைக் குளிர்ச்சியாக வைத்திருக்கப் பயன்படுத்தியிருப்பதைக் கவனிக்கலாம்.

கண் மை, கண் மையிடும் பென்சில் போன்றவை மிக நுண்ணிய கரித்தூள்களால் செய்யப்பட்டவை. இவை கண்களில் எரிச்சலில்லாமல் குளிர்ச்சியாக இருக்க உதவுகின்றன.

தற்கொலைக்காக விசமருந்தியவர் சுயநினைவுடன் இருந்தால், நுண்ணிய கரித்தூளை நீரில் கலந்து கொடுக்கலாம். மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் விசமருந்தியவர்களுக்கு கரித்தூள் கலந்த நீர் கொடுப்பது தற்போதும் வழக்கத்திலிருக்கிறது. விசக்கடி ஏதாவது ஏற்பட்டால், கடிவாயில் நுண்ணிய கரித்தூளை அழுத்தி வைத்திருந்தால், விச முறிவு ஏற்பட்டு பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் குறைப்பதில் கரித்தூளின் பங்கு அதிகம்.

கரித்தூள் பயன்களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். கரித்தூள்தானே என்று நாம் ஏளனமாகப் பார்க்க வேண்டியதில்லை. கருப்புக்கும் மதிப்புண்டு என்பதைக் கரித்தூளின் பயன்களைக் கொண்டே நாம் முடிவு செய்துவிடலாம்"

என்று பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT