உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது. தாஜ்ஹாலைப் பார்க்க தினம்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு வீட்டு வரி செலுத்தாத காரணத்திற்காக தாஜ்மஹாலுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது, தாஜ்மஹாலுக்கான வீட்டுவரி 88 ஆயிரத்து 784 ரூபாயும், அபராத தொகையும் சேர்த்து 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என ஆக்ரா நகராட்சி நிர்வாகம் இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது, “தாஜ்மஹாலுக்கான வீட்டு வரி முறையாக ஏற்கனவே செலுத்தி விட்டோம். இந்த வரியை வசூலிக்கும் உரிமையை சாய் கட்டுமானம் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஆக்ரா நகராட்சி வழங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் அந்த தனியார் நிறுவனம் செயற்கைக்கோள் படங்கள் மேப்பிங் மூலம் தவறுதலாக வீட்டு வரி ரசீது அனுப்பியதாக தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம்” என தெரிவித்தனர்.