சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்து வரும் 9ம் கட்ட அகழாய்வில் தங்க ஆபரணம், காளை உருவ பொம்மை கண்டறியப்பட்டுள்ளன.
கீழடியில் தொல்லியல் துறையினரால் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. சிந்து சமவெளிக்கு நிகராக கீழடி வைகை நாகரிகம் விளங்கி இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதன் காரணமாக கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன. கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. 9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், 4 குழிகளில் ஒழுங்கற்ற தரைதளங்கள் வெளிப்பட்டன. மற்ற இடங்களில் காது குத்தும் கம்பி போன்ற ஆபரணம், சுடுமண்ணால் செய்யப்பட்ட காளை உருவம், விலங்கு உருவ பொம்மை, செப்பு கம்பி, கண்ணாடி மணிகள், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. இதுவரை கீழடியில் 183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொந்தகை தளத்தில் 17 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
9-ம் கட்ட அகழாய்வு பணியில் பானை ஓடுகள், எலும்பு மற்றும் கரி மாதிரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.