‘நடிகர் ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன்’ எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டு, அதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ‘ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் போலியாக ஒரு பேஸ்புக் முகவரி தொடங்கப்பட்டு, அதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை பொதுமக்களிடம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை காவல் ஆணையரகத்தில், ‘ரஜினி ஃபவுண்டேஷன்’ அறங்காவலராகச் செயல்பட்டு வரும் சிவராமகிருஷ்ணன் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அந்தப் புகார் மனுவில், ‘ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் போலி பேஸ்புக் ஐடி ஒன்றை உருவாக்கி, அதில் 200 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, பரிசு வழங்குவதாகக் கூறி, 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மோசடி நடைபெற்று இருப்பதாகப் புகார் வந்துள்ளது. இது பிரபல நடிகர் ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடிய வகையில் உள்ளது’ என்று கூறி கமிஷனர் அலுவலகத்தில் இவர் புகார் தெரிவித்து இருக்கிறார்.
‘இந்த நூதன மோசடி குறித்து, காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் மிகப்பெரும் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் பற்றிய விவரங்கள் தெரியவரும் எனவும் கூறி உள்ளனர். மேலும், இந்த மோசடி எந்தப் பகுதியில் நடைபெற்றது என்பது குறித்து, பணத்தை இழந்தவர்களிடம் விசாரணை நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க உரிய நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.